Showing posts with label மொட்டைமாடி. Show all posts
Showing posts with label மொட்டைமாடி. Show all posts

Tuesday, 14 August 2012

மொட்டைமாடி

நேற்று அரசு இரவில் என் பகுதியில் இரவு 8லிருந்து 10மணிவரை மின்சாரம் சேமித்தது. விலையில்லா அரிசி போல, கரண்ட் கட்-ஆவதையும் இப்படி டீசண்ட்-ஆ சொல்லித் தொலைவோம்.

வீட்டினுள் கொசுவின் சர்வாதிகாரம் யாரையும் உறங்கவிடாமல் செய்தது. நான் பாய், தலையணை எடுத்துகொண்டு மொட்டை மாடி சென்றேன்.உடன் மனைவியும், என் மகனும் வந்தனர்.

இரம்மியம்..குடும்பத்தோடு மொட்டை மாடி தூக்கம் என்பது இன்பத்தின் எல்லை.2 மணி நேரம் நன்றாக உறங்கிப்போனோம். மழைக் கம்பி குத்துப்பட இறங்கிவிட்டொம் பிறகு.

20 வருடம் முன்புவரை மொட்டை மாடிகளில் படுத்து உறங்கலாம்.கொசுக்கள் அவ்வளவாக இருந்ததில்லை.போர்வை கூட பனிப்பொழிவிலிருந்து தப்பிக்கத்தான் எடுத்துக்கொள்வோம்.

நாங்கள் பழங்காநத்தத்தில் குடியிருந்தபோது கோடைகளில் தினசரி மொட்டைமாடி உறக்கம்தான். நீண்ட நேரம் உரையாடிகொண்டு.அம்மா தன் பழைய கதையையும், அப்பா தன் மெய்வருத்திய வரலாறையும் சொன்னது மொட்டைமாடியில்தான்.

எங்கோ தூரத்தில் இருக்கிற வீரகாளியம்மன் கோயிலில் பாடுகிற கும்மி கேட்கும். இன்று பிரபலமாயிருக்கிற பரவை முனியம்மாவின் குரல்தான் அதுவென இப்போது கூர்ந்து கேட்கையில் புலப்படுகிறது.

அதிகாலை பனியில் தலையணை நனைய உடலை இறுக்கிகொண்டு உறங்கியதின் சுகம் கிடைக்குமா இன்று.சூரியன் சுட்டெரிப்பதை போர்வையில் உள்ள கிழிசல் வழியே பார்த்து கண் கூசி இன்னுமொரு போர்வையையும் தலையனையும் சேர்த்து இன்னும் இன்னும் உறங்கிப்போன அந்த காலங்கள் இன்று கொசு அரக்கனால் மாய்க்கப்பட்டுவிட்டது.

எல்லாம் வல்ல மனிதனால் கொசுவை ஒழித்திட முடியாதா??

உங்கள் வீட்டில் 2வீலர், 4வீலர் துடைத்த, அடுப்படியை சுத்தம் செய்த எண்ணெய் பிசுக்கு நிறைந்த பழைய துணிகளை எடுத்து சேமித்து வையுங்கள்.

அவற்றை இறுக்கமாக எழுமிச்சைபழம்போல் அளவுள்ள பந்துபோல் சுற்றிக்கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டருகில் தண்ணீர் தேங்கி உள்ள சிறு குட்டைகள், நீர் நிலைகளில் அவற்றை போடுங்கள்.

எதுக்கு போடனும்னு கேட்கிறீர்களா?????

அந்த பந்துகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு தண்ணீர் நிறைந்த மேற்பரப்பிற்கு வரும்.. தேங்கி உள்ள நீரில் உயிர் வாழும் கொசுக்கள், அதன் முட்டைகள், அதன் லார்வாக்கள் ஆக்சிஜன் கிடைக்காது இறந்துவிடும்; கொசுத்தொல்லை அழியும். டெங்கு பரவாது.

////// இதைத்தான் நம்ம மாநகராட்சி ஊழியர்கள் ஒர்க்‌ஷாப், ஆட்டோமொபைல் கடைகளின் மூலம் பெருவாரியாக திரட்டி நீர் நிலைகளில் போடுகிறார்கள்./////