Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, 27 July 2017

யானை பொம்மை

வீட்டுக்கு வந்த ஒருத்தர் யானை பொம்மை ஒன்றை வாங்கி வந்து அன்பளிப்பாக தந்துவிட்டு போனார் . பிற்பாடு இன்னொருத்தர் வந்தார். ”வீட்டில் யானை இருக்கக்கூடாது யானைக்கு பசி அதிகம்; வீட்டுல இருக்கிற காசெல்லாத்தையும் காலி பண்ணிடும்”ன்னார்.
”இல்லைங்க. அது பொம்மை. அப்படியெல்லாம் சாப்டாது”ன்னு எகத்தாளமா பேசுனேன்.
புதுசா வீடு கட்ற எல்லாத்துக்கும்(முன் கூட்டிய அனுபவம், திட்டமிடல் இல்லாம) வர்ற பணக்கஷ்டம்தான் எனக்கும்னு அவருக்கு புரியல.

 சரி அவருதான் அப்படின்னா,,. வர்றவன் எல்லாரும் அந்த யானை பொம்மையைத்தான் பாக்குறான். ஒருத்தன் “போய் ஏதாவது கோயில்ல வச்சுருங்க”ன்னான். அங்க உசுரோட யானையை வச்சுருக்காங்க. கேரளாவுல வீட்டிலேயே யானை வளக்கிறாய்ங்க. நான் பொம்மையைத்தாண்டா வச்சுருக்கேன்”னு புலம்ப வச்சுட்டாய்ங்க.

இன்னொருத்தரிடம் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துகொண்டு  “ஆமா சார்! இப்படித்தான் என் ப்ரெண்டு வீட்டுல வச்சுரருந்த ரெண்டு பாம்பு படம் அந்த வீட்டுக் குழந்தையை கொத்திடுச்சு”ன்னேன்.

என்னிடம் இந்த எகத்தாளத்தையெல்லாம் கேக்க சகியாத பலர் என் மனைவியிடம் போய் முறையிட. ஒருநாள் அவள் போய் அந்த யானை பொம்மையை பக்கத்தில் ஒரு கோயிலில் வைத்துவிட்டு வந்தாள்.
பணக்கஷ்டம் ஒண்ணும் தீந்தபாடில்லை. இன்னும் மோசமாகத்தான் உள்ளது நிலைமை.
முன்னொருமுறை என் வீட்டுக்கு வந்து யானைப்பசி, சோளப்பொறி என்றெல்லாம் சொன்னவர் நேற்று ஒரு பொம்மை வாங்கி வந்தார். குபேர பொம்மையாம்.
அப்பொம்மையின் வயிற்றை பார்த்தேன்.
யானையை காட்டிலும் பெரிய தொந்தியை குபேர பொம்மை கொண்டிருந்தது.

Monday, 28 October 2013

ஆட்டோ 20 ரூபா, கேமரா 30000

முன் இரவு...............

இரவு பதினோரு மணிக்கு நானும் ரமேசும் எழும்பூர் இரயில் நிலையம் வந்திறங்கினோம். 27B வருவதற்காக காத்திருந்தோம். நீண்ட நேரமாய் பேருந்து வந்த பாடில்லை.

ஒரு ஆட்டோ ஓட்டுநர் அருகில் வந்தார்.... ”சார்! எங்க போனும்”

”சேப்பாக்கம்” .

” 20 ரூபா கொடு சார்! சேர் ஆட்டோ!”

”இல்லை.  பஸ் வந்துடும்”

” பஸ் வராது. அப்டியே வந்தாலும் நைட் சர்வீஸுதான். டபுள் சார்ஜ்” – என மிரட்டல் விடுத்தான் ஆட்டோ ஓட்டுநன்... அதென்ன ஓட்டுநன்.. மரியாதையில்லாமல்... ஆரம்பத்தில் அவன்மேல் அப்படித்தான் மரியாதை கோண்டிருந்தேன்.

”பஸ் லேட்டாகும் சார்”

நான் கண்டுகொள்ளவில்லை.

திரும்பி சென்ற ஆட்டொ ஓட்டுநன் இன்னொருவனை அழைத்து வந்தான்.

என் நண்பன் ரமேசிடம் சென்றனர்.. “இன்னாபா! வர்றியா! எங்க போணும். சேர் ஆட்டோ! 20 ரூபாதான்?”

”இல்லை. ஃபிரண்டுக்காக வெயிட் பண்றேன். ட்ரெயின்ல வர்றான். வரட்டும்” –என்றான்.

“ஃபோன போட்டு கூப்டுபா! சீக்கிரம் போலாம்ல” – என அதட்டினான் இன்னொரு ஆட்டோ ஓட்டுநன். இவன் வெளியூரிலிருந்து வந்து ஓட்டும் ஆட்டோக்காரன் போல. பேச்சு வழக்கு சென்னைவாசி போல இல்லை.

பேசிய தொணி சரியில்லை. எனக்கு கோபம் வந்தது.

 “ஹலோ! அவன் சீக்கிரம் போவான், லேட்டா போவான்...போன் போடுவான்..போடமாட்டான்..உங்களுக்கென்ன?.. உங்க வேலைய பாருங்க.  போய் உங்க ஆட்டோவ ஓட்டுங்க பாஸு” என்றேன்.

” ஆங்…. நீ சவாரி வந்தாதானே! ஆட்டோ ஓட்டமுடியும்”

”வர முடியாது! நீ எதுக்கு பாஸு நைட்ல ஆட்டோ ஓட்டற. வீட்டுல போய் தூங்கு பாஸு” –என சிரித்து கொண்டே சொன்னேன்.

“ எனக்கு தூங்கத் தெரியும்.. நீ சொல்லத் தேவல!” என்றான்.

“ அதே மாதிரி! எனக்கு பஸ்ல போகத் தெரியும். நீ போய் உம் வேலைய பாரு” என்றேன்.

முதல் ஆட்டோ ஓட்டுநன் வந்து மறித்து....

”கோவப் படாத சார்! நீ மெட்ராஸா. எந்த ஏரியா சார்?”

”ம்ம். கொருக்குப்பேட்டை..இன்னா?”

“ மெட்ராஸ் மாதிரி தெர்லயே. வேற மாத்ரி பேஸ்ற”

“ எங்கப்பு கரீக்டா  தமிழ் பேச சொல்லிகொடுத்தாரு. அதான் உங்கள மாதிரி இல்லாம வேற மாதிரி தமிழ் பேசுறேன்” என்றேன்.

இருவரும் முறைத்தனர்.

அவர்கள் முறைப்பை குறைக்க நான் அவர்களை பார்த்து சிரித்தென்.

27B வந்தது.

ரமேஷிடம் ”வர்றேண்டா” என விடை பெற்றேன். 

“வர்றேன் பாஸு” - என ஆட்டோக்காரரை கையசைத்தேன்.

அவரும் பதில் சலாம் வைத்தார்.

பேருந்தில் ஏறினேன்.

“ D1 ஒண்ணு” –கேட்டேன்

டிக்கெட்டை கிழித்து கொடுத்தார் நடத்துநர். 8 ரூபாய்.

நான் வெளியே எட்டிப் பார்த்து அந்த ஆட்டோ ஓட்டுநனிடம் ‘ பாஸு. 8 ரூபாதான் டிக்கெட்டு. சேப்பாக்கம் வர்றீங்களா?” –கத்தினேன்.

” போலாம் பா..... ரைட்” என்றார் நடத்துநர்..ஊர்ந்தது பேருந்து.
 ------------------------------------------------------------------

பின் இரவு....................

நல்ல தூக்கத்தில் இருந்தேன்.

இரவு 2 மணி இருக்கும். ரமேஷ் செல்லில் அழைத்தான்,. 

எடுத்தேன். “ சொல்லுடா! என்னடா இப்ப கூப்டுற!”

“மாப்ள! இப்பதாண்டா வீட்டுக்கு வந்தேன்”

மணியை பார்த்தேன் . அதிகாலை 3 மணி.

”என்னாச்சுடா?”

”பஸ் வரல. அவன் ஆட்டோலதான் ஏறுனேன்”

”ஏண்டா? ஏதும் பிரச்சினையா?”

”ஆமாண்டா! ஆட்டோல ஏறி பாரீஸ் வந்தேன். 1D நின்னுது. என்னோட கேமரா பவுச்ச ஆட்டோ சீட்டுக்கு பின்னாடி வச்சுருந்தேன். அவசரத்துல மறந்துபோய் பஸ் ஏறிட்டேன்.”

”அப்புறம்”

“ அப்புறம்தாண்டா காமெடி! பீச் ஸ்டேசன் தாண்டி போனப்புறம்தான் ஞாபகம் வந்தது. உடனே இறங்கிட்டேன். பேச்சு வாக்குல அந்த ஆட்டோ டிரைவர் அவன் செண்ட்ரல் ஸ்டாண்ட்-னு சொன்னான்டா. சரி அங்கபோய் பாப்பம்-னு 
நேரா சென்ட்ரல் ஆட்டோ ஸ்டாண்ட்-க்கு போய்ட்டேன்”

“ சரி. கேமரா கிடைச்சுச்சா. இல்லையா”

”சென்ட்ரல் போனா ஸ்டேண்ட்ல ஒரு 100 அட்டோக்கு மேல நிக்குது மாப்ள!. சரி! எல்லா ஆட்டோ பின்னாடியும் கைய விட்டு தேடினேன். கிடைக்கல. ஒரு மணி நேரம்டா! தேடிகிட்டே இருந்தேன்.”

” டேய்! கேமரா என்னாச்சு?”
”அந்த ஆட்டோ நம்பரும் தெரியாது. சரி! மறுபடியும் எக்மோர் போய் பாக்கலாம்னு இன்னொரு ஆட்டோ பிடிச்சேன்”

”சரி. சீக்கிரம் முடிடா கதையை! தூக்கம் வருது....கேமரா கிடைச்சதா இல்லையா?”

”எக்மோர் போனா! ஒருத்தனும் இல்லை. மறுபடியும் அதே ஆட்டோலயே பாரீஸ் வந்து இறங்கினேன். கேமரா போன சோகத்துல பஸ்ஸுக்கு நின்னுகிட்டு இருந்தேனா?”

“ அப்ப கேமரா டும்-மா? .....த்தா. முப்பதாயிரம் பூட்சா? உனக்கு அறிவுக் …..தியே இல்லடா”

“டே! மாப்ள! நிறுத்து.... முழுக் கதைய கேளு. கிளைமாக்ஸ்தான் சூப்பரு.  பாரீஸ்ல நம்ம இரானி டீக்கடையாண்ட ஒரு ஆட்டோ நின்னுகிட்டிருந்தது. சரி! சும்மா போய் பின்னாடி கைய விட்டு பார்ப்போம்னு ஒரு இன்ஸ்டிங்ட்-டா மச்சான். ’ரமேஷ் இன்ஸ்டிங்ட்-னு வச்சுக்கோயேன்’..உள்ள கைய விட்டேனா?”

” அந்த ஆட்டோக்காரன் வந்து மொத்துனானா. செம அடியா மாப்ள!”

”இல்லடா வெண்ணை. கைய உள்ள உட்டா..என் கேமரா பவுச் அப்டியே இருந்துச்சுடா!”

“எப்பிடிர்ர்றா? ”

”ஆமாம். மச்சான். நான் நம்பல. உள்ள கைய உட்டு கேமராவ எடுத்தேனா?,  இரண்டு பேரு கத்திகிட்டே டீக்கடையிலயிருந்து ஓடி வந்தாங்க... கிட்ட வந்தா அதே அட்டோக்காரங்க மச்சி” 

“ அய்யே...சூப்பர் டா...”

“ அப்புறம் விசயத்தை சொன்னேன். என்னைய எறக்கி உட்டுட்டு அவங்க அதே ஆட்டோல  அண்ணாநகருக்கும், நுங்கம்பாக்கத்துக்கும் சவாரி வேற போய்ட்டு வந்துட்டோமே-ன்னு சொல்லி ஆச்சரியப்பட்டாய்ங்க-டா ”

“ ஏறுனவங்க எவனுமே கேமராவை  பாக்கலியா?..நல்ல நேரம்டா உனக்கு... வேற என்ன சொன்னாய்ங்க” 

“ இம்ம். சொன்னாய்ங்க. உம் ஆளு 8 ரூவாய்க்கு சேப்பாக்கம் வரச் சொன்னாருல. இப்போ எங்க ரெண்டு பேருக்கும் மசாலா பால் வாங்கி கொடுத்துட்டுதான் போணும்னு சொல்லி, வாங்கி குடிச்சுட்டு, அதே ஆட்டோல வீட்டுக்கு இப்பதான் வந்து இறக்கி உட்டாங்க. இப்பதாண்டா வந்தேன்.”

“ மச்சான் செம அட்வென்ச்சர்-டா. கிளப்பிட்ட.”

“ நல்ல வேளை கேமரா கிடைச்சுதே. இல்ல முப்பதாயிரம் டும்-ஆயிருக்கும்.”

“ அது சரி! வீட்டுல இறக்கிவிட அந்த ஆட்டோக்காரங்களுக்கு எவ்ளோடா கொடுத்த”

“அதே! இருபது ரூபா-டா மச்சான்”

“ அவய்ங்க நல்லவய்ங்க மச்சி. .கொஞ்சம் அதிகமா கொடுத்திருக்கலாம்ல ” என்றேன்.

”நீ சொல்லித்தான் அவங்க நல்லவங்க தெரியும் மச்சி....போ..போயி தூங்கு..” என்றான்.

Saturday, 19 October 2013

மனிதனிலிருந்து குரங்கானோம்

…………மூன் செய்திகள்……………..
இன்றைய முக்கிய செய்திகள்.
"மனிதலிருந்து குரங்கு பிறந்த அதிசயம். திண்டாடும் வால் மனிதர்கள். சிங்கவால் குரங்கு போல, குரங்கு வால் மனிதர்கள் – ஒரு சிறப்பு கண்ணோட்டம்” - இழுத்துகொண்டு வாசித்தது தொலைக்காட்சி.

ரிமோட்டை அழுத்தி அனைத்தேன். அதிர்ந்தே போனேன். தொலைக்காட்சியில் வருமென நினைத்து பார்க்கவே இல்லை. வந்தேவிட்டது. அடுத்து புலனாய்வு பத்திரிக்கைகளில் வரிசை கட்டும். மானம் போகும். நொந்துகொண்டேன்.   

ஒரு வருடம் முன்னர் இருக்கும். ஒருமனதாக அனைவரும் ஒப்புக்கொண்டனர். தத்தமது சாதி அழிந்து போக யார்தான் பார்த்துகொண்டு சும்மாயிருப்பர். அதிலும் நாங்கள் பூர்வீக பச்சை தமிழர்கள் வேறு. எங்களால் அது முடியவே முடியாது. கலப்படம் செய்வதை யாராவது, எங்காவது ஒத்துக்கொள்கிற போக்கு உண்டா?

டாக்டரும் உறுதியாக சொல்லிவிட்டார் ’ஒரே  ஊசிதான்!. கூடுதலாக ஒரு மஞ்சள் பச்சை மாத்திரை சாப்பிட்டால் போதும். இனி எப்போதும் கவலையில்லை’ என . இந்த உலகத்திலேயே மிகவும் சுத்தமான கலப்பில்லாத சாதியாக  எங்கள் சாதிமட்டுமே இருக்கும். கடந்து வருடக் கணக்குப்படி மொத்தம் எங்கள் சாதியில் 1333 பேர் மட்டுமே சுத்தமாக வேறு எந்த சாதியினரோடும் கலக்காமல் இன்றும் வாழ்ந்து வருவதாக புள்ளியியலில் டாக்டர் பட்டம் பெற்ற எங்கள் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் பிதாமகன் பெருமைபடச் சொன்னார்.

டாக்டர்.விஞ்ஞானம் இதற்காகவே டெக்ஸாஸிலிருந்து வந்தார். எங்கள் சாதியில் உயிரியல் தொழிற்நுட்பத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் மனிதர். அதிகம் படித்தவர். அமெரிக்காவில் வாழ்பவர். எங்கள் சாதிச் சங்கத்தின் பொருளாளர். அவர்தான் இந்த மருந்தை கண்டுபிடித்தார். இந்த ஊசியை போட்ட இரண்டாம் நாள் அனைவருடைய கால் சுண்டுவிரலும் அடர் கருப்பாக மாறிவிடும். பின்னர் அதே நாள் இரவு மஞ்சள் பச்சை மாத்திரையை உட்கொண்டால் சுண்டுவிரலோடு அந்த நிறம் மேலே பரவாமல் நின்றுவிடும். ஒரு சுண்டுவிரல் கருப்பாக மாறிய ஆண் வேறொரு கருப்பு சுண்டு விரல் பெண்ணோடுதான் பழக முடியும். சுண்டு விரல் ஆண் யாரும் வேறு சாதி பெண்ணை பார்த்தால் காதல் உணர்வு வராது, வேறு சாதி பையனை திருமணம் முடித்தால் இன விருத்தியடையாது. இதுதான் விஞ்ஞானம். இதுதான் நம் இனத்திற்கான விஞ்ஞானம் என டாக்டர் சொல்லச் சொல்ல பூரிப்படைந்தோம் நாங்கள்.

 எங்களுக்கு டாக்டர் விஞ்ஞானம் கடவுளாக தெரிந்தார். கடவுள்தானே தனித்து சாதியை படைக்க முடியும். இனி நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருப்போம்.  காட்டுக்கு ராஜா சிங்கம்! இந்த தமிழ்நாட்டுக்கு சிங்க வகையறா! வெல்க சிங்க வகையறா! என எக்காளம் விண்ணை தொட்டது.

யாருக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமாக நடந்த சென்னை மாநாட்டில் மொத்தம் 53 பேர் இந்த ஊசியை போட்டுக்கொண்டோம். ஆளுக்கொரு மஞ்சள் மற்றும் பச்சை மாத்திரையை வாங்கி வைத்துகொண்டோம். வெளியூர்களில் இருக்கிற எங்கள் சாதி பெரிய மனிதர்களுக்கு, எங்கள் சாதியை சேர்ந்த டாக்டர்கள் மூலமாக ஊசி போடப்படும் என டாக்டர் அறிவித்தார். மாத்திரையை அவரவருக்கு தெரிந்த சொந்தங்களுக்கு கூரியர் மூலமாக அனுப்பி வைத்தோம். எல்லோருக்கும் பெருத்த சந்தோஷம்.

மாநாட்டு கூட்டத்தில் மிக முக்கியமான ’ஒரு வரி தீர்மானம்’ ஒன்றும் பலத்த  கரகோஷத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. இனி யாரும் அடுத்த சாதிக்காரன் நெய்த ஆடையை உடுத்தக் கூடாது என்பதுதான் அது. இனி எங்கள் தலைவர் குஞ்சுமன்னன் மில்லில் இருந்து வரும் பேண்ட், சட்டை, வேட்டி, சேலையை மட்டும்தான் வாங்கி உடுத்த வேண்டும். படிப்படியாக அனைத்து தொழில்களையும் தங்கள் சாதி ஆட்கள் படித்து தெரிந்து கொண்டு தங்கள் சாதிக்காக மட்டுமே சேவை செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டது. ”எப்படியாவது நம்ம சாதிய காப்பாத்தனும்.சாமி” என எங்கள் குல சாமி முன்னர் அனைவரும் சத்தியம் செய்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து கலைந்தோம் அன்று.

       அவரவர் வீட்டில் எல்லோருக்கும் இன்னதென்று சொல்லியும், சில பேரிடம் சொல்லாமலும், குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாகவும் மாத்திரையை கொடுத்தொம். மாத்திரை விழுங்கப்பட்டதை ஒவ்வொரு குடும்பத்தாரும் உறுதி செய்து கொண்டோம்.  ஒரு பிரச்சினையுமின்றி எல்லோருக்கும் சுண்டு விரல் கருப்பானது. சித்ரா பெளர்னமி அன்று அனைவரும் குலசாமி கோயிலில் சந்தித்து சிலாகித்து பேசி சந்தோசபட்டு கொண்டோம்.

எல்லாம் மூன்று மாதம்தான். ஆடி வந்தது. ஆட்டம் கண்டது வயிறு.

சொல்லி வைத்தாற்போல் எனக்கும், என் மனைவி பவானி மற்றும் என் குட்டிப்பெண் நித்திராவுக்கும் பயங்கர வயிற்று வழியுடன் வாந்தியும், மயக்கமும் வந்தது. இதென்னடா தெய்வ குத்தம்.? மூவருக்கும் முதுகின் கீழ் பகுதியில் லேசான வீக்கம் வேறு தெரிந்தது. பயந்து போய் எங்கள் பூசாரியிடம் முறையிட்டோம். புண்ணியமில்லை. 

’அம்ருதால போய் பாத்துடுவோங்க! பயம்மா இருக்கு!’ என பயந்தாள் பவானி. மூவரும் போய் அம்ருதா மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தோம்.  ”குடல்ல அப்பெண்டிக்ஸ் லேசா வளந்துருக்கு வேற ஒண்ணுமில்ல. இந்த கருப்பு மாத்திரையை சாப்பிடுங்க. சரியாயிடும்” என்று சொன்னார் டாக்டர்.

டாக்டர் விஞ்ஞானம் கொடுத்த மாத்திரையினால் ஏதும் பக்கவிளைவு இருக்குமோ என பயந்த நான் அவருக்கு பலமுறை போன் செய்து பார்த்தேன். அவர் எடுக்கவேயில்லை.

ஊரிலிருந்து சரசு அக்காவும், அத்தானும் போன் செய்து இதே மாதிரிதான் அவர்களுக்கும் அப்பெண்டிக்ஸ் இருப்பதாக சொன்னார்கள். ஓரிரு நாளில் ஊசிப் போட்டுகொண்ட அனைவருக்கும் ”அப்பெண்டிக்ஸ்” வளர்ந்திருப்பதாக உறுதியானது.

”ஏன்தான்? இந்த ஊசியை போட்டுக்கொண்டோம்” என நொந்து வெந்து போவது  மாதிரி வயிற்று வழி வேறு. டாக்டர் விஞ்ஞானத்தை இது விசயமாக யாரும் தொடர்பும் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சந்தேகம் வழுத்தது “ ஏதோ? பெரிய தவறு நடந்திருக்கிறது” என. ஆனாலும் சிக்கல் இத்தனை அசிங்கத்தை உண்டு பண்ணும் என யாரும் நினைக்கவில்லை. வெறும் அப்பென்டிக்ஸோடு போயிருந்தால் பிரச்சினையில்லை. இது பெருத்த அவமானமாய், சித்திரவதையாய் ஆகி விட்டது. யாரிடம் சொல்ல முடியாத பெருத்த சோகமாய் போனதுதான் உச்சகட்ட கொடுமை.

இந்த பிரச்சினைக்கெல்லாம் மாசானிதான் முழுக் முதற் காரணம். சென்ற வருடம் அவன் மகன் கருவனுக்கு பெண் பார்க்க சென்னை வந்த மாசானி, தருமன் மகள் பருத்தியை பார்த்து பிடித்துபோனது ஊரே அதிர்கிற மாதிரி நிச்சயம் வைத்தான்.  மிக சாதாரண வீட்டு சடங்கிற்கே லட்சத்தில் செலவு செய்கிற சாதி எங்கள் சாதி. மாசானியோ லட்சத்தை கட்டுகட்டாக அவிழ்த்து கொட்டியிருந்தான்.

லட்சம் கொட்டி நிச்சயம் செய்த அந்த நாளில்தான் தருமன் தனது மூல சாதியை சேர்ந்தவன் இல்லை என சுப்புசெல்லம் சொல்லத் தெரிய வந்தது. மேடையிலேயே கலகம் வெடித்து. தருமனோ “நானும் இதே சாதிதான்..ஆனா புலி வகையறா” - வென எவ்வளவோ வாதாடி பார்த்தான். மாசானி ஒப்புக்கொள்ளவில்லை.நாங்களும், மாசானியும் சிங்க வகையறா. தருமனை காட்டிலும் உயர்ந்த சாதி நாங்கள். திருமணம் நின்று போனது.

பல வருடம் முன்னர் தலைவர் பத்துராமன் எங்கள் சாதியின் அனைத்து வகையறா-வும், இன்னும் மூன்று வெவ்வேறு சாதியும் இரே இனம் என அரசு பதிவுகளில் பதிய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.. அதுமுதல் எங்கள் சாதியும், வெவ்வேறு மூன்று சாதிகளும் சேர்த்து நாங்களாக எங்களை ”வீரகுலத்தார்” என கூறிக்கொண்டோம். அப்படி சொல்லிகொள்வதில் இருக்கிற பெருமையும், கர்வமும், ஒரு திமிரும், அந்த கெத்தும் நான் எம்.பி.ஏ –வில் பல்கலையிலேயே முதன் முதலாக வந்த போது கூட இல்லை. எனக்கும் கூட இந்த இணைப்பு ஆரம்பத்தில் பிடிக்காமல்தான் இருந்தது. பிற்பாடு பெரும்பாண்மை ஆகிற நோக்கில் அது நல்லதாக பட்டது. அப்போதுதான் நாம் பெரிய இனமாக மாறுவோம் என்ற சிந்தனையிலும் எங்கள் கூட்டம் என்ற இறுமாப்பு தந்த போதையும் எனக்கு பிடித்து போனது.

தருமனும் இந்த இணைப்பு சித்தாந்த, பெருமை நோக்கில்தான் மாசானியை பெண் பார்க்க அழைத்தான். மாசானிக்கோ இந்த சாதி இணைப்பில் கொஞ்சமும் உடன்பாடில்லை. ஆனால் பற்றுகிற காதல் பற்ற வேண்டியவர்கள் மனதில் பற்றி கொண்டது. நிச்சயம் நடக்காமல் போன நாளிலிருந்து பத்து நாளுக்கு பின் மாசானியின்  மகன் கருவன் வீட்டை விட்டு ஓடிப்போய் பருத்தியை திருமணம் செய்து கொண்டான். சாதி நிறுத்திய திருமணத்தை காதல் செய்து வைத்தது.  காதல் உண்மையில் ஜெயித்தது. இது மாசானிக்கு பெருத்த அவமானத்தையும், கோபத்தையும் உண்டாக்கியது. இதுதான் பிரச்சினையின் தொடக்கம்.

மாசானி வீட்டு காதல் பிரச்சினைக்காக அமெரிக்க டாக்டரும், பல்கலைக்கழக பேராசிரியரும், இன்ன பிற படித்த மேதாவிகளும் இன உணர்வுடன் கைகோர்த்தார்கள். உடனடியாக சாதிச்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பேராசிரியர் பிதாமகன் சார்பில் ஆள் கணக்கு எடுக்கப்பட்டது. பின்னர்தான் டாக்டர்.விஞ்ஞானம் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு எங்களுக்கான சாதிமருந்தை கண்டுபிடித்தார். அந்த ஊசிக்கு கூட எங்கள் சாதிப் பெயர்தான் வைத்தார்…..”சிங்கவம்சி” . நல்லதொரு சமஸ்கிருத வார்த்தையாம். அந்த ”சிங்கவம்சி” எங்களுக்குள் செய்த குழப்பம்தான் அப்பெண்டிசைட்ஸ்.

வருடம் ஒன்று கழிந்தது. பிரச்சினை இவ்வளவு அசிங்கமாய் போகும் என யாரும் நினைக்கவில்லை. ஊசி போட்டுக்கொண்டு மாத்திரை சாப்பிட்ட அனைவருக்கும் சுமார் 30 சென்டி மீட்டர் அளவில், அடர் கருப்பு நிறத்தில் பின்பகுதியில் ஒன்று நீட்டி கொண்டிருந்தது. அது நீண்டும், வளைந்தும் ஒரு குரங்கின் வாலைப்போல இருந்தது வாலின் இறுதிப்பகுதியில் நான்கைந்து முடிக்கற்றுகள் வேறு இருந்தது. அச்சு அசலாக வால்தான்.

வீட்டைவிட்டு வெளி வேலைக்கு சென்று இன்றுடன் இருபது நாள் ஆயிற்று. பக்கத்து வீட்டு கணேசனுக்கு தெரிந்து அசிங்கப்பட்டாயிற்று. நிஷா ஸ்கூலில் இவளை பார்த்து உடன் படிக்கும் பிள்ளைகள் கிண்டல் செய்வதனால், ”பெரிய பிரச்சினையா இருக்கு சார். நித்ராவை கூட்டிட்டு போங்க” என பிரின்சிபல் கடுமை காட்டி, நான் கோபமுற்று, பள்ளிக்கூட பியூன் சிரித்து, நான் அவனை அடிக்கப்போய்…..சார்! மிருகம் மாதிரி பிகேவ் பண்ணாதீங்க சார்என பிரின்சிபல் வார்த்தை உதிர்த்தார். நான் வெட்கிப்போனேன். வாலை சுருட்டிகொண்டு வெளியேறினேன்.

நானாவது வாலை என் பேண்ட்டுக்குள் செறுகிக் கொண்டேன்..கொள்கிறேன். பாவம் பவானியும், நித்திராவும். அபார்ட்மெண்ட் முழுதும் செய்தி பரவி அவனவன் ஒளிந்து கொண்டு எங்களை கண்காணிக்கிறான்.

பிரச்சினை முற்றிப்போய் தாராபுரத்தில் அத்தையும் மாமாவும் திடீரென தூக்கு மாட்டி கொண்டார்கள். இதுக்கு போய் தற்கொலை செய்வார்களா என்று நான் குழம்பிப் போனேன். சரசு அக்கா-வின் இரண்டாவது பெண் நிலா, அத்தானோடு கடுமையாக சண்டைபோட்டு இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். தருமன் தன் வாலை தானே நறுக்கி இரத்தம் அதிகம் வெளியேறி பஞ்சவர்ணம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாந்தி அத்தையை குழாயடியில் யாரொ ஒருவர் “நாய் வாலு” என அழைக்கப்போய் பெரும் பிரச்சினையாகி மாமா பித்தளை குடத்தால் சொன்னவரின் மண்டையை உடைக்க இப்போது அவர் வாலும் பித்தளை குடமுமாய் போலீஸ் ஸ்டேசனில் இருக்கிறார். ஏகமாய் பிரச்சனைகள். வெளியே சொல்லமுடியாத அசிங்கம். சமூகத்தில் நாங்கள் கேவல ஜந்துக்களாக பார்க்கப்பட்டோம்.

பேராசிரியர் பிதாமகன் மும்பையில் பிலாஸ்டிக் சர்ஜரி செய்து வாலை அகற்றி கொண்டதாக மண்டையன் மாமா சொன்னார். டாக்டர் விஞ்ஞானம் காதம்பரியை விவாகரத்து செய்துவிட்டு யாரோ ஒரு சீனாக்காரியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம்.

”நமக்கு ஊசிய போட்டுட்டு இவன் இப்படி ஊசிப்போயிட்டானே” – சாதி மாறினால் ஊசிப்போவான் என என் பவானி இன்னும் நம்பினாள். அதே சாதியில் இருந்து கொண்டே நாங்கள் ஊசிப்போனோம்.

நான் இவர்கள் சாதியில் பிறந்ததற்கு உண்மையிலேயே நொந்து கொண்டேன். இதில் வேற சாதிக்காரன் நெஞ்ச துணிய உடுத்தக்கூடாதாம்.. தீர்மானம் போட்டாய்ங்களே! யப்பா… நல்ல வேளை நடக்கல. நடந்திருந்தா உண்மையிலே அம்மணமாகவும் உள்ளபடியே மிருகமாகவும் வாலுடன் திரிய வேண்டியதுதான்.

“அய்யய்யோ இந்த வாலை எடுக்கனுமே. யாருகிட்ட போவேன். மெடிக்கல் லீவு முடிஞ்சு ஆபிஸ் போனா.. எல்லாருக்கும் தெரிஞ்சு அசிங்கமாயிடுமே! நாசமா போன விஞ்ஞானம். இப்படி பண்ணிட்டானே!” புலம்பினேன் நான்.

”பிதாமகனுக்காவது போன் போட்டு ஆபரேசன் பண்ணலாமா-ன்னு கேட்போம்….பவானி! ஏய் பவானி!.. அந்த மொபைல எடு!”

       பவானி ஓடிவந்தாள்..... ”ஏங்க! இங்க வாங்கங்க! இங்க டீவியில பாருங்க………”

-----ஸ்க்ரோலிங் ஓடியது----
”இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அந்தமான் தீவில்தான் முதல் மனிதன் தோன்றினான் என்பது நாம் அறிந்ததே! இப்பொழுது தமிழ்நாட்டில் மனிதனிருந்து தோன்றிய குரங்கு - சிறப்பு..........

நான் தலையிலடித்து கொண்டு ரிமோட்டை அணைத்தேன்.

எல்லாம் முடிந்தது.

Sunday, 14 October 2012

பாட்டி சுட்ட வடையும் ஏமாந்த நரியும்

நரிக்கூட்டத் தலைவன் பெரிய நரி தமது பாரம்பரியத்தை கெடுத்த நரியை வசைபாடிக்கொண்டு இருந்தது. தங்கள் உணவு கலாச்சாரத்தையே மாற்றும்படியான செய்கையை செய்த நரியினை அதன் அம்மா நரி, அப்பா நரி, தம்பி நரி, பக்கத்து வீட்டு நரி, எதிர்த்த வீட்டு நரி, ஒத்தக்கால் நரி என எல்லோரும் திட்டி தீர்த்தனர்.

எல்லாம் அந்த வடையால் தான் வந்தது. 

“பசிக்கிற வயித்துக்கு எதை தின்னா என்ன? மனசுக்கு பிடிச்சத சாப்பிடக்கூடாதா?  யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுருக்கலாம், அந்த மந்திரி நரிப்பயல்தான் வாய்க்குள் வடையை திணிக்கிற கணம் கையும் கவளமுமாக பிடித்து தலைவரிடம் மாட்டி கொடுத்துவிட்டான். என நினைத்து உம்மென அழுதது நரி.

பாவம் அந்த காக்கையாவது நிம்மதியா சாப்பிட்டுருக்கும். அதையும் சாப்பிட விடாம பாட்டு பாடு, குத்தாட்டம் ஆடுன்னு ஏமாத்தி கஷ்டப்பட்டு வடைய லவட்டிகிட்டு வந்தா இவிய்ங்க ரொம்பதான் நாட்டாமை பண்றாங்கஎன புலம்பியது நம்ம நரி..

சரி! நாம் போய் அந்த காக்காகிட்ட மன்னிப்பு கேட்போம்னு முடிவு பண்ணி காக்காவைப் போய் பாத்துச்சு நரி. சோகமா இருந்த காக்காவிடம் போய் மன்னிப்பு கேட்ட நரிகிட்ட காக்கையும் வடையை தான் பாட்டியிடம் இருந்த ஒத்த வடையை திருடுனத சொல்லுச்சு.

இரண்டு பேரும் சேர்ந்து பாட்டியிடம் மன்னிப்பு கேட்க பாட்டி வீட்டிற்கு போனார்கள்..

பாட்டியின் வீட்டருகே சென்றபோது பாட்டி யாரிடமோ பேசி கொண்டிருந்தது கேட்டது. 

பாட்டி ஒரு புது வடையினை எடுத்து எலி பிடிக்கும் பொறிக்குள் புகுத்தி கொண்டிருந்தாள்.

ஏன் பாட்டி இன்னிக்கு வேற வடையை வைக்கிறகேட்டான் பாட்டியின் பேரன்.

“ காலையிலே எலிப்பொறிக்குள் வைக்க வச்சிருந்த பருப்பு வடையை ஒரு காக்கா தூக்கிகிட்டு போயிருச்சுடா பேரா.. அதான் உளுந்தவடையை பொறிக்குள்ளாற வைக்கிறேன்” என்று பாட்டி தன் பேரனிடம் புலம்பியது கேட்டது.

ஆகா! எலியை பிடிக்க வச்சிருந்த விஷ வடையை தானே நாம் திருடினோம், அதை போயி நரி நீயும் அபகரிச்சு தின்னப்போனியே!–னு வருத்தப்பட்டது காக்கை.

நல்ல வேளை மந்திரி நரி மட்டும் வரலைன்னா? நான் அந்த வடையை தின்னு செத்து போயிருப்பேன்.என காக்காவிடம் அழுதது நரி.

அது சரி அந்த வடை எங்கே?என கேட்டது காக்கை.

அதை அப்பவே நான் எறும்பு புத்துக்குள்ளே தூக்கி போட்டுட்டேனே 
என்றது நரி.

வா! நாம் போய் எரும்புகளை காப்பாத்துவோம்.என்று காக்கையும் நரியும் விரைந்தன எறும்பு புற்றை நோக்கி. அங்கே எறும்புகள் தங்கள் புற்றை தண்ணியை ஊத்தி மாப் போட்டு, சோப்பை கொண்டு கைகளை நன்றாக கழுவி கொண்டிருந்தன.

காக்கை மெதுவாக சென்று ஒரு எறும்பிடம் பேச்சு கொடுத்தது.                           
எறும்பண்ணே! என்ன விஷேசம்.? எல்லோரும் சேர்ந்து உங்க வீட்ட சுத்தப்படுத்திகிட்டு இருக்கீங்க..

“எவனோ ஒரு களவானிப்பயல் ஊசிப்போன வடையை எங்க வீட்டுக்குள்ள போட்டுட்டு போயிட்டான். அதை சாப்பிட்டு என் தாத்தா கட்டெறும்புக்கு வயித்தால போயிருச்சு. அதான் மிச்சமிருக்கிற வடையை தூக்கிகிட்டு போயி குப்பைத் தொட்டியில போட்டுட்டு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்துறோம்எனச் விளக்கம் சொன்னது எறும்பு.

நரி முகத்தை மறைத்துக்கொண்டு, வாயை சுழ்த்து உம்மென வைத்துகொண்டு காக்கையை முறைத்தது.

பிறகு இருவரும் தனிதனியே தம் வீட்டுக்கு சென்றனர்.

கதை சொல்லும் நீதி:
1. அடுத்தவன் வீட்டு முன்னால் மீந்துபோன நம் குப்பையையும், உணவு பண்டங்களையும் போடக்கூடாது.
2. திருடக்கூடாது. அல்லது நமக்கு பயன்படாத பொருளை திருடக்கூடாது; முக்கியமா அடுத்தவர் பொருளை ஏமாற்றி அபகரிக்கக் கூடாது.
  

Thursday, 13 September 2012

ஏலியன்களும் ராசா சிக்ஜாக்-கும்

நிலவில் சிறு மாற்றம் தெரிந்தது. பெளர்ணமியா? அதற்காக இளஞ்சிவப்பு நிறத்திலா நிலவு தெரியும்,செம்மன் புழுதியில் காற்றடித்தால் எப்படி ஒரு காட்சி நம் கண்ணில் அகப்படுமோ அதுபோல் நிலவு செந்நிறமாய் ஒளித்தது.

நிலவு இப்படித்தான் இப்பொழுதெல்லாம் இருக்கிறதோ என்று சந்தேகமாகவும் இருந்தது.ஏனெனில் நிலவை மிகவும் உன்னிப்பாக நான் என் சிறு வயதில் மொட்டைமாடி தூக்கத்தின்போதுதான் கவனித்துள்ளேன், இன்றைய 2025ன் அவசர வாழ்வில் நிலவு என்னை விட்டு தொலைதூரம் போய்விட்டது.

ஏசியை ஆஃப் செய்து தூங்கினால் ராஜா தூங்கமாட்டான். மின்சாரம் சேமிக்கிர நேரம் காலையிலிருந்து இரவாக மாறிவிட்டது. நடுநிசியெனில் தூக்கத்தில் இருப்போம். ஏசியும் ஓடாதிருப்பின் விழிப்பு வராது. தூங்கச் செல்கிற நேரமாய் 9 மணிக்கு மின்சேமிப்பு நேரத்தை அரசு மாற்றிவிட்டபடியால் யாருக்கும் தூக்கம் வருமாட்டேன் என அடம் பிடிக்கிறது..

காற்றாடியில்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன் தான் நான்.இருப்பினும், இன்றைய வசதிகளை அனுபவித்தபின் வெறும் காற்றாடி மட்டும் தூக்கத்தை ஊக்குவிப்பதில்லை.ஏசி இல்லாமல் தூக்கம் வசப்படுவதுமில்லை.

மொட்டை மாடி செல்வோம் என என் பையன் இராஜா சொன்னான். என் மனைவியும் அம்மாவும் நாளை அரைக்கவிருக்கிற கொள்ளு சட்னி ரெசிபியை விவாதித்து கொண்டிருந்தனர்.

ராஜாவும் நானும் கொசு அருகில் வராத நீம் மேல்சட்டையையும், டிராக்கையும் அணிந்துகொண்டு இதோ! மொட்டைமாடிக்கு சென்றோம்.

நட்சத்திரங்களை என் பையன் எண்ணிகொண்டு இருக்கையில் இறுதியாக நிலவை பார்த்து “அப்பா! ஏம்பா? நிலா ரெட் கலர்ல இருக்குது?” என்றான்.

நானும் அதியசமாய் பார்த்தேன்.இதுமாதிரி தருணத்தில் நான் கேள்விப்பட்ட ”நிலா பாட்டி” உள்ளே  என்ன செய்துகொண்டிருப்பாள் என சிந்தித்தேன்.

”நிலா ஏம்பா?  ரெட் கலராச்சு! சொல்லுங்கப்பா?”

“நிலா ஜாம் சாப்டுருக்கும் டா!”

“அப்பா! நிலா என்ன Boy-ஆ Girl-ஆ ஜாம் சாப்ட.! எதுக்குன்னு சொல்லுங்கப்பா?”

”அமைதியா இரு ராஜா! நிலாவ பாரு!”

”எதுவோ? நிலா மேல இருந்து கீழ வர்ற மாதிரி இருக்குப்பா?”

”அதெல்லாம் இல்ல தம்பி! தூங்கு” என்றேன்.
என் அப்பா எனக்கு நிலவு பாட்டியின் கதையை சொன்னதை போல இவனுக்கு அந்த கதையை சொல்லி தூங்க வைக்க முடியாது. வடை சுட்ட பாட்டியையும், வடை சுட்ட காக்கைக்குமே நீண்ட ஒரு விசாரணை கமிஷன் வைத்த இவன் நிலவு பாட்டிக்கு என் மண்டையை உருட்டு உருட்டு என் உருட்டிவிடுவான்..வேண்டாம் இம்சை.

ஆனாலும் நிலவில் ஏதோ நிகழ்வதாய் எனக்கு பட்டது.
கூர்ந்து பார்த்தேன்.. எதுவோ நிலவில் இருந்து பிரிவதாய் உணர்ந்தேன்.

யாருக்காவது போன் செய்து கேட்போமா? யாரிடம் கேட்க?.
குறுஞ்செய்தி வந்திருக்குமே? கூகுள்-ல் ஏதாவது செய்தி வந்துள்ளதா? மொபைலில் தேடினேன். இன்பக்ஸிலும் இல்லை. தொலைக்காட்சி செய்தியில் சொன்னார்களா?. ம்கூம்.

எதுவும் இல்லை.

ஆனாலும் நிலவில் இருந்து ஒரு புகை மண்டலம் கீழ் நோக்கி வருவது தெரிகிறது. நிலவிலிருந்து கீழே ஒரு ஆயிரத்து சொச்சம் கிலோமீட்டர் தாண்டி புகை மண்டலம் வருவதாய் தெரிந்தது.
புகை குறுக குறுக மனித ஒருவமாய் அது சிறியதாக மாறுவதை இருவரும் கண்டோம்.

ராஜா பயத்தில் என்னை கட்டிகொண்டான்.

மேகங்கள் எல்லாம் சிகப்பு நிறமாய் மாறக் காண்கிறோம். புகை உருவங்கள் நான்காக பிரிகிறது. அதில் ஒரு  புகை உருவம் மேகத்தை கிழித்து, உடைத்து கொண்டு வந்தது. மேகம் உடைந்து தண்ணீர் புயலும் சேர்ந்து கொண்டது.

கண்ணுக்கு தெரிந்த காட்சி கலைவதற்குள் நாங்கள் முற்றிலுமாக நனைந்திருந்தோம். ஏதோ? சிகப்பு நிற திரவம் தண்ணீருடன் கலந்து எங்கள் ஆடைகள் நிறம் மாறியிருந்தன. அந்த சிகப்பு புகை உருவம் மேகத்துடன் கலந்து தண்ணீரை மாற்றிருந்தது.

நானும் பயந்துபோய் இராஜாவை அணைத்து தூக்கிகொண்டு வீட்டிற்குள் இறங்கினேன்..

சிறிது நேரத்தில் டமார்! டமார் என வெடிச்சத்தம் போல நான்கு சத்தங்கள் .
கேட்டது.

புகை உருவங்கள் எங்கோ? தரை இறங்கி விட்டன.

”அப்பா! பேய் மாதிரி வந்துச்சே! அது நம்ம் வீட்டுக்கு வந்துருமா? என இராஜா அழுதான்.

“ கெட்டவங்க வீட்டுக்குத்தான் அது வரும், நம்ம வீட்டுக்ககு வராது.. நானும் நீயும் ஸ்ட்ராங் வேற. யாராலும் நம்ம ஒண்ணும் பண்ண முடியாது “ என்று இருவரும் கைகளை டேஷ் என கிளாப் செய்தோம்.

Sunday, 2 September 2012

நேர்மை


நான் 1988ல் 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபொழுது ஒருநாள் காலை நானும் என் தம்பியும் பள்ளிக்குள் சென்றோம்.சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் மூன்று 100 ரூபாய் நோட்டுக்கள் கீழே கிடப்பதை கண்டோம். 
நான் அவைகளை கையில் எடுத்தேன்.என்னை சூழ்ந்த 10வது, 12வது படிக்கும் பெரிய பையன்கள் “ Boy! Give those to us. We will handle them to Shirley Mam”  கண்டிப்புடன் கூறினர். அதில் ஒருத்தன் “ No. friends. Boy! you too come with us and you yourself give it to Shirley Mam.” என்றான். 

நானும் உடன் சென்றேன். ஒரு வாரம் முன்புதான் நாயேஎன என் நண்பனை தமிழில் திட்டியதற்காக ஷ்ர்லி மேம்-டம் திட்டு வங்கியிருந்தேன்.அந்த பையனுடன் சென்று ஷர்லி மேமி-டம் பணத்தை கொடுத்தேன்.என்னை ஷர்லி மேடமும் மற்றோரும் பாராட்டி அனுப்பினார். 

அடுத்து வந்த திங்கள் கிழமை ASSEMBLY-ல் அனைவர் முன்னிலையில் என்னை அழைத்து ஒரு பரிசும் கொடுத்தனர். மகிழ்ச்சியில் அப்பரிசை எடுத்துகொண்டு வருகையில் வீட்டு வாசற்படியில் விழுந்து அப்பரிசின் உள்ளே இருந்த வெள்ளித் தாம்பாளம் நெளிந்தது.

 இதுபோல் நிறைய நிகழ்வுகள் உண்டு. நிற்க..

மூன்று மாதம் முன்பு புதிதாக ஒரு 4GB PENDRIVE வாங்கினேன். 15 நாளில் அதனை தொலைத்துவிட்டேன்.எங்கு தொலைத்தேன் என்ற ஞாபகமும் இல்லை.. நானும் தொலைத்ததை மறந்தும் விட்டேன்.

நேற்று முன்தினம் இரவு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“ஹலோ! சார் நான் கணேஷ் பேசுறேன். நீங்க சமீபத்துல  படிப்பு சம்பந்தமா எதையாவது தொலைச்சீங்களா?எனக் கேட்டார்.

இல்லையே!என்றேன்.

”நீங்க பிரபுதானே?” -கேட்டார்

”ஆமாம்!ஏன்?” - என்று குழம்பினேன்.

இல்ல சார்.என்கிட்ட ஒரு பென்டிரைவ் இருக்குது.விகாசா ஸ்கூல் பக்கத்துல கிடந்தது....எனச் சொல்லி முடிப்பதற்குள்.

அது! என்னோடதுதான் சார்... சில்வர் கலர், HP 4GB பெண்டிரைவ்.. என்றேன் நான்.

இப்பதான் எதுவும் தொலைக்கலைனு சொன்னீங்க.. பெண்டிரைவ்னு சொன்னதும், உங்களோடதுன்னு சொல்றீங்க??

”இல்லைங்க.. நான் பெண்டிரைவ் தொலைச்சு 3 மாசமிருக்கும்”

இதை எடுத்து 20 நாள் இருக்கும் சார்..சில்வர் கலர்தான், HPதான். உங்களோடதுன்னு நேத்து என் சிஸ்ட்த்துல போட்டு பாத்ததுனால தெரிஞ்சது சார்என்று சொல்லி “SORRY சார் என்றார்.

இல்லை சார். நான் தொலைச்சு கண்டிப்பா 3மாசம் இருக்கு சார்... ஏன் சார்? உங்க்கிட்ட சிஸ்டம் இருக்கு.. நீங்களே வச்சுகிடலாம்லஎன்றேன் .

அது உங்களோடதுதான சார். நான் எப்படி வச்சுக்க முடியும். சரிங்க சார்.வந்து வாங்கிகிறீங்களா?எனக் கேட்டார்.

நாளைக்கு வர்றேன் சார்என்ற நான் அடுத்த நாள் காலை மறந்துவிட்டேன்.

மாலை 4 மணியளவில் மறுபடியும் அழைத்தார் அவர். “சார். வர்றீங்களா?

அவரை சந்திக்க விரைந்தேன்..
ஹால்டிராம்ஸ் சோன்பப்படி வாங்கிகொண்டு அவரை போய் சந்தித்தேன்..
கணேஷை பார்த்ததும் தெரிந்தது அவர் நேர்மையானவராக இருப்பவர் என. முகத்தில் அவ்வளவு அப்பாவித்தனம்.
சார் இதை தொலைச்சு 3 மாசமாச்சு சார்.. ஒருவேளை! நீங்க எடுக்கிறதுக்கு முன்னாடி வேற யாராவது எடுத்திருப்பாங்களோ? என கிண்டலாக கேட்டேன்.,  
இருக்கலாம் சார்என சிரித்தார். பென்டிரை-வை வாங்கிகொண்டு வீடு வந்தேன்.
எனது லேப்டாப்பில் போட்டு பார்த்தேன். உள்ளே நிறைய சினிமா பாடல்கள், சாமி படங்கள்.
அட! உண்மையிலேயே கனேஷுக்கு முன்னர் யாரோ இதனை எடுத்து பயன்படுத்தியுள்ளனர் என உறுதியானது. கணேஷிடம் அழைத்து விவரத்தை சொன்னேன். 
சந்தோஷப்பட்டார். ”சார்! சோன்பப்படி நல்லா இருந்தது சார்” என்றார்.