Monday 16 April 2018

கருப்புக் கொடியும் காவி வீரரும்


சமீப காலங்களில் எப்போதும் கண்டிராத ஒரு மிகப்பெரிய தன்னெழுச்சியை தமிழகம் கடந்த 12ம் தேதி கண்டிருக்கிறது. மத்திய மோடி அரசுக்கெதிரான கருப்புக்கொடி காட்டும் கருப்பு தினம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது எனலாம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, உள்நாட்டு உற்பத்தி என அனைத்திலும் முன்னேறிய மாநிலத்தில் போராட்டமும், புரட்சியும் சாத்தியமில்லை என்பதை பொய்ப்பித்து தமிழகம் அதில் விதிவிலக்கு என நிரூபித்து இருக்கிறது.

சமீபத்தில் நாம் கண்ட மக்கள் எழுச்சி என்பது ஜல்லிக்கட்டு போராட்டம், நீட்டுக்கு எதிரான அனிதாவின் மரணம், அதற்கு பிறகு தற்போது நடந்தேறிய காவிரிப் பிரச்சனை தொடர்பான எழுச்சி. ஜல்லிக்கட்டு போராட்டம் மாநில அரசின் முழு ஒத்துழைப்பால் நடந்தேறிய ஒன்று. அரசு அப்போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது ஒரு சில நிமிடங்களில் அப்போராட்டம் ஒடுக்கப்பட்டது.  அனிதாவின் மரணத்திற்கு பிறகு உணர்ச்சி கொந்தளிப்பில் ஒரு ஒருமித்த குரல் எழுந்தது. எழுந்த வேகத்தில் அது மறைந்தது. இப்போது அரசே நீட் பயிற்சியை நடத்துகிறது திமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் அதை எதிர்க்கவில்லை. ஆனால் தற்போது நடந்தேறிய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் வலிமையாகவும், நேர்த்தியாகவும் நடந்தேறிய புரட்சி என கூறலாம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்லி ஆறு வார கால கெடுவோடு நீதிமன்றம் உத்தரவிட்டது. பரீட்சைக்கு படிக்காமல் கடைசி நேரத்தில் பிட்டு பேப்பரை கிழித்துகொண்டு போகும் மக்கு மாணவனை போல் கடைசி நாளில் போய் அருஞ்சொற்பொருள், பொழிப்புரை, தெளிவுரை கேட்கிற அதிமேதாவி மத்திய அரசை நாம் பெற்றிருக்கிறோம். விழிப்புணர்வு உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் மேலாண்மை வாரியம் அமைக்க தற்சமயம் யாரிடம் பொறுப்பும் அதிகாரமும் இருக்கிறதென. விழிக்காது, வேண்டுமென்றே தூங்குபவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. காவிரியில் அபரிதமாய் தண்ணீர் வருகையில் சிம்பு ஸ்டைலில் ஒரு டம்ளர் தண்ணீரை அள்ளித் தெளித்து அவர்களை தெளிய வைப்போம்.

சரி! விழிப்புணர்வு பெற்றவர்கள் எல்லோரும் போராடுகிறார்களா என்றால் ஆம்! போராடுகிறார்கள் என்பதுதான் என் பதில். அவரவருக்கு தெரிந்த வகையில் அவர்கள் போராடுகிறார்கள். டீக்கடையில் நின்றுகொண்டு காவிரி பிரச்சனையை பற்றி நான்கு பேரிடம் கமெண்ட் அடிப்பவனும் போராளிதான். மறுப்பதற்கில்லை. பொதுவாகவே சிலரது போராட்டம் பக்குவப்பட்டதாகவும், சிலரது போராட்டம் அறிவுபூர்வமானதாகவும், சிலரது போராட்டம் கவனத்தை விரைவில் ஈர்க்கும் வகையிலும், சிலரது போராட்டம் சிறுபிள்ளைத்தனமாகவும், சிலரது போராட்டம் உணர்ச்சி பூர்வமாகவும்,  சிலரது போராட்டம் கொடூரமான காமெடியாகவும் இருக்கும். இருந்தது.

களத்திலும், சமூக ஊடகங்களிலும், வலைதளங்களிலும் பல வழிகளில் முன்னெடுக்கப்படும் தற்கால போராட்டங்கள் முன்னெப்போதையும் விடவும் வலிமையானவையாகவும், வீரியம் மிகுந்தவையாகவும் மாறிவிடுகின்றன.

ஐபில் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பு
உள்ளபடியே ஐபில் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சில அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பெருமளவு கவனத்தை ஈர்த்தாலும் அது எதிர்மறையான கவன ஈர்ப்பாகவும், முகஞ்சுழிப்பையுமே ஏற்படுத்தியது. நாங்கள் போராடுகிறோம், நீங்கள் எங்களோடு நிற்காமல் கிரிக்கெட் பார்க்க போகிறீர்களா? என நம் மக்களையே எதிரியாக்கி அவர்களோடு சண்டையிட்டுக்கொண்ட போராட்டம் அது. மைதானத்திற்கு உள்ளே சென்ற நாம் தமிழர் கட்சியினர் யாரோ வெளிநாட்டு கிரிக்கெட் வீரருக்கு ஒரு ஜோடி செருப்பை பரிசாக தூக்கி விசிவிட்டு வந்த காட்சி அருவெறுப்பை உண்டு பண்ணியது. நமக்கு யார் எதிரி, யாருக்கு எதிராக நாம் காட்டமாக யுக்திகளை வகுக்கவேண்டும் என்ற புரிதலற்றவர்களின் தலைமையில் உருவான போராட்டம் அது. அந்த போராட்டத்தை யார் யார், எந்தெந்த கட்சிகள் முன்னெடுத்தன என்பதை குறிப்பிட்டு சொல்லாமல் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பேசும் பேச்சை கவனியுங்கள். ’நாங்கள் மட்டும் போராடுகிறோம், நீங்கள் எங்களோடு கைகோர்க்க மறுக்கிறீர்கள், நீங்கள் ஏன் மகிழ்ச்சியை கொண்டாடுகிறீர்கள் என தங்கள் விரக்தியை காட்டுவது, மற்றவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது, தமிழன் ஒன்று சேர மறுக்கிறான் என்று சொல்லும் சீமான், அமீர் போன்றவர்கள் பிரதான எதிர்கட்சிகளோடு ஒன்றுசேர்ந்து போராடாமல், அவர்களை எல்லாவற்றிற்கும் குற்றம் சாட்டி கொண்டே இருப்பது, அவர்கள் மட்டுமே புரட்சிக்கு குத்தகைதாரர்கள் போல இயங்குவது என ஒரு தான் தோன்றித்தனம் தெரிகிறது.

மக்கள் வாழ்வுரிமை கட்சியினர் டோல்கேட்டை உடைத்தபோது பலரும் அச்செயலை பாராட்டினர். உணர்ச்சி கொந்தளிப்பில் நிகழ்ந்த அச்செயல் நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அதன்பின் நிதானமான முறையில் ஐபில் எதிர்ப்பை காட்டிய அக்கட்சியனரை விட்டுவிடலாம். ரஜினியின் புதிய கட்சியை சேர்ந்தவர்களின் எதிர்ப்பும் கூட பெரிதாக கவனிக்கப்படவில்லையே தவிர மெச்சக்கூடியதுதான். ஆனால் நாம் தமிழர் மாதிரியான ஃபாசிஸ்டுகள் அரங்கேற்றிய வன்முறையான நம் மக்களையே அடிப்பது, சட்டையை கழட்ட சொல்வதெல்லாம் உச்சபட்ச பைத்தியக்காரத்தனம். வீசிய செருப்பை ஒரு வெளிநாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் எடுத்து பார்த்தபோது நாம் வெட்கிப்போனோம். கூச்சமாக இருந்தது.

சிம்பு எனும் சிரிப்பு வெடி
சிம்புவுடன் ரஜினி, கமலையும் இந்த சிரிப்பு வெடியில் நாம் சேர்த்து கொள்ளலாம். வெறுமனே அறிக்கையை (வெற்று அறிக்கை) மட்டும் கொடுத்துவிட்டு அவர்களை சார்ந்தவர்களை உசுப்பேற்றிவிட்டு தாம் போய் வீட்டுக்குள் பதுங்கி கொள்வது என்ன வகை நாகரீகமான யுக்தியென தெரியவில்லை. தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மத்திய அரசு. எனவே இப்போது மத்திய அரசை வலியுறுத்துவது என்பது நீண்ட கால போராட்டத்திற்கு பிறகான இறுதி கட்டம். இதை பற்றிய அறிவுகூட கிஞ்சித்தும் இல்லாமல் கர்நாடக மக்கள் எல்லாம் கூட்டமாக  சென்று அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதுபோல டம்ளர் தண்ணியை கேட்டு வாங்கி குடிக்கும் புரட்சி என்பது சிம்புவின் உச்சபட்ச காமெடி. அதில்கூட சிம்பு போய் கேட்டு வாங்கி குடிக்க மாட்டார் போல. யாராவது வாங்கி குடித்துவிட்டு அதை வீடியோவாக ஹேஸ்டாக் போட்டு இணையத்தில் பதிவேற்ற வேண்டுமாம். இந்த போராட்டத்தை பீப் சாங் அளவுக்கு தரப்படுத்தியிருக்கும் அவரது அறிவை மெச்சுவோம். கூடுதலாக அவரது அப்பா டிஆரின் ப்ரேயர் சாங் வேறு.  இரவு பணிரெண்டு மணிக்கு லைட் போடுவது, மெழுகுவர்த்தி ஏந்த்துவது, மொபைல் டார்ச் புரட்சி வரிசையில் இது சிம்புவின் ஒரு புதுவகையான கண்டுபிடிப்பு. தமிழகம் இதையெல்லாம் காணவேண்டிய கொடுமையிருக்கிறதே, பாவமய்யா நம் மக்கள்.

கருப்புக்கொடியும் கருஞ்சட்டை படையும்.
நம்மூரில் கருப்பு எதை குறிக்கிற நிறம் என யருக்கும் புதிதாக போய் சொல்லிக்கொடுக்க வேண்டாம். இயற்கையாகவே அவரவருக்கு புரிதல் உண்டு. ஆதிக்கத்துக்கு எதிரான நிறம் அது. உலகமெலாம் கருப்புக்கொடி ஏந்தி, கருஞ்சட்டை, கருப்பு பட்டை அணிந்து போராட்டங்கள் நடந்திருந்தாலும் இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் அமங்களமான கருப்பை எதிர்ப்பின் நிறமாக மிகப் பிரபலப்படுத்தியது தந்தை பெரியார் அவர்கள் தான். அவர் இயக்கக் கொடியே பெரும்பாண்மையாக கருப்புதானே? எண்ணற்ற போராட்டங்களை அவர் கருப்புகொடி காட்டி நடத்திக் காட்டியிருக்கிறார்.

கலைஞர் அவர்கள் பெரியாரை பற்றி குறிப்பிடுகையில் .ரா சொன்னதை நினைவுபடுத்தி பெரியார் நாத்திகரா? இல்லையில்லை. அவர் இயற்கையின் புதல்வர். இந்த மண்ணை மனந்த மனாளன். எதிர்கால தமிழகத்து பெருமைக்கு தூதர்என சொல்வார்.

இந்த போராட்டத்தில் பெரியாரையா பின்பற்றியது தமிழகம் என்றால் ஆமாம் ஆனால் இல்லை எனலாம். மரம் செடி கொடி, காய், தண்ணீர் என இயற்கையின் அத்துனை செல்வங்களையும் நாம் அனுபவித்து கொண்டுதான் உள்ளோம். இயற்கையிடம் இருந்து அவ்வளவையும் நாம் பெற்றாலும் இயற்கையை நாம் வணங்குவதில்லை. நன்றி பாராட்டுவதில்லை. கலைஞர் அவர்களின் கூற்றின் படி பெரியார் இயற்கையின் புதல்வர். அவர் தன்முனைப்பாக ஒவ்வொருவர் நெஞ்சிலும் பதிந்து விட்டார். அவரை தொழுது வணங்கி அவர் பெருமை பேச வேண்டியதில்லை. அவரை பின்பற்றுவதென்பதுதான் முக்கியம். தமிழகம் தன் எதிர்ப்பை எவ்வாறு பதிவு செய்தது என்பதிலிருந்து நாம் அதனை அறிந்து கொள்ளலாம். ஆதிக்கத்திற்கு எதிராக, அறப்போர், சொற்போர், வலைப்போர் புரிந்து அடித்து விரட்டியது மோடியை. பயந்து பதுங்கி போன இந்திய பிரதமரை நாம் இப்போதுதான் கண்டுற்றோம்.

இதற்கு முன் கருப்புகொடி போராட்டங்கள் பிரதமரை எதிர்த்து பலமுறை நடந்துள்ளது. ஏன்? பிரிட்டிஷ் ஆட்சியிலேயே கருப்புக்கொடி போராட்டம் நடந்துள்ளது. இரட்டை ஆட்சிமுறை சம்பந்தமாக அமைக்கப்பட்ட சைமன் கமிசனை எதிர்த்து ”#சைமனே_திரும்பிப்_போஎன காந்தியார் அறிவுறுத்தி பெரும்போராட்டம் காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டது. சைமன் குழு சாலையெங்கும் கருப்புக்கொடியை எதிர்கொண்டது. பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் நேருவின் இந்தித் திணிப்பு அறிவிப்பை எதிர்த்து இராஜாஜி தமிழகம் வந்தபோது பெரியார் தலைமையில் கருப்புக்கொடி அவரை வரவேற்றது. ”வேவு_பார்க்க_வரும்_இராஜியே_திரும்பிப்_போஎன்றது திராவிடர் கழகம்.

அதன் பின் பெரியார் வழிவந்த அண்ணா தலைமையிலான திமுக மத்திய அரசுக்கு எதிராக பலமுறை கருப்புக்கொடி எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.  முதன் முதலில் ஒரு பிரதமருக்கு எதிராக நேருவுக்கு திமுக கருப்புகொடி காட்டியது குறிப்பிடத்தக்கது. நிதானமான தலைவரான நேரு கொஞ்சம் காட்டமாகவே அப்போது பெரியாரை விமர்சித்திருந்தார். அதை எதிர்த்து திமுக பெருமளவில் கொந்தளித்தது. 1958ல் தடையுத்தரவையும் மீறி நேருவுக்கு கருப்புக்கொடி காட்டினர் திமுகவினர். வரலாற்றில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டம் அது.

கவர்னர் ஜெனரல், குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், பிரதமர்கள் என கருப்புக்கொடி காட்டி தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவது, அரசின் கொள்கைக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்வது இங்கு வழக்கமாகி போனது.

காங்கிரசும் கருப்புக்கொடி காட்டியது. முன்னர் தாங்கள் அனுபவித்த கருப்பு வெம்மைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத கலைஞருக்கு எதிராக அவர் செல்லுமிடமெல்லாம் காங்கிரஸ் ஒருமுறை கருப்பு கொடி காட்டியது சுவாரசியமானது. அதுவும் இந்திரா காங்கிரஸ் மட்டுமே அதில் பங்குகொண்டது கூடுதல் சுவாரசியம். அதுபோலவே 1977ல் இந்திரா காந்திக்கு எதிராக அவர் நெருக்கடி நிலையை கைகொண்ட விதத்தை எதிர்த்தும், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பதில் சொல்லும் விதமாகவும் கருப்பு கொடி காட்டியது திமுக. மதுரையில் அது வன்முறையாகவும் வெடித்தது. இந்திராகாந்தி அவர்களுக்கு தலையில் காயம் ஏற்படும் அளவுக்கு அந்த போராட்டம் கடுமை கண்டது. திமுக தலைவர்கள் மீது பல வழக்குகள் பதிவானது. அதற்கு பிறகு மிகப்பெரிய அளவிலான கருப்புக்கொடி போராட்டங்கள் ஏதும் தமிழகத்தில் நடைபெறவில்லை எனலாம்.

நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது ஏப்ரல் 12ம் தேதி நடைபெற்ற கருப்பு கொடி போராட்டம்தான் மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது #திரும்பி_போ_மோடி. ஆனாலும் எந்த ஒரு பிரதமரும், குடியரசு தலைவரும் கருப்புக்கொடி காட்டுவதை எதிர்கொள்ளாமல் பயந்து ஒதுங்கியதில்லை. மக்களின் எதிர்ப்பை துணிச்சலாக எதிர்கொண்டனர். வரலாற்றில் மோடி ஒருவர் மட்டுமே பயந்து, ஒளிந்து சந்துக்குள் சாலை அமைத்து தமிழகம் வந்து போனார்.

பிரமருக்கு எதிரான போராட்டம் நியாயமானதா?
திமுக தலைமையிலான பல கட்சிகள் இணைந்து முன்னெடுத்த போராட்டமென்பது சிலருக்கு மிகவும் மொக்கையாக, சுவாரசியமற்றதாக தெரிந்திருக்கலாம். ஆனால் அதை நடத்துகிற கட்சிகள் அனைத்தும் மொக்கையான கட்சிகள் அல்ல. வலிமை பொருந்திய, அடிப்படை கட்டமைப்பு பொருந்திய அமைப்புகள். பல போராட்ட களங்களை கண்ட அமைப்புகள். புதுப்புது யுக்திகள் மூலம் போராட்டங்கள் நடத்திய இயக்கங்கள். காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு என ஒவ்வொரு இயக்கத்தையும் தனித்தனியாக நாம் குறிக்கிற போதே அவ்வியக்கங்களின் போராட்டங்களும், தியாகங்களும் நம் கண் முன்னே விரியும்.

இன்றைக்கு நடைமுறையில் உள்ள மக்களுக்கான பல சட்டங்கள், அரசு திட்டங்கள் அனைத்தும் இந்த இயக்கங்களின் போராட்டங்களினாலும், உழைப்பினாலும் நமக்கு கிடைத்தவை என்பதை மறுப்பதற்கு இயலாது. ஆக சேர்ந்து கருத்தாலும் கொள்கையாலும் மாறுபட்டாலும் அனைவரும் ஒன்று கூடி பிரச்சனையின் அடிப்படையில் மக்களுக்காக, மாநில உரிமைக்காக ஒன்று கூடி தேர் இழுப்பது என்பது ஜனநாயக அமைப்பில் உன்னதமான வழிமுறையாகும்.

மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து.” என அண்ணா சொன்னதை போல மக்களை போய் நேரில் சந்தித்து, அவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை வலிமையாக்கியுள்ளது ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி தலைவர்களின் காவிரி மீட்பு பயணம்.

காவிரி மீட்பு பயணம் என்பது பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களை நேரில் சந்தித்து, பிரச்சனையின் தீவிரத்தை உணரச்செய்து, அவர்களது ஆதரவை பெற்று போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் யுக்தியாகும். மக்களை இணைக்காது மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்த இயக்கங்கள் இவை. இந்த பயணப்போராட்டத்தில் உள்ள எந்த கட்சித் தலைவரும் மக்களை திட்டவில்லை. அவர்களோடு பயணிக்காத மக்களை வசைபாடவில்லை. உடன்படாத இளைஞர்களை அடிக்கவில்லை. அவர்களுக்கு சரியென பட்டதை காவிரி மீட்பு பயணமென முன்னெடுக்க, ஒத்துழைத்த மக்களை இணைத்துகொண்டு இன்னும் முன்னேறினர்.

வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று இறுதியாக தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் யாரையும் நிராகரிக்கவில்லை. அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் பங்கு கொண்டனர். யாரையும் கட்டாயப்படுத்தாமல் அனைவரும் தன்னெழுச்சியாக கலந்து கொண்டதை அனைவரும் கண்டோம். சாலையில் அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி வந்தனர் என்றால்; வீதியில் கருப்புச்சட்டை அணிந்து சாமானிய மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருந்த காட்சிகள் நிறைந்திருந்தது. சமூக ஊடகங்கள் முழுதும் கருப்பாக நிறம் மறியிருந்தது.

நெஞ்சுரம் 56இன்ச் கொண்ட மோடி திணறிப்போனார். மோடியை கண்டால் பாகிஸ்தான் பதறுகிறது, சீனா சிதறுகிறது என்றெல்லாம் இட்டுக்கட்டிய காலம் போய் வெறும் கருப்பை கண்டு கதறினார் மோடி. இல்லாவிட்டால் சாலையில் செல்லாமல் ஆகாயத்திலா செல்வார். அவர் பதுங்கியது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி. இன்றுவரை அவர் தமிழக பயணம் குறித்து பேசவே இல்லை. இன்னும் இன்னிலை நீடித்து இன்னொருமுறை அவர் தமிழகத்திற்கு வருவதாக இருந்தால் பூமிக்குள் புதைந்தோ? அல்லது கடல் மார்க்கமாகத்தான் வரவேண்டியிருக்கும். ஏனெனில் ஹெலிகாப்டரை தொடும் தூரத்திற்கு பலூனை அனுப்பி அவரை படுத்திவிட்டது தமிழகம்.

மோடியை கூட கர்நாடக தேர்தல் பிடித்து ஆட்டுகிறது. விடுங்கள். இந்த தமிழகத்து பாஜக பெருந்தலைவர்கள் இன்னும் கூட சுரணையற்று கிடக்கிறார்கள். எருமை மேய்ப்பவனுக்கு அவன் பெருமையே பிரதானம் என்பதுபோல எச்.ராஜா சொல்கிறார் இப்போதும் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் மோடிதான் நம்பர் ஒண்ணாம். அவர் பண்பாட்டில் கருப்பு மங்களகரமானதாம் எனவே மோடியை கருப்பு ஒன்றும் செய்யாதாம்.

அவர் பாணியிலேயே அவரிடம் சொல்லிக்கொள்வோம். சனிபகவானுக்கு உகந்த நிறம் கருப்பு. சனி உச்சத்தில் இருந்தாலே கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழகத்து கருப்பு இப்போது உக்கிரத்தில் இருக்கிறது. மாநில உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து மத்திய அரசு நடந்து கொண்டிருந்தால் அது ஜென்மச்சனியாக மாறுவிடுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

விரைவில் காவிரி மேலாண்மை அமைக்கவேண்டியது அவர்களது கடமை மட்டுமல்ல காலத்தின் கட்டாயம்.

http://poombuhar.com/?p=459


No comments:

Post a Comment