Friday 21 August 2020

விஜய்-அஜீத் சண்டையை நிறுத்துங்க ப்ளீஸ்.

நடிகனை நடிகனாக பார்ப்பதை விட்டுவிட்டு தலைவனாக, கடவுளாக,  என பலவிதமாக பார்ப்பதால் என்ன பிரயோஜனம் வரப்போகிறது. சுத்த மண்ணாங்கட்டிங்கத்தனம் அது.  நடிகனை நடிகனா அளவிடுங்க. பாராட்டுங்க. போற்றுங்க. தூற்றுங்க. விமர்சனம் பண்ணுங்க. கழுவி ஊத்துங்க. தப்பில்லை.

மற்றபடி, வீட்டுக்கு போனா சாப்பாடு போடுவாரு, சிம்பிளா இருப்பாரு, இமயமலைக்கு செல்லும் ஆன்மீகவாதி, சுயமா ஒவ்வொரு நிமிசமும் தன்னை செதுக்கி முன்னேறினவருன்னுலாம் சொல்லி அவர்கள் நடிப்புத்திறமைய அளவிட முடியாது.

எம்ஜிஆர், ரஜினி போன்றவர்கள் அவர்கள் துறையின் மூலம் பேர் வாங்கியிருக்கலாம். புகழடைந்து இருக்கலாம். ஒப்புமை செய்தால் சிவாஜியை காட்டிலும் எம்ஜிஆர் பெரிய(ப்ரொபசனல்) நடிகரா என்றால் இல்லை.  கமலை விட சிவாஜி அப்படி ஒன்றும் சிறந்த நடிகரில்லை என்பது அவர்களை நடிகர்களாகவும், கலைஞர்களாகவும் அளவிடும் போது அனைவருக்கும் சுலபமாக தெரிந்துவிடும் உண்மை. 


எம்ஜிஆரும், ரஜினியும் ஸ்டைலா நடிப்பாங்கன்னு சொல்றவங்ககிட்ட ஸ்டைலுன்னா என்னன்னு கேட்டா எம்ஜிஆர் மூக்கை சிந்துவதையும், ரஜினி சிகரெட்டை தூக்கிப் போடுவதையும் தான் சிறப்பாக சொல்வர். இதை சுலபமாக சிவாஜியும், கமலும் கற்றுகொண்டு மூக்கை சிந்திவிடுவார்கள். பெரிய விசயமில்லை. மற்றபடி பாசமலரையோ, மகாநதியையோ மற்ற இருவர்கள் செய்து விட முடியாது.

இப்பவும் அதே மாதிரி ஒரு சூழல் இருக்கிறது. அஜீத்தா விஜய்யானு நடக்குற சண்டை மிகக் கொடூரமாக இருக்கிறது.  விஜய் ரசிகர்களை கூட கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. முன்ன சொன்ன மாதிரி எம்ஜிஆர், ரஜினி ரசிகர்கள் வழியில் அஜீத் ரசிகர்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

இப்படி சொல்வதால் விஜய்யை சிவாஜி, கமல் மாதிரி கணக்கில் எடுத்துக் கொள்கிறேன் என சொல்லக்கூடாது. அஜீத்துடன் ஒப்புமை செய்கையில் விஜய் கொஞ்சம் நடிக்கிறார் என்பது பால்வாடி பிள்ளைகளுக்கும் தெரிந்துவிடக்கூடிய செய்தி. அதனால்தான் என்னவோ சிறு பிள்ளைகளிடம் விஜய் விரைவில் அய்க்கியமாகிவிடுகிறார். என் வீட்டில் மட்டுமல்ல, பல வீடுகளில் ஆண் பெண் பிள்ளைகளின் ஆதர்சம் விஜய்தான். குறைந்த பட்சம் நான்கு விஜய் பாட்டுக்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளையாவது குழந்தைகள் அழகாக அவிழ்த்து விடுவார்கள்.

சினிமாவில் விஜய் குறைந்த பட்சம் நல்ல மொழி பேசுகிறார், வசன உச்சரிப்பு துள்ளியமாக இருக்கிறது, நன்றாகவே ஆடுகிறார், உடலமைப்பும் ஃபிட்டாக உள்ளது, கூடுதலாக நடிக்கவும் செய்கிறார். அஜீத்தை எந்த அடிப்படையில் சிறப்பாக சொல்வதென தெரியவில்லை.

இருந்தாலும் சொல்கிறேன்…
அஜீத் அழகாக இருக்கிறார், கலராக இருக்கிறார், கூல் பேபியாக வலம் வருகிறார், இண்டெர்னேசனல் டான் / ஒட்டன்சத்திரம் டான் மாதிரி வசனமும், முகபாவமும் கம்மியாக இருக்கும் கதாபாத்திரத்தில் சிறக்கிறார். வேறு என்னவாகவெல்லாம் சிறக்கிறார் என கமெண்டில் பதிவிடவும்.

இருவரின் ரசிகர்கள் சாதி ரீதியாகவும் பிரிந்துள்ளார்கள் என்பதும் கொடுமை. தென் தமிழகத்தில் முத்துராமலிங்கத்தின் பக்கத்தில் அஜீத்தின் படத்தை போட்டு ப்ளெக்ஸ், பத்திரிக்கை, போஸ்டர் அடிப்பவர்கள் உண்டு. விஜய்யை சாதி மதம் சொல்லி தவிர்ப்பவர்களும் உண்டு. இறுதியாக ஒரு வாதம் வைப்பார்கள். அது “டே! விஜய் கிரிஸ்டிண்டா? அவன் இந்தியனே கிடையாது? ஏன்? தமிழனே கிடையாது” என்பர் கேட்கிற நமக்கு தலை சுத்தும்.

இவை ரசிகர்கள் மத்தியில் உளாவும் புரிதல். விஜய் மற்றும் அஜீத் இருவரும் அவரவர் திறமை, தகுதி தெரியாமலா இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் ரசிகர்களை காட்டிலும் தங்களை பற்றி நன்றாக தெரியும். முக்கியமாக அவர்களை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு நன்றாக தெரியும்.

விஜய் தேவையென நினைக்கும் இயக்குநர்கள் அவரிடம் போய் கதை சொல்கிறார்கள். அஜீத் தேவையென விரும்பும் இயக்குநர்கள் அவரிடம் தஞ்சமடைகின்றனர். இருவரிடம் என்ன கிடைக்கும் என தெரிந்தேதான் அவர்களை இயக்குகிறார்கள். இப்போது ’அட்லீ ஒர்ஸ்ட் சிவா பெஸ்ட்’ எனவும் இந்த சண்டை வளர்ச்சியடைத்துள்ளதுதான் காமெடி. அடுத்து இயக்குநர் சிவா விஜய்யை இயக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவரே அதை பேட்டியில் சொல்லியும் உள்ளார். நம் ரசிக சிகாமணிகள் மூஞ்சியை அப்போது எங்கு போய் வைத்துக்கொள்வர்.?

நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான மெர்சல் இசை வெளியீட்டில் விஜயை ஓவராக புகழ்ந்து தள்ளினார்கள் டிவிக்காரர்கள். நல்ல மனம் படைத்தவர், தன்னலம் கருதாத தலைவன் என்றெல்லாம் ஸ்லைடு போட்டார்கள். சரி! நல்ல மனதை வைத்துகொண்டு அவர் என்ன தொண்டர் படையோடு போய் ரஷ்யபுரட்சி செய்யவா போறார். படத்துல ஆடிப்பாடி நடிக்கத்தானே போறார். 

நடிகனை நடிகனாக அணுகுங்கள்.  அவன் பிற்பாடு அரசியல்வாதியானால், அரசியலில் அவன் செயல்பாட்டை விமர்சியுங்கள். இப்போதைக்கு ஆட்டத்தை மட்டும் இரசியுங்கள், ஆட்சி செய்ய அழைக்காதீர்கள்.

முதல்ல சண்டை போடுறதை நிறுத்துங்கள். அது அவ்வளவு அறிவுபூர்வமா இல்லை. பாக்குற எங்களுக்கு சகிக்கல.

No comments:

Post a Comment