Friday 4 August 2017

வேலைவாய்ப்பின்மை - ஒரு கோர முகம்

கட்செவியில் மஹிந்த்ரா டெக் நிறுவன HR பெண்ணும் அந்நிறுவனத்தின் ஊழியரும் பேசும் ஆடியோவை கேட்டிருப்பீர்கள்.

மாலையில் அவ்வூழியரிடம் பேசும் அப்பெண் “நாளை காலை 10 மணிக்குள் நீங்களாகவே பணியை ராஜினாமா செய்யவேண்டும், இல்லையேல் நாங்கள் உங்களை நீக்கிவிடுவோம்” என்கிறார். ரெண்டும் ஒன்றுதானே என்பதுபோல் தெரியும். அவர்கள் நீக்கினால் வேறெங்கும் வேலைக்கு சேர முடியாது. அதாவது அந்நிறுவனம் இவரை நீக்கிவிட்டு வேலை பார்த்தமைக்கு சான்று எதுவும் தராது. மூன்றரை வருடமாக அவர் எங்கோ வேலை செய்த மாதிரி பொய்க்கணக்கு காட்ட வேண்டி வரும். அதுவும் நாளை சிக்கலை உண்டு பண்ணும்.

ஊழியர் அப்பெண்ணிடம் பேசுவதை கேட்கையில் வேதனையாக இருக்கிறது. கெஞ்சுகிறார். மேலதிகாரி வேறு யாரிடமாவது நான் பேசுகிறேனே என்கிறார். தன் வீட்டில் போய் எப்படி இதை நான் சொல்வேன் என கேட்கிறார். நமக்கு அழுகை வருகிறது.

அவ்வூழியரின் மனநிலைதான் இன்று பெரும்பாண்மை இந்திய கார்ப்பொரேட் தனியார்துறை ஊழியர்களின் மனநிலை. விரக்தி. கோபம், நம்பிக்கையின்மை, கையறுநிலையின் மொத்த மனநிலை. செல்லாக்காசு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி அறிவிற்கு பிறகு பெருவாரியான நிறுவங்கள் தங்கள் செலவினங்களை குறைக்க தொடங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு முன்னரே, அந்த அறிவிப்பே எச்சரிக்கையை அளித்து முன்நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளது என கொள்க). 

Cost Control, Cost Optimization போன்ற சொல்லாடல்கள் பயமுறுத்துகின்றன. 
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மட்டும் Frontline பணியாளர்கள் என்பதாயிரம் பேர் வேலையில்லாமல் துரத்தப்பட்டு இருக்கிறார்கள். அதிகமாய் சம்பளம் பெற்ற ஐடி ஊழியர்களுக்கு அடுத்த படிநிலையில் இருந்தவர்கள் இவர்கள். அது தவிர ஐடி சார்பு நிறுவனங்கள், FMCG, சேவை நிறுவனங்களில் துரத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு.

நவுக்ரி, மான்ஸ்டர், டைம்ஸ் ஜாப்ஸ் மற்றும் இதர கன்சல்டன்சிகளின் மூலம் வரும் அழைப்புகள் குறைந்து போய்விட்டது.


தற்போதைய சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. Recession போலவோ என்று பயமாய் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை தன் இயல்புக்கு மீறிய முகத்தை காட்டத் துவங்கியிருக்கிறது. விரைவில் தன் அகோர முகத்தையும் அது காட்டும்.
கிடைத்தவரை லாபமென தப்பித்துகொண்டு சிறு நிறுவனங்கள் தம்மை பெறு நிறுவனங்களோடு இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. அதில் ஏற்படும் குளறுபடியில் இன்னும் எண்ணற்றோர் வெளியேறக்கூடும்.

ஐந்து வருடம் முன்பு சென்னையில் அமர்ந்துகொண்டு நான் பலரிடம் சொன்ன டயலாக் இதுதான் “தம்பி. டிகிரி முடிச்சியா? நீ பத்தாயிரம் சம்பளத்துக்கு ரெடியாயிட்ட. உன் கேரீர் ஸ்டார்ட் பண்ண டிகிரிதான் கேரண்டி.”.  இப்போது நான் என் ஆள்காட்டி விரலை என் முகத்தை காட்டி திருப்பி காட்டுகிறேன். ”சொன்னியா? சொன்னியா?” என. இப்போது முன் அனுபவத்தை வைத்துக்கொண்டே வேலை தேட முடியாது. சிரமம். கடைசியாக பெற்ற சம்பளத்தை தாவென்றோ?, 20% ஹைக் வேண்டுமென்றோ? பேரம் பேச முடியாது. அந்த காலம் எப்போதோ மலையேறிவிட்டது.

பாரதத்தின் பெருமைதன்னை பாடுவோம்! பசி மறப்போம்! மோடி வாழ்க!


#ஜெய்ஹிந்த் #டிஜிட்டல்_இந்தியா

No comments:

Post a Comment