Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

Monday, 4 November 2013

சலித்துபோன நாத்திகம்

நம் சமூகத்தின் பெரும் நோய் சலிப்படைதலும், மறத்தலும். ’பகுத்தறிவு’ , ’நாத்திகம்’ போன்றவையெல்லாம் பழைய சொல்லாடல்கள் ஆகிவிட்டன. ’நாத்திகம்’ என்ற சொல்லாடலை “நாஸ்தி” என்ற புரிதலோடுதான் அர்த்தப்படுத்தி கொள்கிறான் சாமான்யன். இச்சொல்லாடல்கள் ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்துபோனது. இப்போது அது பழகிப்போய் சலிப்பாகவும், எரிச்சலாகவும் ஆகியிருக்கிறது.

’ஆன்மீகம்’ அப்படியில்லை. மிகத்திறமையாக ஆன்மீகத்திற்கு புதுத்தலைப்பிட்டு மெய்ஞானம், மெய்யறிவு, வாழும் கலை, உயிர் தேடல், யோகம் என்றெல்லாம் மாற்றிப்போட்டு ஆன்மீகத்தை வளர்க்கின்றனர் சாமியார்கள். இச்சொல்லாடல்களை பிரபலப் படுத்த பிரச்சார கருவியாக அமிர்த யோகம், கிருஷ்ண விழிப்புணர்வு, நித்ய தர்மம், இயேசு நேசிக்கிறார்/ விடுவிக்கிறார் என்றெல்லாம் புரட்டிப்போட்டு விழாக்களும், பட்டறைகளும் வேறு.

உண்மையில் ’மெய்யறிவு’, ’மெய்ஞானம்’ எல்லாம் பகுத்தறிவாளர்கள் உபயோகப்படுத்தியிருக்க வேண்டிய வார்த்தைகள். மிகத் தெளிவாக ஆன்மீகச் சாமியார்கள் அதனை தமதாக்கி கொண்டனர்.

புதிய தலைப்புகளோடு, புதிய சொல்லாடல்கள் சலிப்படைதலை நோயென கொண்டுள்ள சமூகத்திற்கு மிகவும் அவசியம். நாத்திகத்திற்கு மாற்று வார்த்தையும் புதிய சொல்லாடல்களும் மிக மிக அவசியம்.

மத விழாக்கள்

மதங்கள் யதார்த்த உலகின் மனிதனை முக்கியப்படுத்தாமல், கற்பனாவாதத்தின் கதாபாத்திரங்களை முன்னிலைபடுத்துவதால், இன்றைய முன்னேற்றம், மாற்றத்திற்கு எதிராக இருப்பதால் அனைத்து மதங்களும் மனிதனுக்கு எதிரியே.

ஆனாலும் மதங்கள் தத்தமது பிரச்சார வழமையாக கொண்ட கொண்டாட்டங்கள். திருவிழாக்கள் மூலமாக பகுத்தறிவு கொண்டோரையும் சில நேரம் தம் பக்கம் இழுத்துவிடுகிறது. 

மார்க்ஸ் சொன்னது போல மதம் அபின் போல. அது தன் வேலையை சரியாக செய்கிறது. இழுக்கிறது போதை. அழைக்கிறது கொண்டாட்டம்.

பகுத்தறிவு உள்ளோர் மனதளவில் இத்திருவிழாக்களை வெறுத்தாலும், ஊரோடு சேர்கிற கொண்டாட்ட மனநிலையில் தாமும் அம்மதத்தின் பிரச்சார கருவியாக மாறிவிடுகிறார். அதன் வெளிப்பாடுதான் அதற்கு வாழ்த்து சொல்வது.

நமக்கு எல்லா மதமும் சம்மதமில்லை என்று ஆனவுடன், மதத்தால் நன்மை இல்லை என்றானவுடன் ஆட்டுப் புழுக்கையில் முன் புழுக்கை என்ன, பின் புழுக்கை என்ன? கடவுளர் சாயம் பூசப்பட்ட அனைத்து மத விழாக்களும் அறிவுக்கு அப்பாற்பட்டவையே! அவ்விழாக்களுக்கு வாழ்த்துக்கள் பகிர்வதும் மடமையே!



Monday, 21 October 2013

பகுத்தறிவு பிளேடு

பகுத்தறிவு என்பது ப்ளேடால் பென்சில் சீவுவது போல...... நம் திறமையும் அறிவும் இணைந்து செயல்பட்டு நோக்கம் கூர்மையாகும். முனை உடைந்தாலும் தவறு நமதென்று உறுதியாகும்.

ஆன்மீகம் என்பது ஷார்ப்பனர் கொண்டு பென்சில் சீவுவது போல..... பென்சில் கூர்படுமா, முனை உடைபடுமா என்று யூகிக்கக் கூட முடியாது.உடைந்தாலும் சுலபமாய் ஷார்ப்பனரை குறை கூறி விடலாம்.