Saturday 16 May 2020

இணைய சமத்துவம் - Net Neutrality ஒரு Positive பார்வை

இந்தியாவில் சமத்துவம் சாத்தியமா என்றெல்லாம் இனி அங்கலாய்க்க தேவையில்லை என்பதுபோல் வைரலாக ஒரு காணொளி வாட்ஸ் அப்-ல் கண்டேன். Net Neutrality - அதாவது -'இணைய சமத்துவம்' பேசும் காணொளிதான் அது.

உதாரண நோக்கில் அவர்கள் எடுத்துகொண்ட 'மின்சாரம்' எளிதாக சொல்ல வந்ததை புரிய வைத்தது. குளிர்பதன பெட்டிக்கு தனியாக, மின்விசிறிக்கு தனியாக என கட்டணம் வசூலித்தால் என்னவாகுமோ அதுபோல நடந்துவிட்டால் என்னாவது என விளக்கினர்.

இணைய சமத்துவம் என்பது சாத்தியமா என என் மண்டை குடைகிறது. காசு கொடுத்து வாங்குகிற கடைச்சரக்கில் என்ன சமத்துவம் எதிர்பார்க்க முடியும். வாங்குகிற மக்களுக்கு நன்மை குறைந்த விலையில் நிறைந்த சேவை கிடைக்க வேண்டுமாயின் அரசு போட்டியாளர்களை உருவாக்குவதே நல்லது.

சில வருடங்களுக்கு முன்வரை பேசாத நிமிடத்திற்கு முழுவதும் ஒருவர் ஏன் பைசா அழவேண்டும் என்று எந்த வாடிக்கையாளரும் கூக்குரலிடவில்லை. மாறாக போட்டிக்கு வந்த புது ஆபரேட்டர் டாடா டொகோமோ நொடிக்கணக்கை அறிமுகப்படுத்தியது. உடனே காலில் சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டு அனைத்து ஆபரேட்டர்களும் நொடிக்கணக்கில் மாறினர். பின்னர் இரு விதமாகவும், அதாவது குறைவாக பேசும் சந்தாதாரருக்கு ஒரு pack-ம், நிறைய கதையளக்கும் சந்தாதாரருக்கு இன்னொரு pack-ம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆக முதலாளிகளுக்கு இடையேயான போட்டி மட்டுமே வாடிக்கையாளருக்கு நன்மை பயக்கும். தெருவில் பத்து கடை இருந்தால்தானே போட்டிப்போட்டுகொண்டு சல்லிசான விலைக்கு தர ஒரு கடையாவது வாடிக்கையாளருக்கு
கிடைக்கும்.

முன் காலங்களில் இன்கமிங்கிற்கு கட்டணமில்லை என ஏர்செல் முந்திகொண்டு அறிவித்ததும் இதே வகையில்தான்.

சரி இன்றைய கதைக்கு வருவோம். ஏர்டெல் net' ம், ரிலையன்ஸ் 'internet.org' ம் தனது நிலையை அறிவித்தபோது ஏன் இத்தனை கூக்குரல். உள்ளபடியே இன்னொரு சூட்சுமம் இதில் உண்டு. இந்த இரு நிறுவனங்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிகம்.VAS மற்றும் Data சேவையை அதிகமாக பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லில் அதிகம்.
ஆக இது பாதிப்பை ஏற்படுத்தப் போவது பெரிய கூட்டத்தை. அந்த பெருங்கூட்டம் ஏற்படுத்தியதுதான் அக்கூக்குரல். பெருங்குரல்.

ஒருவர் தான் அதிகமாய் உபயோகிக்கும் தளங்களை பார்க்க தனியாக அதிக விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும், ஆபரேடர் வழிமொழியும் தளங்களை மட்டுமே பார்க்க இயலும் என்பதே பிரச்சினை. ஏர்டெல் மற்றும் flipkart ஒன்றிணைந்தால் amazonஐ பார்க்கிற நான் நிறைய அழ வேண்டியிருக்கும் என வருந்துவது அவசியமற்றது. ஏனெனில் amazon இன்னொரு ஆபரேட்டருடன் ஒன்றிணையும்.இருக்கவே இருக்கிறது Number portability. பிடித்த ஆபரேட்டரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அந்த இன்னொரு ஆபரேட்டர் மூலம் amazonஐ வேகமாகவோ, இலவசமாகவோ பார்க்கலாம். சிம்பிள்.

தற்சமயம் தனியாக குறுஞ்செய்தி pack இருப்பது நாம் அறிந்ததுதான்.அனைத்து ஆபரேட்டர்களுமாய் உத்தேசமாக ரூ.28 முதல் ரூ.31க்குள் விலை வைத்திருப்பர். குறுஞ்செய்தி நிறைய அனுப்புபவர். அந்த pack-ஐ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இல்லையெனில் வழக்கமான அழைப்பு விலையில் குறுஞ்செய்திக்கு அதிகமாக பணம் செலவழியும். ஆரம்ப காலங்களில் குறுஞ்செய்தி இலவசமாய் மெயின் pack-ல் அறிமுகம் செய்து பின்னர் தனியாக pack ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
நிறைய குறுஞ்செய்தி அனுப்புபவர் அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். விலையும் கம்மிதான். இதே மாதிரிதான் STD, ISD pack- களும்.

அதுமாதிரிதான் இணையத்திலும். சமூக வலைதளங்கள் அதிகமாய் உபயோகிப்போருக்கு தனியாகவும், ஷாப்பிங் தளங்கள் செல்வோருக்கு தனியாகவும், தேடலுக்கு தனியாகவும் பேக்குகள் வரலாம். இரு வேறு நிறுவனங்கள் விலையில் வித்தியாசம் காட்டி,குறைத்து வாடிக்கையாளர்களை வசீகரிக்கலாம். ஆக நன்மை மக்களுக்கே. வியாபாரி ரெண்டுபட்டால் மக்களுக்குதான் கொண்டாட்டம்..வியாபாரிகள்தான் அதிகமாய் வரவேண்டும். அரசு அதற்கு வழிவகை செய்தாலே போதும்.

நிற்க.

ஆனால் வியாபாரிகள் ரெண்டுபடுவரா? இப்போதைக்கு இல்லாவிடினும் பின்னர் படுவர்.

6 பெரியண்ணன் நிறுவனங்களின் கூட்டான COAI எப்படியாவது TRAIஐ தன் கையால் ஆட்டுவிக்கும் என்பதே பலரின் கூற்று. ஆகா!என்ன ஒரு தீர்க்க தரிசனம்.

இதையேதாம் மேனாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அன்று அம்பலப்படுத்தினார். நாம் அவரைத்தான் ஏசினோம். இந்த COAIல் இணையாத புதிய நிறுவனங்களை கொண்டு வந்தார். போட்டிகளை உருவாக்கினார்.அழைப்பு விலை வெகுவாக குறைந்தது. 2Gயை இலவசமாக்குவேன் என சூளுறரைத்தார். யாரும் பாராட்டவில்லை அப்போதும், இப்போதும்.TRAI மற்றும் COAIக்குள்ள உறவை அவ்வளவு எளிதாக யாரும் புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொண்டு செயலாற்றியவர் தற்போது வழக்கில் உள்ளார்.

இன்று "அய்யோ பெரிய நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்துக்கிச்சுனா, சிறு தளங்கள், புது தளங்கள், வலைப்பூ போன்றவை என்னவாகும் என யோசிக்கிற இணைய ஆட்களைதான் மெச்ச வேண்டும். முன் யோசிக்காது போட்டி போட்டுக்கொண்டு அவரை வசைபாடியது இவர்கள்தான்.

ஒரு பேச்சுக்கு, அவர் இருக்கையில் யாரோ ஒரு சிறு ஆபரேட்டர் அன்றே வந்திருப்பின் நம் ஆட்களுக்கு "வலைப்பூ" பேக் ஒன்றை சொற்ப விலையில் அறிமுகப்படுத்தியிருக்க கூடும்.

ஆக! இவ்விசயத்தில் கவலை தேவையில்லை. போட்டிகளை உருவாக்குவதே கொள்முதலுக்கு நன்மை பயக்கும்.

#tail piece: நம் தமிழக மின்சார வாரியம் இன்வெர்ட்டர் வைத்துள்ளோருக்கு அதிக கட்டணம் வசூலிக்க திட்டமிட்டது நினைவிருக்கலாம். அப்படி நடக்க தொலைத்தொடர்புத் துறை ஒன்றும் monopolyயாக இல்லை என்பது நற்செய்தி.
மின்சார வாரியம் தமிழகத்தில் ஒன்று என்றில்லாமல் அதற்கு போட்டியிருந்து, அந்த போட்டி நிறுவனம் "வெறும் குண்டு பல்பு மட்டுமே உபயோகித்தால் யூனிட் 0.10 பைசா மட்டுமே" என விளம்பரம் செய்தால் கசக்கவா போகிறது.
கூடவே தமிழக மின்சார வாரியம் தரமற்று போய்விட்டது எனவே மத்திய தொகுப்பில் இருந்து புதிதாய் மின்சார நிறுவனம் வரப்போகிறது என அறிவிப்பு மட்டும் செய்யட்டும். உடனே தமிழக மின்சார வாரியம் "செல்போன் சார்ஜ் செய்தால் மீட்டர் ஓடாது" என ஆஃபர் கூட தரும்.

இவ்விசயத்தில் புரிதல் இவ்வளவே! சிம்பிள்.


20 ஏப்ரல் 2015


No comments:

Post a Comment