
நேர்த்தியாகவும்,
சில நேரங்களில்
அங்குமிங்குமாக
நிறுத்தப்பட்டிருக்கும்
பேருந்துகள்.
படபடப்பும்,
ஏமாற்றமும்
மாறி மாறி
வந்து தொலைக்கும்
வியர்வையொடு
பயணிகள்.
அதே காத்திருப்போடு
நின்று கொண்டிருக்கும்
காதலர்கள்,
மலிவான காதலிகள்,
மலிந்த காதல்கள்.
சீராக இல்லாமல்,
ஒரு நாள்
நட்டமும்
மறுநாள்
அதிக லாபமும்
சம்பாதிக்கும்
சில்லறை வியாபாரிகள்.
ஆத்திசூடியும்,
ஏபிசி புத்த்கமும்
ஓடியாடி கூவி விற்கும்
படிக்காத
சிறுவர், சிறுமியர்.
எட்டிப் பார்த்தால்
கோயிலும், மசூதியும்,
நிமிர்ந்து நிற்கின்றன.
நிறைய சன்னல்கள்
கண்முன் தெரிகின்றன.
அப்படியே இருந்தாலும்
எதையும் பொருட்படுத்தாது
மூத்திர வாசனை
பரப்புகிற மனிதர்கள்.
பேருந்து நிலையங்களில்
பேருந்து வருவது
உறுதியோ? இல்லையோ?
வாசனை!.........
கட்டாயம் உண்டு.
No comments:
Post a Comment