Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Monday, 4 November 2013

உங்க ஓட்டு

குமாரபளையம் செல்லும் பேருந்தில் ஒருத்தர்….

”ரிசர்வ் பேங்கும், கவர்மெண்ட்டும் சேர்ந்து நிறைய பணத்தை அச்சடிச்சுட்டான். அதான் பணப்புழக்கம் அதிகமா ஆயிடுச்சு. அப்போதான் நிலமெல்லாம் வாங்கி போட்டாங்க நிறைய பேர். பெரிய பெரிய பில்டிங் கட்டுனான். அப்போதான் திமுக மந்திரி….அவரு பேரு என்னங்க? ஆங்...ராஜா-ன்னு ஒரு மந்திரி. அந்நாளு எல்லாப் பணத்தையும் முடக்கிட்டான். திமுக கணக்குக்கு அந்த பணத்தையெல்லாம் டெர்மினேட் பண்ணிட்டான். அதான் இப்போ எங்க வியாபாரம் டல்லாயிடுச்சு”.

”நீங்க என்ன வியாபாரம் பண்றீங்க?”

”நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் சார்!”

”ஓ! இங்க ஏர்போர்ட் வரப்போகுது, மெடிக்கல் காலேஜ் வரப்போகுது-ன்னு சொல்லியே திறமையா நிலத்தை வித்துடுவீங்க. கரக்டா?” என்று சிரித்தேன்.

”அப்படியெல்லாம் சொன்னாலும்..இப்பெல்லாம் மக்கள் விவரமா இருக்காங்க சார்”

”உங்க வீட்டுல எத்தனை ஓட்டு சார்!”

”பதினாறு சார்! பள்ளிப்பாளையுத்துல நம்ம ஃபேமிலிதான் பெருசு”

”உங்க விவரத்துக்கு நீங்க ஓட்டே போடக்கூடாது சார்”
”ஏன்? சார்!”

”அரசியல் சாக்கடை சார். நீங்கெல்லாம் ஒருத்தனுக்கும் ஓட்டுப் போடக்கூடாது சார்”

”ஆமாம் சார்” என அழகாக வெட்கப்பட்டார்.

இந்த மாதிரி புண்ணியவானுங்க என்ன மயித்துக்கு ஓட்டுப் போடனும் என்ற என் மைண்ட் வாய்ஸ் உடன் இறங்கி கொண்டேன் கு.பாளையத்தில்.

சலித்துபோன நாத்திகம்

நம் சமூகத்தின் பெரும் நோய் சலிப்படைதலும், மறத்தலும். ’பகுத்தறிவு’ , ’நாத்திகம்’ போன்றவையெல்லாம் பழைய சொல்லாடல்கள் ஆகிவிட்டன. ’நாத்திகம்’ என்ற சொல்லாடலை “நாஸ்தி” என்ற புரிதலோடுதான் அர்த்தப்படுத்தி கொள்கிறான் சாமான்யன். இச்சொல்லாடல்கள் ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்துபோனது. இப்போது அது பழகிப்போய் சலிப்பாகவும், எரிச்சலாகவும் ஆகியிருக்கிறது.

’ஆன்மீகம்’ அப்படியில்லை. மிகத்திறமையாக ஆன்மீகத்திற்கு புதுத்தலைப்பிட்டு மெய்ஞானம், மெய்யறிவு, வாழும் கலை, உயிர் தேடல், யோகம் என்றெல்லாம் மாற்றிப்போட்டு ஆன்மீகத்தை வளர்க்கின்றனர் சாமியார்கள். இச்சொல்லாடல்களை பிரபலப் படுத்த பிரச்சார கருவியாக அமிர்த யோகம், கிருஷ்ண விழிப்புணர்வு, நித்ய தர்மம், இயேசு நேசிக்கிறார்/ விடுவிக்கிறார் என்றெல்லாம் புரட்டிப்போட்டு விழாக்களும், பட்டறைகளும் வேறு.

உண்மையில் ’மெய்யறிவு’, ’மெய்ஞானம்’ எல்லாம் பகுத்தறிவாளர்கள் உபயோகப்படுத்தியிருக்க வேண்டிய வார்த்தைகள். மிகத் தெளிவாக ஆன்மீகச் சாமியார்கள் அதனை தமதாக்கி கொண்டனர்.

புதிய தலைப்புகளோடு, புதிய சொல்லாடல்கள் சலிப்படைதலை நோயென கொண்டுள்ள சமூகத்திற்கு மிகவும் அவசியம். நாத்திகத்திற்கு மாற்று வார்த்தையும் புதிய சொல்லாடல்களும் மிக மிக அவசியம்.

மத விழாக்கள்

மதங்கள் யதார்த்த உலகின் மனிதனை முக்கியப்படுத்தாமல், கற்பனாவாதத்தின் கதாபாத்திரங்களை முன்னிலைபடுத்துவதால், இன்றைய முன்னேற்றம், மாற்றத்திற்கு எதிராக இருப்பதால் அனைத்து மதங்களும் மனிதனுக்கு எதிரியே.

ஆனாலும் மதங்கள் தத்தமது பிரச்சார வழமையாக கொண்ட கொண்டாட்டங்கள். திருவிழாக்கள் மூலமாக பகுத்தறிவு கொண்டோரையும் சில நேரம் தம் பக்கம் இழுத்துவிடுகிறது. 

மார்க்ஸ் சொன்னது போல மதம் அபின் போல. அது தன் வேலையை சரியாக செய்கிறது. இழுக்கிறது போதை. அழைக்கிறது கொண்டாட்டம்.

பகுத்தறிவு உள்ளோர் மனதளவில் இத்திருவிழாக்களை வெறுத்தாலும், ஊரோடு சேர்கிற கொண்டாட்ட மனநிலையில் தாமும் அம்மதத்தின் பிரச்சார கருவியாக மாறிவிடுகிறார். அதன் வெளிப்பாடுதான் அதற்கு வாழ்த்து சொல்வது.

நமக்கு எல்லா மதமும் சம்மதமில்லை என்று ஆனவுடன், மதத்தால் நன்மை இல்லை என்றானவுடன் ஆட்டுப் புழுக்கையில் முன் புழுக்கை என்ன, பின் புழுக்கை என்ன? கடவுளர் சாயம் பூசப்பட்ட அனைத்து மத விழாக்களும் அறிவுக்கு அப்பாற்பட்டவையே! அவ்விழாக்களுக்கு வாழ்த்துக்கள் பகிர்வதும் மடமையே!



Sunday, 27 October 2013

ஈரோடு லாட்ஜும், சுஜாதா புத்தகமும்

ஒரு மாதம் முன்பு ஈரோடு சென்றிருந்தபோது கிளிஃப்டன் என்ற
லாட்ஜில் தங்க நேர்ந்தது. படித்து மறந்துபோய் குளியலறையில் ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன்.சுஜாதா எழுதிய கட்டுரைகள்.

பின்பு தொலைபேசியில் லாட்ஜ் மேலாளரை அழைத்து எடுத்து வைத்திருக்குமாறும் பின்னர் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றும் சொன்னேன்.

சரி! என்றார்.

நேற்று ஈரோடு சென்றதால் அங்கு போய் புத்தகத்தை தருமாறு கேட்டேன். அங்கிருந்தவர் தேடிப்பார்த்தார். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த மேலாளருக்கு தொலைபேசினார்.

பிறகு என்னிடம் வந்து “சார்! போன வாரம் இந்த சரஸ்வதி பூஜை சாமி கும்பிட்டப்போ! எல்லாத்தையும் சுத்தம் பண்ணினோம். அப்போ! அந்த புத்தகத்தை குப்பையோட குப்பையா போட்டுட்டாங்க சார். சாரி! சார்.”

காணவில்லை என்று பொய் சொல்லியிருக்கலாம் அவர். குப்பையில் என்றவுடன் மனம் வருத்தப்பட்டது.

”ஏன்? சார் குப்பையில போட்டாங்க? யாருக்காவது குடுத்திருக்காம்ல.”

”யாரு சார் படிக்கப் போறாங்க? நமக்கே அதெல்லாம் பிடிக்காது!”

”சரி! வர்றேன் சார்! ஆனா இனிமே புத்தகங்கள குப்பையில போட்டுடாதீங்க” – என விடைபெற்றேன்.

சரஸ்வதி பூஜை கொண்டாடினாய்ங்களாம்!
புத்தகத்தை குப்பையில போட்டாங்களாம்!

இவிய்ங்க கொண்டாடுறதுதான் சரஸ்வதி பூஜை.

அம்மா பஃப் வச்ச ஜாக்கெட்காரி! கல்விக்கடவுளே! பாத்துக்கம்மா..இவனுங்கள!

Thursday, 24 October 2013

மென்மையான பெண்ணடிமை கத்தி


”வெட்கப்படும்போதுதான் நீ அழகாக இருக்கடி” – ஆணாதிக்கத்தின் மென்மையான மிகவும் கூர்மையான கத்தி இப்படித்தான் பெண்களிடம் பாய்ச்சப்படுகிறது.

”அவ அடக்கமான பொண்ணு” - சமூகத்தின் பெண்ணடிமை கண்ணோட்டம் இப்படித்தான் பெண்களை அசிங்கப்படுத்தி மனச்சிறைக்குள் அடைத்து விடுகிறது.

இதை காதில் வாங்குவதை விரும்புகிற பெண்களோ அடிமைத்தனத்தில் இன்னும் இன்னும் முழுமையடைகிறார்கள்.

பிரான்ஸ் பெண்ணின் தீக்குச்சி குப்பை

இன்று பாண்டிச்சேரியில் பேருந்தில் அமர்ந்திருந்தபொழுது ஒரு பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை அவள் கணவன் பேருந்தில் ஏற்றிவிட வந்திருந்தான். வண்டி கிளம்புகிற வரை வெளியில் நின்று கொண்டிருந்த அப்பெண் தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை பற்ற வைத்தாள். பற்ற வைத்த தீக்குச்சியை தன் கையை உதறி அணைத்தாள்.

அடுத்து அவள் செய்ததுதான் இந்த திருநாட்டில் யாருமே செய்யாதது அல்லது செய்து நான் பார்க்காதது.

அணைத்த தீக்குச்சியை கீழே எறியாது அதே தீப்பெட்டிக்குள் உள்ளே வைத்துகொண்டாள் அப்பெண். சரி! அணைக்கப்போகும் சிகரெட்டை என்ன செய்வாள்? பார்ப்போம்.. என நான் கண்காணித்தேன். சிகரெட்டை போட தனியாக ஒரு தகர டப்பாவை எடுத்தாள். நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெத்தலைப் பெட்டியை எனக்கு ஞாபகபடுத்தியது அப்பெட்டி.

தீப்பெட்டியிலும் வெத்தலைபெட்டியிலும் தெரிந்தது – அப்பெண்ணின் சுய ஒழுக்கமும், அவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில் குப்பைத்தொட்டியே இல்லாததும்.

Monday, 21 October 2013

பகுத்தறிவு பிளேடு

பகுத்தறிவு என்பது ப்ளேடால் பென்சில் சீவுவது போல...... நம் திறமையும் அறிவும் இணைந்து செயல்பட்டு நோக்கம் கூர்மையாகும். முனை உடைந்தாலும் தவறு நமதென்று உறுதியாகும்.

ஆன்மீகம் என்பது ஷார்ப்பனர் கொண்டு பென்சில் சீவுவது போல..... பென்சில் கூர்படுமா, முனை உடைபடுமா என்று யூகிக்கக் கூட முடியாது.உடைந்தாலும் சுலபமாய் ஷார்ப்பனரை குறை கூறி விடலாம்.

மோடியின் கக்கூஸ்

”கோயில் கட்டுவதைவிட முக்கியம் இந்தியாவில் கழிப்பறை கட்டுவதே” -என்ற கருத்து முத்துக்களை சிந்திய மோடி பகவான் உண்மையிலேயே அப்படி சிந்தித்து ஒரு கழிப்பறை கட்டுகிற திட்டத்தை நடைமுறைபடுத்தினால் எப்படியிருக்கும்...இந்தா இப்பிடித்தான் இருக்கும்.


1. கக்கூஸ் கட்ட எல்லாரும் காவிக்கலர் செங்கல் கொண்டு வரனும். ”ராம்”-னு அதுல எழுதியிருக்கனும்.

2. உள்ளாற வைக்கிறதுக்கு சாமி படம் கூட தரலாம்.

4. ஒவ்வொரு ஊரிலும் நான்கு கக்கூஸ்...

FC கக்கூஸ், BC கக்கூஸ், SC கக்கூஸ், ST கக்கூஸ். எல்லாருக்கும் சம வாய்ப்பு.

5. 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் இது நடைமுறைப் படுத்தப்படும்.

6. கக்கூஸ் போயிட்டு வந்தவுடனே விபூதி, குங்குமம், சந்தனம் தரப்படும்.

7. இந்துக்களுக்கு வரிசையில்லை.


8. முஸ்லிம்கள், கிறித்தவர்கள் இரண்டாம் குடிமக்கள்.. எனவே இந்துக்கள் போய்விட்டு வரும்வரை காத்திருத்தல் அவசியம்.
9. மது அருந்திவிட்டு, மாமிசம் சாப்பிட்டுவிட்டு வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

இந்த கக்கூஸ் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்கான பணம் ஸ்விஸ் வங்கியில் முடங்கியிருப்பதால் அதனை வெளிக்கொண்டுவர மோடியை பிரதமராக்கி அப்பணத்தை கொண்டு கணக்கற்ற கக்கூஸ் கட்டி அங்கு இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி, பணப்புழக்கத்தை பெருக்கி , இந்தியாவை வல்லரசாக்குவதே “மோடி கக்கூஸ்” திட்டம்.

Wednesday, 10 July 2013

பொய்ப் புளுகன்களும்,எக்ஸ்பிரஸ் மால்-களும்

தனியார் வசம், அதிலும் சிண்டு முடிந்துவிடும் ஆதிக்க சாதி வர்க்கத்தின்  பத்திரிக்கைகள் இருக்கிறவரை  ’நடுநிலை’-யும்,  ’உண்மையின் உரைகல்’- லும்  சாத்தியமில்லை. 

மல்டி மால் நடத்துகிற, பள்ளிக்கூடம் நடத்துகிற, கல்லூரிகள் நடத்துகிற அரசியல்வாதிகளை பற்றி உண்மை, அவதூறு, கிசுகிசு, பரபரப்புச் செய்திகளை போடுகிற தெருப்புழுதிகள் மல்டி மால் நடத்துகிற, பள்ளிக்கூடம் நடத்துகிற, கல்லூரிகள் நடத்துகிற பத்திரிக்கை வெண்ணைகளை பற்றி எழுத  முன்வருமா?.

தர்மபுரியில் ஆதிக்க சாதிகள் நடத்திய வன்முறை பற்றி தினமலரோ, தினமணியோ, ஆவி, ஜூவி, குமுதம் ரிபோர்ட்டர் போன்ற பத்திரிக்கை சிகாமணிகள் ”இரு சாதிகள் செய்துகொண்ட கலவரம்’ என ஒற்றை வரியில் எழுதி மூடிக்கொண்டதும்,  இன்று இளவரசன் மரணத்திற்கு அப்பால் அவன் படத்தை தாங்கி அட்டைப்படம் போட்டு சாவுப்பிச்சை கேட்பதும்,  இவைகளெல்லாம் நாட்டைக் காக்கும் நாலாவது தூணா, இல்லை.. இழவு வீட்டில் ஆதாயம் பிடுங்கும் பிணந்திண்ணிகளா எனக் கேட்கத் தோன்றுகிறது.

இந்த பத்திரிக்கைக்கார யோக்கிய மயிராண்டிகள் ’ஆக்கிரமிப்பு’, ’அதர்மம்’, ’அட்டகாசம்’ , என தலைப்பு போட்டு அடுத்தவனை ஆயிரம் நொல்லை பேசிவிட்டு ”எக்ஸ்பிரஸ் மால் கொலை, தினமலர் நெல்லைக்கோயில் இட ஆக்கிரமிப்பு” போன்ற செய்திகளை தம் பொச்சுக்குள் அமுக்கிகொண்டு இருப்பது என்ன பத்திரிக்கை தர்மமெனத் தெரியவில்லை.


அடுத்தவன் படுக்கையறையில் நடப்பதை விளக்கு வைத்து பார்த்ததுபோல் எழுதுகிற, புறணி பேசுகிற மயிராண்டிகள் ஏன் EXPRESS AVENUE - வில் நடந்த கொலையை, கொலை செய்தவனை, அதை எதிர்த்து குரல் கொடுத்தவர்களை, அதை தடுக்க ஆயத்தமாகி தோற்றுப்போனவர்களை, காவல்துறையினரிடம் சண்டைபோட்டவர்களை ஒரு பேட்டி எடுத்து எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் போடக்கூடாது.

பத்திரிக்கைகாரன் தருகிற எலும்பை எல்லா பத்திரிக்கை நாய்களும் கவ்விக் கொண்டதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட கொலை நிகழ்வு காணொளி.....

Sunday, 9 June 2013

காதலை சொல்வது எப்படி? - ”வித் காதல் கிட் அட்டாச்டு”

ஒரு நீள A4 பேப்பரை எடுத்துகொள்ளவும்.... உங்கள் பயோடேட்டாவை தெளிவாக (வருமான விவரத்தோடு) டைப் செய்து கொள்ளவும்.
பத்திர பதிவு அலுவலகம் சென்று 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் வாங்கிக்கொள்ளவும்.இணைப்பாக 5 உதிரி தாள்அல் வாங்கிக் கொள்ளவும்.

1வது பக்கத்தில்..
பார்ட்டி 1ஆக- உங்கள் பெயர், தந்தை பெயர் , முகவரி, மாவட்டம், பின்கோடு டைப் செய்து கொள்ளவும்.
பார்ட்டி 2ஆக- உங்கள் காதலி/காதலன் பெயர், தந்தை, தாய் பெயர், முகவரி, பின்கோடு டைப் செய்து கொள்ளவும்.

2வது பக்கத்தில்.... உங்களின் வருங்கால மாமனார்/மாமியாருக்கு ஒரு ஒப்புகை கேட்பு கடிதம் எழுதவும். இதில் உங்கள் சாதி, அந்தஸ்து, வருமானம், நீங்கள் பார்க்கிற வேலை (வேலை இல்லையெனில் வேலைக்கான வாய்ப்பு), இதர குறிப்புகளை டைப் செய்து கொள்ளவும்.

3வது பக்கத்தின்...
மேற்பாகத்தில் உங்கள் காதலன்/காதலி சார்ந்த சாதி சங்கத்தின் தலைமைக்கு ஒரு ஒப்புகை கேட்பு மனுவும்,
கீழ்பாகத்தில் உங்களின் சாதி சங்க தலைமைக்கு ஒரு ஒப்புகை கேட்பு மனுவும் டைப் செய்து கொள்ளவும்.

4வது பக்கத்தில்... நீங்கள் விரும்புகிற பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதவும். உங்கள் மனதுக்கு பிடித்தவாறு எழுதாமல், படிக்கிற அத்தனை பேருக்கும் பிடிக்கிறமாதிரி எழுதுவது சால சிறந்தது.
இத்துடன்...
• உங்கள் வருமான சான்று.
• உங்கள் சாதிச் சான்று.
• உங்கள் மத குருமார்களிடமிருந்து பெறப்பட்ட ஆசிர்வதிப்பு கடிதம்.
• உங்கள் மார்பளவு MAXI SIZE புகைப்படம் ஒன்று.
இணைக்கவும்.

ஏற்கனவே எழுதி வைத்த உங்கள் பயோடேட்டாவோடு இவையணைத்தையும் இணைத்துகொண்டு அனைவரிடமும் சென்று ஒப்புகை கையெழுத்து வாங்கிய பின்னர் நேராக உங்கள் காதலியை காந்தி பார்க்கிற்கோ, ஃகாபி டே-விற்கோ வரவழைத்து, முடிந்தால் முத்தங்களுடன் உங்கள் காதலை சொல்லவும்..

NOTE : முன்னரே நீங்கள் காதல் சொல்லப்போகும் காதலி இதுபோல் ”காதல் KIT”-ஐ வைத்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொள்வது அவசியம்..

”வெல்க காதல்... வாழ்க காதலர்கள்”

Tuesday, 16 October 2012

கொசுவை ஒழிப்போம்

உங்கள் வீட்டில் 2வீலர், 4வீலர் துடைத்த, அடுப்படியை சுத்தம் செய்த எண்ணெய் பிசுக்கு நிறைந்த பழைய துணிகளை எடுத்து சேமித்து வையுங்கள்.

அவற்றை இறுக்கமாக எழுமிச்சைபழம்போல் அளவுள்ள பந்துபோல் சுற்றிக்கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டருகில் தண்ணீர் தேங்கி உள்ள சிறு குட்டைகள், நீர் நிலைகளில் அவற்றை போடுங்கள்.

எதுக்கு போடனும்னு கேட்கிறீர்களா?????

அந்த பந்துகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு தண்ணீர் நிறைந்த மேற்பரப்பிற்கு வரும்.. தேங்கி உள்ள நீரில் உயிர் வாழும் கொசுக்கள், அதன் முட்டைகள், அதன் லார்வாக்கள் ஆக்சிஜன் கிடைக்காது இறந்துவிடும்; கொசுத்தொல்லை அழியும். டெங்கு பரவாது.

////// இதைத்தான் நம்ம மாநகராட்சி ஊழியர்கள் ஒர்க்‌ஷாப், ஆட்டோமொபைல் கடைகளின் மூலம் பெருவாரியாக திரட்டி நீர் நிலைகளில் போடுகிறார்கள்./////