Thursday 11 July 2013

திட்டம், பெரிய திட்டம், வைகோ-வின் கனவுத்திட்டம்

வைகோவையும் மதிமுகவையும் உற்று நோக்குகையில் அவர் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகள் அதன் அரசியல் நோக்கத்தை மிகச் சுலபமாக நமக்கு புலப்படுத்துகிறது. பலமுறை அடிவாங்கியும், அவமானப்பட்டும், குத்துப்பட்டும், தன் சொந்த கட்சி குதறப்பட்டும் கூட வைகோ ஏன் அதிமுக தலைவியை ஆரத் தழுவி அன்பு செய்கிறார், ஆதரிக்கிறார் எனில் அதில் சில அர்த்தம் பொதிந்த, லாபகரமான, ஆதாயம் மிகுந்த உண்மை இருக்கிறது.

திமுக போன்ற கிளைகள் விரிந்த, ஒவ்வொரு கிளையும் ஒரு தலைவராய் இருக்கிற  கட்சியில் தன்னை இருத்திக்கொள்ளுதலோ, சேர்ந்து பயணிப்பதோ வைகோ போன்ற ஜாம்பவானை பத்தோடு பதினொன்றாய் ஆக்கி அமுக்கிவிடும். அவருக்கான முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிடும். அன்றும், இன்றும் திமுக-வில் தலைமைக்கு தகுதியான நபர்கள் பலபேர் இருப்பது உண்டு. அந்த பலபேர் சேர்ந்து ஒப்புகொள்ளும் தலைவராக ஒருத்தர் வருவதும் திமுக-வில் உண்டு. இந்த போட்டியில் பங்குபெற விரும்பாமல் தனித்தே தலைவராகும் எண்ணத்தில்தான் வைகோ அன்று தனிக்கட்சி கண்டார். மதிமுக அமைந்ததற்கான காரண காரியங்களில் இது தலையாயதாகும். இன்று கால வெள்ளத்தில் அக்கட்சி தேய்ந்து தனது அடையாளங்களை வென்றெடுக்க முடியாது போன நேரத்தில் வைகோவின் எண்ணம் வேறுபடுகிறது.

வைகோ-வின் திட்டம் மிகச் சுலபமானது, கொஞ்சம் சுயநலமானது. அவருடைய அரசியல் வாழ்வாதாரத்திற்கு அதிமுக தலைமையை வெறுமனே ஆதரிக்கவேண்டிய கட்டாயத்திலும் அவசியத்திலும் உள்ளார் என்பதோடு இல்லாமல், இவ்வாறு செய்வதை நீண்ட கால திட்டமாக அவர் தமக்காகவும், தம் கட்சிக்காகவும் செய்து வருகிறார். 

என்ன திட்டம்அவர் மறைமுகமாக அதிமுகவை ஆதரிப்பதா?....  அதுதான் இல்லை.
அவருடைய மறைமுக ஆதரவு அதிமுகவுக்கு எப்போதும் உண்டு என்பதை காட்டிலும், அவரது திட்டமிட்ட இலக்கு அதிமுக என்பதே சரியாகும். அவர் இலக்கானது அவருடையது கனவுத் திட்டமான “அம்மாவுக்குப்பின் அதிமுக திட்டம்” என்பதாகும்.

அதிமுக-விற்கும், திமுக-விற்கும் அரசியல் விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதில் ஒன்று தலைவர்கள் பற்றாக்குறை. பல தலைவர்களும், மக்கள் செல்வாக்கு மிகுந்தவர்களும் திமுக-வில் ஏராளம் உண்டு. அதிமுகவில் ஜெயலலிதாவை மீறிய செல்வாக்கான தலைவர்கள் யாரும் இல்லை. அடுத்த கட்டத் தலைவர்கள் பட்டியலில் மக்களுக்கு தெரிந்த செல்வாக்கு மிகுந்த யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. இனி புதிதாக யாரும் வரப்போவதுமில்லை. ஜெயலலிதா யாரையும் வரவிடப்போவதுமில்லை.

இந்த வெற்றிடத்தை நிரப்பி கொள்ளவும், பயன்படுத்திகொள்ளவுமே வைகோ என்ற ஒரு பெரும் கொள்கைவாதி இலவு காத்த கிளியாக, கண்கொத்தி பாம்பாக, என்ன நேரினும் பரவாயில்லை என காத்துக்கொண்டு இருக்கிறார்.

அது எப்படி? அவர் அதிமுக-வையெல்லாம் எப்படி எடுத்து நடத்துவார் என கேட்கலாம். ஆனால் கதை அப்படியில்லை. அவரின் திட்டம் நுணுக்கமானது. பொதுவாக அதிமுக என்பது கருணாநிதி எதிர்ப்பு கொள்கையுடையவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. அக்கட்சியின் தொண்டனும் சரி, குண்டனும் சரி, தலைவனும் சரி!, கட்சி கொள்கையான ”கருணாநிதி எதிர்ப்பை” விடப்போவதில்லை. ஜெயலலிதாவுக்கு பின் இதை சரியாக செய்யப்போகிற ஹீரோ யாரென நோக்கும் பட்சத்தில் அவர்களின் கண்களுக்கு வைகோ பிரகாசமாக தெறிவார். அதிமுக-வில் நிரம்பி வழிகிற தொண்டர்கள் வைகோவின் பால் ஈர்க்கப்படுவார்கள்; மதிமுக-வை ஆதரிப்பார்கள்; இணைவார்கள்; திமுக-விற்கு சமமான இன்னொரு கட்சியாக தன் கட்சியை நிறுத்துவார்கள். இதுதான் திட்டம்.

இதை யாரும் மறுக்க முடியாது? இல்லையெனில் ஏன் இவரின் கொள்கைகளுக்கு முரண்பாடான அதிமுக அரசின் செய்கைகளை எதிர்க்காமலும், மக்கள் விரோத போக்கை கண்டிக்க மனமில்லாமலும், தனது நீண்ட நாள் கனவு திட்டமான “சேது சமுத்திர திட்டத்தை” முடக்குகிற ஜெயலலிதாவின் அடாவடியை தட்டி கேட்க துணிவில்லாமலும் இருக்கிறார்?

பலமுறை அவமானப்படுத்தப்பட்டாலும், ”சீட்டே! கிடையாது! வெளியே போ” என துரத்தப்பட்டாலும், அவர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளரை தம் பக்கம் இழுத்துகொண்டாழும் கண்டனம் கூட தெரிவிக்காமல் இருப்பதற்கான அவசியம் யாதென நமக்குத் புரிகிறதல்லவா?.

”அம்மா! குடை கூட இல்லாமல் தரையில் இறங்கி பத்தடி நடந்து வந்தார்” என பத்தாயிரம் அடி நடந்து வந்த வைகோ ஏன் மெய்சிலிர்க்க வேண்டும்?. ஏனெனில் திட்டம்.

இதோ! பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அதிமுக தலைவி கொடுக்கிற சொற்ப சீட்டுகளை யாசித்து பெற்று மதிமுக சார்பாக அண்ணன் வைகோ அவர்களும், அதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத் அவர்களும் விருதுநகர் தொகுதியில் ஒரே மேடையில், ஒரே கலரில், ஒரே குரலில் முழங்கத்தான் போகிறார்கள். நாமும் கேட்கத்தான் போகிறோம்.

ஆனாலும் திட்டம், பெரிய திட்டம். அவரின் கனவுத்திட்டம்..வெல்லட்டும்.
சிறக்கட்டும் அவர் புகழ்.

4 comments:

  1. வைகோவின் எண்ண ஓட்டத்தை அழகாக அம்பலபடுத்தி இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  2. கருணாநிதி இருக்கப்போவது இன்னும் 6 மாதம் மட்டுமே. அதன் பின்னர் கருணாநிதி திமுக இருக்குமா?

    ஸ்டாலின், அழகிரி, கனிமொழி போன்றவர்களிடம் கைகட்டி நிற்பதைக் காட்டிலும் எங்கு வேண்டுமானாலும் பிச்சை எடுக்கலாம்.
    அப்பனின் திருட்டுச் சொத்தை பங்கு போட்டுக்கொள்ளும் கொள்ளை கும்பல் தலைவர்களா? இவர்களால் தனியாக கட்சி நடத்தமுடியுமா?

    கருணாநிதியுடன் வைகோ கூட்டணி வைத்த போது சிலர் இப்படித்தான் கூறினார்கள். கருணாநிதிக்குப் பின் அந்தக் கட்சிக்குத் தலைவராக வரவே அவர் கருணாநிதியுடன் கூட்டணி வைத்தார்.

    சோனியாவிடம் திரும்பவும் உறவுகொண்ட கருணாநிதியின் எண்ணமும் அதுதானா? சோனியாவிற்குப் பின் காங்கிரஸின் தலைவராகலாம் என்பதா?

    ReplyDelete
  3. ஹ ஹ இதுக்கு சத்தியமா வாயால சிரிக்க முடியல.ஊர்க்காசைத் திருடி வயிறு வளர்க்கும் திமுக அதிமுகவினர் யாரும் எங்களுக்கு வேண்டாம்.அடுத்த தலைமுறை இளைஞர்கள் எங்களுக்கு போதும்.பாராளுமன்றத் தேர்தலில் மதிமுக தனித்தே நிற்கும்.அப்போது உங்க மூஞ்சியை எங்க வச்சுக்குவீங்க?

    ReplyDelete
  4. ஒன்னும் முடில, விழுந்து விழுந்து சிரிக்கிறதை பார்த்துட்டு என்னை எல்லோரும் ஒருமாதிரியே பார்க்குறாங்க, என்னா ஒரு நகைச்சுவை உணர்வு உங்களுக்கு,

    ReplyDelete