Saturday 30 November 2013

நவீன சரஸ்வதி சபதம் - சாபக்கேடு

ஆங்கிலப் படமான ஹேங் ஓவரைமிக மட்டமான தமிழ் வசனங்களால்  மொழிமாற்றம் செய்து யூ ட்யூப்-ல் உலவவிட்டிருந்ததை நான் இரு மாதங்களுக்கு முன்பு பார்த்திருந்தேன். நண்பரொருவர் முகநூலில் அதன் சுட்டியை அனுப்பியிருந்தார். யாரோ சிலரால் வக்கிரத்துடன் மிக கேவலமாக தமிழ் படுத்தப்பட்டிருக்கும் அப்படம்.   

அதைவிட கேவலமாக அதே படக்கதையை புதிய படைப்பென எடுத்த நவீன சரஸ்வதி சபதத்தின் இயக்குநரை உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளிலும் திட்டலாம்.  ஹேங் ஓவரில் அடுத்து விடிகிற நாளில் தாங்கள் எப்படி அவ்வாறு ஆனோம் என்பதை காட்ட அடுத்தடுத்த காட்சிகளில் அவர்களுடைய தேடுதலில் விடை கிடைக்குமாறு செய்திருப்பார் இயக்குநர். நம் ந.ச.ச இயக்குநர் சந்துரு அவ்வளவு கஷ்டப்பட்டு சிந்திக்கிறவர் இல்லை போலும். சிவபெருமானின் திருவிளையாடல்தான் அது என மிகச் சுலபமாக மக்களின் மூளையை கழுவி ஊத்தியிருக்கிறார். எந்தவித கேள்விக்கும், லாஜிக் மண்ணாங்கட்டிக்குள்ளும் போகாமல் நம் ஜனம் சிரித்து இரசிக்கிற ஒரே விஷயம் கடவுள்தான் என தெரிந்துகொண்ட இயக்குநரின் திறமையை என்னவென்று சொல்ல?. இப்படத்தை எடுத்து தமிழ் சினிமா உலகிற்கு ஒரு நீங்காத பழியை தேடிக் கொடுத்துவிட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை அபத்தம்.

நகைச்சுவை வறட்சிக்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். ஒரு காட்சியில் மர்ம உறுப்பில் ஒருத்தன் உதைப்பான். திரையரங்கே சிரிக்கிறது. நம் மக்கள் இவ்வளவு வறட்சியிலா இருக்கின்றனர். அத்தனை நகைச்சுவை வறட்சி. திரையரங்கில் அனைவரும் சிரித்த அந்த அற்புத நகைச்சுவை காட்சிக்கான சிந்தனை ஊறிய மூளை யாருடையதென தெரியவில்லை. மெச்சுவோம்.

டைட்டில் கார்டு போடுகிற பின்புலம் அண்டமென காண்பித்து பின்னர் அது சிவபெருமான் அண்டு பேமிலி வாழ்கிற கைலாயம் என ஆரம்பிக்கும் போதே எழுந்து வெளியே வந்துவிட்டால் தேவலை.தப்பிப்பீர்கள். சிவபெருமானின் திருவிளையாடல் என சொல்லப்பட்டு எந்த ஒரூ இடத்திலும் சரஸ்வதி சபதம் என்ற பழைய படத்தை நவீன படுத்தாது கடைசி காட்சிக்கு முந்தைய காட்சியில் ஒரேயொரு வசனத்தில் கல்வியா?, செல்வமா?, வீரமா? என கேட்டதற்காகத்தான் இந்த படத்திற்கு நவீன சரஸ்வதி சபதமென பெயராம். சொல்கிறார்கள். இதை பார்க்கிற நம்மை ஆகச்சிறந்த முட்டாள்களென பாவித்து எடுக்கப்பட்ட காவியம் இந்த படம்.

சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த இயக்குநர் என்றெல்லாம் இருக்கிற விருதுகள் பட்டியலில் இனி சிறந்த ரசிகன் என்ற விருதையும் தர வேண்டுமாய் திரை உலகத்தை வேண்டி விரும்பி, கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் படத்தின் இடைவேளைக்கு முந்தைய காட்சியிலேயே அரங்கத்தை விட்டு வெளியேறியவுடன் தோன்றிய யோசனை இது.

தவறு செய்த நான்கு நண்பர்களில் மூன்று பேருக்கு மன்னிப்பு உண்டென்றும், அரசியல்வாதியாக இருக்கும் ஒருவருக்கு மன்னிப்பில்லை என்றும் அவருடைய அரசியல்வாதி அப்பா திருந்தி அன்னா ஹசாரே-வை பின்பற்றுகிறார் எனவும், தனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என புலம்புகிற அவர் மகன் கதாபாத்திரத்தை காண்பித்த இயக்குநரை நான் புரிந்துகொள்ள முடியவில்லை. எதை சொல்ல வருகிறார் இயக்குநர் என குழம்பிப் போனேன்.

இறுதியில் சிவபெருமானின் வாயால், குடிப்பவர்களை நிறுத்த சொல்லிவிட்டு அந்த காசில் அன்னதானம் செய்யுங்கள் என மெசேஜ் சொன்ன இடத்தில் தான் இயக்குநர் யாரென எனக்குத் தெரிந்தது.

படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது ஒருத்தர் “ஹேங்க் ஓவர், CAST AWAY இரண்டையும் போட்டு குழப்பியிருக்கான் டைரக்டர்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் “தயவு செய்து வெள்ளைக்காரனை கேவலப்படுத்தாதீங்க” என்று சொல்லலாமென நினைத்தேன். 

1 comment:

  1. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete