Thursday 23 February 2017

போன்சாய் திருமணம்

தோட்டத்து செடியல்ல,
காட்டுச்செடி நான்..
வீரிய விதையில்
முளைத்தெழுந்த
வித்து நான்.

பூமி துளைத்து
மேலெழுந்த போழ்து
சூட்டை உணர்ந்தேன் .
உச்சியில் நெருப்பாய்
தகத்த ஒன்று
என்னைச் சுடுவதா?
வெறி கொண்டேன்
அதன் தழல் மறைக்க..
இன்னும் உயர விழைந்தேன்
வேகமாய்..
படர்ந்தேன் வெளியெங்கும்.

இரவில் குளிரும்
நிலவின் அழகு ஈர்த்திட
இன்னும் மேல் நோக்கி
எழும்பலானேன்
அனுதினமும்.

எனக்கு
எட்டுத்திசையும்
கிளைகள் பரப்பும்
சூட்சுமம் அத்துப்படி.
எத்தனை ஆழமும்
என் வேர்கள் ஊடுறவும்
எந்தன் திறன் அப்படி.
என்றெல்லாம்
கனவில் லயித்தேன்.
காற்றினூடே கூவினேன்.

ஆனாலும் செடிதான் நான்
இன்னும்.

என் சக செடிகள்
களைகள்.
வழமையான வாழ்வை
கொண்டதுகள்.
நான் அப்படியில்லை...
பூமியில்
ஒட்டியிருப்பினும்
பறந்தேன்,
ஆடினேன்,
பாடினேன்.

ஒருநாள்
யாரோ என்னை
வேர் மண்ணோடு
பிடுங்கிகொண்டு
வந்தார்கள்.
எனக்காக வட்டமாய்
ஒரு தொட்டி.
அதற்குள் அமர்த்தப்பட்டேன்.
சுற்றிலும் சுவர்.
மேலே மின் காற்றாடி.
பக்கத்திலே சன்னல்.
சூரியன், நிலவு, வெளி,
காற்று, மழை எதுவுமில்லை.
வெயில் மட்டும்
அவ்வப்போது பட்டது.

ஒருமுறை
சன்னல் வெளியே
எட்டிப்பார்த்தேன்...
உடனே
என் கிளைகளை
வெட்டிப்போட்டான்
கொண்டு வந்தவன்.

என்னைப் போலவே
இங்கே இரண்டு பேர்
இவ்வீட்டில்.
ஒரு கணவன்,
ஒரு மனைவி.

என் கவலையை போல
அவர்களுக்கும் உண்டு.

இங்கு வந்தவுடன்
சுதந்திரம் பாழ்பட்டதாக
அவள் சொல்வாள்.
கனவு காலியென
அவன் சொல்வான்.
எனக்கு கிளைகள்
வெட்டப்பட்டது போலவோ?
என்னவோ? அப்படி.

புலம்பல் கேட்கும்
அனுதினமும்.

நான் போன்சாய்
ஆகிவிட்டதாக
சொல்கிறார்கள்.
அவர்கள் திருமணம்
செய்து கொண்டவர்கள் என
சொல்கிறார்கள்.

அவ்வளவுதான்
எனக்குத் தெரியும்.

No comments:

Post a Comment