Monday 10 November 2014

கத்தி பேசிய கம்யூனிசம்

”கம்யூனிசம் பேசுறதுக்கு ஒரு தைரியம் வேணும்”, ”விஜய் என்னமா நல்லது சொல்றாரு”, ”எவனாச்சும் தைரியமா இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா?” – இப்படியெல்லாம் பொங்குகிற கிராமத்தானாய் வாழ தவம் கிடக்கும் பட்டணத்து பொடி டப்பாக்களே! உங்களை காலம் மன்னிக்கட்டும்.
இதுவரை யாருமே பேசாத சமூகத்தின் பெரும் பிரச்சினையை ’கத்தி’ மட்டுமே
பேசியதாக கத்தி கூப்பாடு போடுகிறவர்களை பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை கம்யூனிசத்தை இந்தப்படம் போல் எந்த படமும தைரியமாய் பேசியதில்லையாம். ”ஓ! கார்ல் மார்க்ஸ்! மை டியர் எங்கெல்ஸ்!! இவிய்ங்க வந்துட்டாய்ங்க. ஓடுங்க.ஓடுங்க.!” என கத்த தோன்றுகிறது..ச்சே!


போட்ட மூலதனத்தை எப்பாடு பட்டாவது திரும்ப எடுக்க வேண்டும் என்பதால் முதல்வாரம் டிக்கெட் ரூ.200 என்று விற்று தீர்த்து, மூன்றே நாட்களில் 3.5 கோடியும், இதுவரை சாதனையாக 100 கோடிக்கும் மேல் வசூல் தந்த கத்தி படத்தை இயக்கியவரும், நடித்தவரும் மார்க்சின் மூலதனம் படித்த மிக எளிமையான கம்யூனிஸ்டுகள் எனக் கொள்க தோழர்களே!

மக்களிடம் நல்ல பெயரும், கம்யூனிச சித்தாந்த அறிவும் ஒருங்கே பெற்ற ஒரு இளைஞனால்(ஜீவா) அம்மக்களுக்கு நல்லதொரு வழியை ஏற்படுத்தித் தர இயலாது என்றும், திருட்டு புத்தியும், ஏமாற்றும் வல்லமையும், போலீசை ஏய்ப்பவனுமே(கதிரேசன்) அவர்களுக்கான வாழ்வியலை உருவாக்கித் தர முடியும் என திரைக்கதை அமைத்ததின் மூலம் தன் எண்ணத்தை வழிந்து திணித்துள்ளார் இயக்குநர். மூலதனத்தை சதா கையில் வைத்திருக்கிற ஜீவானந்தம் புரட்சி டயலாக் பேச மாட்டாராம். எங்கிருந்தோ வந்த திருடன் ஒரே இரவில் கூகுல் பார்த்துவிட்டு வந்து இன்ஸ்டண்ட் புரட்சி பேசுவாரு.. அத்திருட்டு ஹீரொ கதாபாத்திரத்தின் முந்தைய நிலையை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் இயக்குநர்.அந்த முந்நாள் திருடனின் யோக்யதை என்ன? அதுபோல் ஒருவன் தான் ஹீரோயிஸ்டிக்காக வரவேணும் என்ற பிராய்சித்தமா? கொள்ளைக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த இயக்குநராயிற்றே, அவரிடம் அதைத்தானே எதிர்பார்க்க முடியும்.

ஒரு பழைய படத்தில், கூட இருக்கிற நண்பன் கலராக இருந்தால் தன் முகம் ஃபிகரிடம் எடுபடாது என்று நண்பன் முகத்தில் கரியை பூசுவார் பாக்யராஜ். நம்ம இயக்குநர் தன்னூத்தை வயதானவர்கள் மட்டுமே வாழுகிற ஒரு தண்ணியில்லா கிராமமாக சித்தரித்து அந்த ஊரில் இட்லி கம்யூனிஸ்ட் மட்டுமே இளைஞர் என காட்டியுள்ளார். உடன் நின்று போராட தன்னூத்தில் எக்ஸ்ட்ரா இளைஞர்களே இல்லை போல.. நண்டு சின்டு பையல்களும் பொழைக்க போய்விட்டார்கள் போல.?. 

இட்லியில் இருந்து கம்யூனிசத்தை ஒன்லைன் எடுப்பார் நம்ம ஹீரோ...யப்ப்ப்பா! சத்தியமாக மார்க்ஸ் அங்குதான் புதைக்கப்படுகிறான்.
அந்த இட்லி கம்யூனிஸ்டும், தன்னூத்து மக்களும் போலீசுக்கு குறைந்தபட்ச எதிர்வினை கூட ஆற்றாமல் அழுது புலம்புவதையும் பார்த்தால் கம்யூனிஸ்டையும், கிராமத்தினரையும் இவ்வளவு காயடிக்கப்பட்டவர்களாய் கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். 17ம் நூற்றாண்டு அடிமைகள் போல் வாய் பேசாது அடங்கிப்போகின்றனர். இதில் இட்லி கம்யூனிஸ்ட்டின் பெயர் ஜீவானந்தமாம்.காலத்தின் கோலம்.

வசனகர்த்தா நுனிப்புல் மேய்பவர் போல. காரில் பயணித்துகொண்டே Wrapper பார்த்து உலக நிலவரம் அறிபவர் போல. வசனத்தில் எதிலும் ஆழமில்லை. தற்கொலை செய்துகொள்ளும் 6 முதியவர்களில் ஒருவர் இஸ்லாமியர். அவர் பேசுகிற போது "எங்கள் மதத்தில் தற்கொலை......." என தற்கொலைக்கான காரணத்தை விளக்குக்குகிறார். எனக்குத் தெரிந்து எந்த இஸ்லாமியனும் தான் சார்ந்துள்ளதை மார்க்கம் என்றுதான் சொல்வான். மதமென்று சொல்லி நான் கேட்டதில்லை.மற்றவர்கள்தான் இஸ்லத்தை மதம என விளித்து கேட்டிருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் விளக்கவும். ஆக அந்தளவு கூட ஸ்டடி செய்யாமல் ஒரு வசனகர்த்தா சமூகத்துக்கு கருத்தை விதைக்கிறாராம்..

நீதிபதியை மிரட்டும் வசனம் உச்சகட்டம். “ 17 வயசு பையனை வச்சு உன்னை கொன்னா. அவன் மூணு வருசத்துல வெளியில வந்துடுவான்” என மிரட்டி சட்டத்தின் ஓட்டையை கண்டுபிடித்து தந்துள்ளார் முருகதாஸ். என்ன ஒரு சமூக அக்கறை பாருங்கள். ஜுவனைல் போர்டே கூடாதென் முழங்கவேண்டிய காலகட்டத்தில் எப்படி ஊக்குவிக்கிறார் பாருங்கள். இந்த ஐடியா மூலம் இனி கூலிக்கு 15 முதல் 17 வயசு பையன்கள் தயார் செய்யப்பட மாட்டார்களா முருகதாஸ்.?

நிகழ்கால அரசியல் பற்றி முருகதாஸ் எழுதிய வசனத்தை பேசும் விஜய் புள்ளிவிவரங்களை விவரிக்கையில் சாமர்த்தியமாக அரசாங்கத்தை விமர்சிக்காது பன்னாட்டு கம்பெனிகளை மட்டுமே திட்டுகிறார். அரசு அனுமதிக்காமல் எப்படி அய்யா பன்னாட்டு கம்பெனி உள்ளே வரும். ஊழலை பற்றி பேசும்பொழுது வழக்கு விசாரனையில் உள்ள அலைக்கற்றை வழக்கை பேசி யாருக்கோ சாமரம் வீசுகிறார். ஆனால் அப்டேட்டட் சொத்து குவிப்பு வழக்கை பற்றி மூச்சே விடவில்லை இருவரும். கம்யூனிஸ்டுகளாச்சே! எப்படி மூச்சுவிடுவார்கள். 

மல்டி நேசனல் கம்பெனி உறிஞ்சும் தண்ணீரை பேசுகிற 'இட்லி கம்யூனிஸ்ட்' அரசே தண்ணீரை விற்பதை விமர்சனம் செய்திருக்க வேண்டாமா? ஒரு டயலாக் வைத்திருக்கலாமே! கோலா கம்பெனிக்கு கோலா வித்து கொடுத்தவர் அக்கம்பெனியை திட்டி தீர்க்கிறார். விஜய்க்கு பழைய சம்பள பாக்கி ஏதாவது இருக்குமோ என ஐயம் எழுகிறது.

ஐம் வெயிட்டிங்-னு ரஃப் அப் டஃப்-ஆ பேசி முடித்த மறு நொடி சமந்தா கிட்ட ஒரு நெளி நெளிவார் ஹீரோ..சூப்பர்ப்.! வாட் எ ஃடிஃபரண்ட் ஃபெர்பார்மன்ஸ்.. உலக சினிமாவில் முதன்முதலாக வீராணம் குழாய் புரட்சியை அறிமுகப்படுத்தி மகா இண்டெக்சுவல் என தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குநர். உக்காந்து யோசிச்சுருக்கிறாரு அவர். ஆனா! தலையில அடிச்சுகிட்டாங்க சார் தியேட்டர்ல

காதல், ஃபைட், டெக் சாங், என ஹீரோக்குரிய அத்தனையும் கலந்து கொடுக்கனும். அப்டியே புரட்சியும் பேசனும்னு ஒரு கோமாசோமா படத்தை எடுத்துட்டு ஏதோ நாட்டை இவனுங்கதான் காப்பாத்த வந்தது மாதிரி ஓவரா சீன் போட்டு கொல்றாய்ங்க.

'ஆங்! சினிமால என்னய்யா லாஜிக் பாக்குறீங்க?'னு ஒரு குரல் வேற கேட்குது. எம்ஜிஆர் கிழவிக்கு கிஸ்ஸடிச்சத பாத்து ஓட்டை அள்ளி அள்ளி போட்வய்ங்க குரல் அது. அந்த கிஸ்ஸுல என்னத்த லாஜிக் பாத்தானுவளோ?

இந்த படத்தில் சொன்னதுதான் கம்யூனிசம் எனில், சமூக பிரச்சினை எனில் நாம் பெரும் தத்துவ/சிந்தனை வறட்சியில் இருப்பதாகத்தான் அர்த்தம். வாங்க எல்லோரும் மூலதனத்தையும் கம்யூனிஸ்டு அறிக்கையையும் ஒருக்கா முழுக்க படிப்போம்.

1 comment: