Wednesday 17 July 2013

தந்தி - "EXPIRED"

தந்தி பலபேர் வாழ்க்கையின் ஒரு பகுதி. இந்திய குடிமகனுக்கு தந்தியை பற்றி ஏதேதோ ஒரு அனுபவம் இருக்கும். அதில் ஆயிரம் சுவாரசியமும் ஒளிந்திருக்கும்..

என் அப்பா 1998ல் ஒரு மே மாத இரவில் 2 மணியளவில் காலமானார்..

என் பெரியப்பா ஒருத்தருடன் என் அப்பாவின் டைரியை எடுத்துகொண்டு தந்தி கொடுக்க பெரியார் நிலையம் சென்றேன். மதுரை காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட் குப்தா ஸ்போர்ட்ஸ் எதிரே ஒரு தந்தி அலுவலகம் அப்போது இருந்தது.

டைரியில் உள்ள முகவரிக்கெல்லாம் தந்தி அடித்தேன். உடன் அழைத்து வந்த என் சித்தப்பா முறையில் உள்ளவர் “தந்தி அடிக்க கொடுக்க பணம் கொடு” என்றார்.

பணம் என்னிடம் இல்லை. அப்பா இறந்த சோகத்தில் பணம் எங்கே இருக்கும் என்று கூட எனக்கு தெரியவில்லை.முழுக்க என அப்பா பொறுப்பில் இருந்த வீடு அது.

”பணம் எடுத்து வரவில்லை” என்றேன்.

“போ..போய் எடுத்துட்டு வா” என்றார்.

வரும்பொழுது தன் டூ-வீலரில் அழைத்து வந்த அவர், பணம் எடுக்க சொல்லி என்னை பேருந்தில் அனுப்பி வைத்தார்.. நானும் அழுதுகொண்டே பேருந்தில் வீடு வந்து, அம்மா அழும் கோலத்தை தாண்டி போய் வீட்டினுள் பணத்தை தேடி எடுத்து கொண்டு போனேன்.

பின்னர்தான் அப்பெரியவர் தந்திக்குறிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தார். மறக்காமல் வீடு திரும்புகையில் தன் டிவிஎஸ் எக்செல்-க்கு என்னிடம் பணம் வாங்கி பெட்ரோலும் நிரப்பிக்கொண்டார்.

தந்தி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தை தந்திருக்கும். எனக்கு இதுமாதிரியும் ஒரு நிகழ்வ.

 

நண்பனின் நண்பன் ஒருவன் தன் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் அவளையும் அழைத்து கொண்டு  சென்னைக்கு (ஓடி) வருகிறான். என் நண்பனும் அவன் நண்பர்களும் அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள்.

என் நண்பன் என்னை அழைத்து “ பெருசு! மதுரையில் இருந்து 'I AM FINE. DONT SEARCH ME' -னு நான் சொல்ற ரெண்டு அட்ரஸுக்கும், அப்புறம் அந்த மாவட்ட DSP -க்கும் ஒரு தந்தியை கொடு” என பெண் வீட்டாரையும், பையன் வீட்டாரையும் பையனும், பெண்ணும் எங்கே இருக்கிறார்களோ என கண்டுபிடிக்க இயலாமல் குழப்ப உதவிய தந்தி சேவையை யார்தான் மறந்து விட முடியும். 


தந்தியை பற்றிய ஒரு பிரபலமான துணுக்கு ஒன்று உண்டு. ஒவ்வொரு வார்த்தைக்கும் கட்டணம் என்பதால், பணத்தை  மிச்சம் பிடிப்பதற்காகக் செய்தியை ரத்தினச் சுருக்கமாக எழுதித் தருவதுண்டு. 
தந்தியை பற்றிய ஒரு துணுக்குகூட உண்டு.  “Do” எனும் ஒரே ஓர் ஆங்கிலச் சொல்லின் கட்டணத்தை மிச்சம் பிடிக்க “Do not hang him. Leave him” – (’அவரைத் தூக்கில் இடாதீர்கள். விட்டுவிடுங்கள்’) – என்று எழுதுவதற்கு பதிலாக- “Hang him not leave him” என 'NOT' என்ர வார்த்தைக்குப் பிறகு முற்றுப்புள்ளி இன்றி அனுப்பப்பட்டதால், அத்தந்தியை ஒருவர் “Hang him. Not (Do not) leave him” என்று  புரிந்து கொண்டு ஜெயிலர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றினார் என பழைய துணுக்கு நாம் படித்ததுண்டு.. சிரித்ததும் உண்டு.


எப்போதோ செத்த தாத்தா இப்போதுதான் செத்தார் என  'அவசர தந்தி' மூலம் சொன்னால் மட்டுமே,  நம்பும் முதலாளிகள்  தொழிலாளிகளுக்கு விடுமுறை அளிப்பர்.  கீழ் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை தந்தியை தக்கதொரு ஆவனமாக இன்று எடுத்து கொள்கிறது. காவல்துறை விவகாரங்களில் தந்தியின் பங்கு மிக முக்கியமானது.

ஆனாலும் ஜூலை 15க்கு பிறகு இதெல்லாம் சாத்தியமில்லை.இதோ 160 ஆண்டு கால  தந்தி சேவையை அரசு நிறுத்தி இத்தோடு 50 மணிநேரம் ஆகிறது. 

”அப்பா இறந்த செய்தியை
கொண்டு சென்ற ’தந்தி’யது...
தான் இறந்த  சேதியதை
’தந்தி’யாய்
யாரிடம் சொல்லும்?”

======================================

No comments:

Post a Comment