Showing posts with label என் தேசம். Show all posts
Showing posts with label என் தேசம். Show all posts

Tuesday, 22 October 2013

சமூக பிரக்ஞை


       சாலையில் நடந்து செல்கையில் பார்த்து நிதானமாக அடியெடுத்து நடந்து செல்லுங்கள்..ஏனெனில் நீங்கள் தடுக்கி விழுகையில் உங்களை கைதூக்கிவிட வருபவர்களை காட்டிலும் உங்கள் பொருளை களவாடவும் உங்களை வைத்து பணம் பார்க்கவும் சனங்கள் வரக்கூடும்.இதுதான் நாம் வாழும் நிகழ்காலம்.

      ஆம்.இது நிதர்சனம்..இன்று எல்லாமும் சந்தை பொருளாதாரத்தின் அளவீடு ஆகிவிட்டது. நீங்கள் விழுகையில் அதுவும் கூட வியாபாரமாக்கப்படும்.

      நல்ல வேட்பாளர் நான்கு பேர் இருந்தும் மிகப்பிரபலமான ஒருத்தரை மட்டுமே நம் வாக்காளன் தேர்ந்தெடுக்கிறான்.இங்கும் மிக்சி, டிவி, பிரிட்ஜ் வாங்கும் விளம்பர யுக்திதான் நம் புத்திக்குள் வருகிறது.

     மெட்ரோ நகரங்களில் 100 சதவிகிதம் மக்கள் அலைபேசி வைத்திருக்கையில் அவர்களுடைய அலைபேசியில் ஒரு குருந்தகவல் வரும். “ஊழலுக்கு எதிரான போர்..ஆரம்பம்... புறப்படுங்கள்... என்று. உடனே 10 பேருக்கு அதனை அனுப்பிவிட்டு நம் காரியத்தில் கண்ணாய் இருப்போம்.அதிலும்கூட குருந்தகவல் இலவசம் என்றால் மட்டுமெ அதுவும் சாத்தியம்,

      இந்த அளவில்தான் நமது ஊழலுக்கான போராட்டமும், கொண்டாட்டமும் இருக்கிறது. இதுவும் சந்தைப்படுத்துதலின் வெளிப்பாடே.
    
      ஆக! இது சமூகத்தின் ஒரு நயமான, நாகரீகமான, நேர்மைகொண்ட சமுதாயமாக மாற்றுமா? என்றால்..இல்லை. இந்தியா போன்ற பல நிறங்கள் பொருந்திய நாட்டில் ஊழலுக்கான காறணிகள் பலவகைப்பட்டது. பணம் கொடுக்கல், வாங்கல் மட்டுமே ஊழலின் நடைமுறை அல்ல.சாதி பார்த்து, மதம் பார்த்து, சொந்த ஊர் பார்த்தும் கூட சில பல வேலைகள் சுமுகமாக நடைபெறுகின்ற மாறுபட்ட நம் இந்திய சமூகத்தில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றது. இராணுவ பலத்தின் மூலமாகவோ, அணுகுண்டுகளை வெடித்தோ நம் முன்னேற்றம் ஏற்பட போவதில்லை. மிகப் பிரபலமான வல்லரசு கோட்பாடு நமக்கு தேவைப்படாது.ஏனெனில் வல்லரசு பெரியண்ணன் அமெரிக்காவின் கதை நாம் அறிந்ததே!

       அதிகாரத்தை குறிப்பிட்ட ஒரு சாரார் பெறுவதற்கு அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் வெறும் பார்வையாளனாகவே கொண்டுள்ள நம் ஜனநாயக முறையில் ஒரு சிறு மாற்றமாய், மக்கள் பங்கு பெரும் ஜனநாயகமாய் நம் இந்தியா மாற வேண்டும். பிற்பாடு அது வல்லரசை மிஞ்சும் நல்லரசாக வளர்ச்சி பெறும்.

        பள்ளிக்கல்வியில் இருந்தே சமூகம் சார்ந்த அக்கறை கற்றுத்தரப்பட வேண்டும், செயல் பாடுகளின் மூலமாக. ஒப்புக்கு தெருவையும், பள்ளியையும் சுத்தப்படுத்தாமல் அரசு அலுவலகங்கள், காவல்துறை, நீதித்துறை, போக்குவரத்து துறை ஏதேனும் ஒன்றில் மாதமொருமுறை சென்று எழுத்து வேலை, ஆவணங்கள் சரிபார்க்கும் முறை போன்ற வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். இது ஊராட்சியில் தொடங்கி நகர்மன்றம், பொதுத்துறை, சட்டமன்றம் என்று அணைத்து மட்டத்திலும் மாணவர்கள் மூலம் சில காரியங்களை, வேலைகளை அரசு செய்து முடித்தல் வேண்டும்.

       இதன்மூலம் ஒவ்வொரு மாணவனும் அரசு அலுவல் என்றால் என்ன?
அதன் அதிகாரம் என்ன? அதன் பொறுப்பு என்ன? யாருக்காக இது இயங்குகிறது போன்ற விவரங்களை தெரிந்துகொள்வான். இந்த அனுபவம் பெற்ற மாணவ சமுதாயம் பிற்காலத்தில் அரசின் ஒவ்வொரு நடவடிக்கை பற்றியும் விமர்சனம் செய்யவும், தானே முன்வந்து போராடவும் ஒரு கற்பித்தலை கொண்டு செயல்படும் மக்களை பெற்றுத்தரும்.அரசுக்கும் வேளைகளை விரைந்து முடிக்க ஒரு செலவில்லா திட்டமாகவும் கூட இது அமையும்.

      மிகப்பெரும்பாண்மையான மக்கள் தொகை கொண்ட இந்திய பெரும் சமூகத்தில் காவல்துறை என்பது மிக பலம் பொருந்திய, அதிகாரம் கொண்ட அமைப்பாக கருதப்படுகிறது.காவல்துறையை இரண்டாக பிரித்தால் நிறைய சங்கடங்களை தவிர்க்கலாம்.

1. குற்றம் நடந்து முடிந்தபின் விசாரணை மேற்கொள்ளும் தனி அந்தஸ்து பெற்ற ஒரு துறையாகவும்,
2. குற்றம் நிகழாதவாறு தடுக்கிற, பாதுகாப்பு அளிக்கிற, பொது மற்றும் தனியார் சொத்து சேதம் ஏற்படாது காக்கும் இன்னொரு துறையாகவும் பிரிக்கபடவேண்டும்.

      காவல்துறையின் ஒவ்வொரு அங்கத்திலும் மேற்சொன்ன இரண்டு அடுக்கு அவசியம். இதன் மூலம் காவல்துறையை கண்டு குற்றம் செய்த குற்றவாளி மட்டும் பயம் கொள்வதற்கும், குற்றம் செய்யாத பொதுசனம் தாராளமாக முன்வந்து ஒத்துழைப்பதற்கும் வழிவகுக்கும்.

      சாட்சிகள் பிறழ்வதும், அவர்களை காப்பாற்ற அரசு திண்டாடுவதும் தெரிந்த ஒன்றே.சாட்சிகளுக்கான பாதுகாப்பு சட்டம் வழுவற்று உள்ளது.அதனை மாற்றினால் காட்சிகளும் மாறும். நிறைய குற்றங்களும் குறையும். அதற்கு இந்த அணுகுமுறை பயன்படும்.

     அடியிலிருந்தும், சமுதாயத்தின் அங்கமான ஒவ்வொரு மனிதனின் அடிமனதிலிருந்தும் மாற்றம் வருவதற்கு மேற்சொன்ன இரண்டும் மிக அவசியம்.இதன் மூலம் ஒரு ஒழுங்குமுறையை நாம் இன்னும் 10 வருடங்களில் கொண்டு வரலாம்.கடந்த 60 வருடங்களை எண்ணி வருந்தாது வரப்போகும் 10 வருடங்களில் பொறுப்போடு ஒவ்வொறு குடிமகனும்/ளும் செயல்படவேண்டும்.

     இது வேரிலிருந்து ஆரம்பமானால் மட்டுமே சாத்தியம். மேலும் வேருக்கான நீராக மக்களின் பங்களிப்பு மிக அவசியம்! மாற்றத்தை கொண்டு வர!.