Sunday, 15 July 2012

அண்ணா கொடி அங்காடி

எடுத்தியம்பிய அனைத்து சம்பவங்களும், பாத்திரங்களும் உண்மை.


அண்ணா கொடி அங்காடி
-அ-

என் சுயநலத்திலும் ஒரு பொது நலம் கலந்திருக்கிறது; ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு குளத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதுபோல கலைஞர் எழுதிய வசனம் – பராசக்தி.

கட்சியை நம் வியாபாரத்திற்கு உபயோகபடுத்தினால் அதில் நிறைய முறைகேடாக சம்பாதித்து கோட்டை கட்டி விடலாமென கனவு காண்கின்ற தோழர் பெருமக்களுக்கு சம்ர்ப்பணம்.


-1-

கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக(அரசு போக்குவரத்து கழகம்) மதுரை பணிமனையில் வேலை பார்க்கிற கந்தன் தன் இருபதாண்டு கால சர்வீஸில் மாதாமாதம் ரூ.500ஐ கட்சிக்காக செலவு செய்கிறவர். தனது கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கில் மாதாமாதம் அத்தொகையினை செலுத்தியும் வருகிறார். போஸ்டர் அடிப்பது, தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்,தேர்தல் என அப்பணத்தை செலவு செய்வார்.  திமு கழக மாநாடு சமயங்களில் தன் செலவில் தன் பணிமனை வண்டியில் 30 பேரை அழைத்துகொண்டு மாநாட்டில் போய் கலந்துகொண்டு வருவார்..கலைஞர் மேல் அப்படி ஒரு பிடிப்பு. கொள்கையிலும்தான். தன் பெயர் கந்தசாமியில் “சாமியை நீக்கி கந்தன் என வைத்துகொண்ட கொள்கைவாதி.

ஆண்டிபட்டி இடைதேர்தல் பிரச்சாரம். ஜெயலலிதா என்ற மத யானையை எதிர்த்து வைகை சேகர் போட்டி. கடமலைகுண்டில் கலைஞரின் பிரச்சார பொதுக்கூட்டம். அவரவர் வேலைக்கு விடுப்பு எடுத்துகொண்டு ஆண்டிபட்டி செல்ல முடிவெடுத்தோம்.கந்தனும் இரண்டு நாள் விடுப்பில் வந்தார். நான், கந்தன், வெங்கிடு, சீனி, பாலா , இன்னுமொரு எட்டு பேர் சேர்ந்துகொண்டு மதுரையிலிருந்து தேனி செல்லும் பேருந்தில் ஏறி கண்டமனூர் விளக்கில் இறங்கி, வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு தெற்கு நோக்கி தலைவரை பார்க்க கிளம்பினோம். வருச நாடு செல்லும் வழி அது. வைகை நதி நம்மை நோக்கி எதிரே இறங்குகிறது. நாங்கள் அதன் பக்கவாடு தார்சாலையில் சைக்கிளை மேலே அழுத்தினோம்.

எங்கெங்கும் பச்சை பட்டுடுத்திய இயற்கை தன் எழிலை கூட்டி காட்டுகிறது. கலைஞர் வருகைக்காக வழியெங்கும் குழல் விளக்குகள், கொடிகள், வண்ண அலங்காரங்கள் என அந்தந்த பகுதி தொண்டர்கள் ஆங்காங்கே சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர். கண்டமனூர் தாண்டி ஊரின் முடிவில் ஒரு பெரிய பனைமரத்தோப்பு. மரங்களையும் விட்டு வைக்கவில்லை தோழர்கள். ஒவ்வொரு மரத்தின் உச்சியிலும் கருப்பு சிகப்பு கொடியினை சொறுகி வைத்திருந்தனர்.

ஒரு பனை மரத்தில் மறந்துபோய் கொடியினை சிகப்பு கருப்பென தலைகீழாக ஏற்றியிருந்தனர் அப்பகுதி தோழர்கள்.
இதனை நான் கண்டு சொல்ல, கந்தன் வெறுப்புற்றார். ஊருக்குள் சென்று ஒரு பொறுப்பாளரை கண்டுபிடித்து இதனை சொல்லி கேட்டார்.. அவர் ஏதோ சொல்ல!... இவர் எதோ சொல்ல!... வாய்த்தகறாராகி சண்டையில் முடிந்தது. பின்னர் அப்பகுதி செயலாளர் வந்து தலையிட்டு சமாதானம் பேசி அனுப்பி வைத்தார். கொடி அப்படியே பறந்துகொண்டு இருந்தது.

பொதுக்கூட்டம் முடிய இரவு 8 மணியானது.. தலைவருக்கு 9 மணிக்கு தேனியில் அடுத்த பொதுகூட்டம். நாங்களும் கிளம்பினோம். திரும்பி வருகையில் அப்பனைமரம் அருகே வண்டியை நிறுத்திய கந்தன் பனை மரத்தில் கட..கடவென ஏறினார்.. இதுவரை மரம் ஏறிராத அவர் எந்த தைரியத்தில் ஏறினாரோ.?..உச்சிக்கு சென்று கொடியை கருப்பு சிகப்பென மாற்றி கட்டிவிட்டு இறங்க நினைத்து கீழே பார்க்கையில் பயம் தொற்றிக்கொண்ட்து.. மெதுவாக மரத்தை கட்டிபிடித்தபடி இறங்கியவர், பாதி மரம் வந்தபின் மரத்தை உரசிகொண்டு கீழே வந்து விழுந்தார்.. உடம்பு முழுதும் சிறாய்ப்புகள்.. இரத்தக்காடு..கை கட்டைவிரல் அறுந்தது.

அவரை சைக்கிளில் இருத்திகொண்டு கண்டமனூர் வந்து சைக்கிள் கடையில் சைக்கிள்களை விட்டோம்..கந்தனின் கோலத்தை கண்ட கடை முதலாளி உடனடியாக எதிரே வந்த லோடு வேனை நிறுத்தி தேனி அரசு மருத்துவமனையில் இறக்கிவிட கேட்டுகொண்டார். கடையின் உட்புறம் பார்த்தேன் நான்... கலைஞரும், அண்ணாவும் சிரித்துகொண்டிருந்தனர் போட்டோவில்.

தேனி அரசு மருத்துவமனையில் இரண்டு நாள் தங்கியிருக்க வேண்டுமாய் மருத்துவர் எழுதி கொடுத்தார்.விரலை இணைக்க முடியாது எனவும், இருந்தாலும் முயற்சி செய்கிறோம் எனவும் கூறினார் மருத்துவர். நானும், சீனியும் கந்தனுடன் இருந்துகொண்டு மற்றவர்களை அனுப்பிவைத்தோம்..

கந்தனுக்கு அவர் சார்ந்த தொமுச, நிர்வாகத்தினருடன் அவர் சார்பாக பேசி வேலைக்கு விடுப்பு வாங்கி தந்தது. அன்று தேனி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின் ஒரு மாதம் அவதிபட்டார் புண்களுடன், உடைந்த விரலுடன். இதோ! இன்றும் அந்நெளிந்த விரலோடும், தழும்புகளுடனும் இருக்கிறார் கந்தன்.

தொமுச விடுப்பு எடுத்து தந்தமைக்காக திமுக என்ற இயக்கத்தை கந்தன் அவர் சுய நலத்துக்காக பயன்படுத்தி கொண்டார் என யாராவது அவர் மேல் குற்றம் சொல்ல முடியுமா?.
சரியாக ஏழு வருடத்திற்கு பின் அக்கட்டைவிரலில் வீக்கமும், வலியும் அதிகமாக, அதை எடுத்தால்தான் நல்லதென மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று கந்தன் கட்டைவிரலில்லா கந்தனாக காட்சி தருகிறார்.


-2-


மதுரை காந்திபொட்டல் பூந்தோட்ட தெருவில் “ அண்ணா கொடி அங்காடி”  என்றொரு கடை..கடையல்ல! அது அவர் வீடு. நடத்துபவர் சவுராஷ்டிர இனத்தை சேர்ந்த ஒருவர்..மிக பிரமாண்டமான அவர் வீடு முழுவதும் நம் கழக கொடி, பேட்ஜ், தொப்பி மட்டுமே இறைந்து கிடக்கிறது. 50வருடம் முன்னர் இன்றுபோல் தொழில்நுட்பம் அல்ல. இருப்பினும் அடுத்த வாரம் பொதுகூட்டம் எனில் கிடுகிடுவென கொடியிலிருந்து, பேட்ஜ் முதலான அனைத்தையும் தயார் செய்துவிடுவார் அவர். சொ.காவேரிமணியம் தொடங்கி கட்சி முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து செல்லும் ஒரு இடமாக அவர் வீடு இருந்தது. பேரரிஞர் அண்ணா அவர் கடைக்கு ஒருமுறை வருகை புரிந்தமைக்காக பெயரில்லாமல் செயல்பட்டு வந்த தன் கடைக்கு அண்ணா கொடி அங்காடி என பெயர் சூட்டி மகிழ்ந்தார் அம்மனிதர்..

இன்று சொத்துக்களையெல்லாம் விற்று இஸ்மாயில்புரம் 19வது தெருவில் ஒரு சிறு வீட்டினுள் வாழ்ந்து வருகிறார்.

இதில் அண்ணா பெயரை தனது வியாபாரத்திற்காக உபயோகபடுத்தி கொண்டார் அவர் என யாரேனும் சொல்லத்தகுமா?

-3-

20 வருடம் முன்புவரை தமிழகத்தில் NAVIநேவி பேனா பிரசித்தம். அதனை தயாரித்து நிர்வகித்து நடத்தி வந்தவர் பெயர் நரசிம்மன். பெரியார் தொண்டர். மதுரை இலக்குமிபுரத்தில் வீடும், தொழிற்கூடமும் இருந்தது....தொழில்மூலம் மிகப்பெரும் பணக்காரானார் அவர்.. ஆடி, ஆவணிகளில் மாரியம்மன் பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், தாம் தேடி கண்டுபிடித்து வாங்கி வரும் ஒளிக்காட்சி தட்டுகளை ப்ரொஜெக்டர் மூலம் தெரு நடுவிலும், தன் தொழிற்கூடத்திலும் வைத்து சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் படம் காட்டி, மாரியம்மன் பக்கம் மனம் போகாதவாரு பார்த்துகொள்வார். அவர் போட்டு காட்டிய படங்கள் பெரும்பாலும் தலைவர்கள் உரைகள், ஐன்ஸ்ட்டினின் டாகுமெண்டரி, ருஷ்ய புரட்சி, மார்க்ஸ் வரலாறு என நீளும்.

இதில் அவர் எதனை தம் தொழிலுக்கு ஆதாயமாக பயன்படுத்தி கொண்டார்.???

இன்று நேவி என்றொரு பேனா இல்லை..அவர் மகன் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் மேல வடம்போக்கி தெருவில் உள்ள மதுரை மணம்என்ற உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்..



-4-

மதுரை சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கடையுண்டு. பெயர் பெரியார் மிக்சர் கடை”. அங்கு திண்பண்டங்கள் மட்டுமே கிடைக்கும். பெரியார் பேருள்ள கடை வியாபாரம் அதிகமாகி அங்கு அவர் பெரிய தொழிலதிபராய் ஆகிவிட முடியாது. இன்றளவும் அந்த கடை எப்பொழுதும் போல் சிறியதொரு கடையாகவே செயல்படுகிறது.

-5-

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தத்தநேரி சுடுகாடு எதிரில் குணா தேநீர் நிலையம் உள்ளது.. உள்ளே சென்றால் ஆளுயர பெரியார் புகைப்படம் உங்களை வரவேற்கும். பிணத்தை தகனம் செய்து அனைத்து காரியத்தையும் முடித்தவர்தான் அக்கடையில் தேநீர் அருந்த வருகிறார்கள். இது மாதிரியான காரியங்களையெல்லாம் எதிர்த்த பெரியாரின் புகைப்படமுள்ள அதே டீக்கடைதான் அந்த பகுதியில் கூட்டம் நிறையும் தேனீர் கடை.

பெரியார் படத்தையும், பெயரையும் வைத்துகொண்டு இவர்கள் கோடி கோடியாய் லாபத்தை அறுவடை செய்ய முடியுமா?


-6-

 இன்றைய சூர்யா இனிப்பக முதலாளி கடலைப்பாண்டி பற்றிய கதை இன்னும் சுவாரசியம். சைக்கிளில் தெருத்தெருவாக சென்று பட்டாணி, கடலை விற்பனை செய்யும் பாண்டி திமுக மாநாடு எங்கு நடந்தாலும் சென்று விடுவார்.. அங்கு சென்று மாநாட்டு மைதானத்தினுள் செல்ல டிக்கட் வாங்கியபின், உள் சென்று தன் கடலை வியாபாரத்தை அங்கு ஆரம்பிப்பார். மாநாடு நாட்களில் அங்கு படுத்துறங்கி வியாபாரத்திற்கு வியாபாரத்தினையும், மாநாட்டினையும் கண்டு இரசித்துவிட்டு மகிழ்வுடன் ஊர் சேர்வார் பாண்டி. வேறு கட்சி மாநாடுகளில் அவர் என்றும் கலந்துகொண்ட்தில்லை. வேண்டுமானால் தம் பகுதி வட்டத்திடம் NO PARTICIPATION CERTIFICATE வாங்கியும் காண்பிப்பார் அவர்.. அந்த அளவு திமுக அனுதாபி.

இதில் அவருடைய சுயநலத்தை லென்ஸ் கண்ணாடி வழியே பார்ப்பவனை அதி வக்கிரம் படைத்த கொடுங்கோலன் என கூறுவதைத் தவிர வேறென்ன சொல்ல.
  
-முடிவாக-

என் சுயநலத்திலும் ஒரு பொது நலம் கலந்திருக்கிறது; ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு குளத்தை சுத்தப்படுத்துகிறதே மீன்..அதுபோல கலைஞர் எழுதிய இந்த வசனம் தொலை நோக்குள்ளது.

அவரும் வசனம், கதை, திரைக்கதை எழுதி சம்பாதித்தார்தான். அதற்காக கட்சியை தன் பிழைப்புக்காக உபயோகப்படுத்தி கொண்டார் என சொல்லத் தகுமா? சொல்பவனை நாம் எப்படி அடையாளம் காண்போம் என நமக்கு தெரியும்.

அரசியல்வாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் உண்ணவும், உடுக்கவும், இருக்கவும் ஒரு வேலை செய்துதான் ஆக வேண்டும். உழைக்கிற எந்த மனிதனுக்கும் தன் அப்பனும் ஆத்தாளும் சேர்த்து வைத்துவிட்டு போகவில்லை. அப்பன் சேர்த்து வைத்த காசில் ஊர் சுற்றுகிறவர்களுக்கு அடுத்தவன் வேலை செய்தால் அதை கெடுக்க புளித்த ஏப்பம் விடுவதென்பது காலம் காலமாக நடக்கிற ஒன்றுதான்.

புளித்த ஏப்பங்கள் புலிகளை வீழ்த்துவதில்லை!

-முற்றும்-

No comments:

Post a Comment