Saturday 16 May 2020

இப்போதாவது கை கழுவுங்கள்.! ராம்போ மனநிலையை.!

சிறு வயதில் Rambo படம் பார்த்துவிட்டு நானும் என் தம்பியும் ”ராம்போ தான்டா இந்த உலகத்திலேயே அனைவரையும் வெல்லக்கூடிய சக்தி படைத்தவன்” என்று உண்மையிலேயே நம்பினோம். சில்வஸ்டர் ஸ்டாலோன்-லாம் அப்போது தெரியாது. ராம்போதான்.
அதற்கு முன் எங்கள் தர வரிசையில் ரஜினி-1, கமல்-2, விஜயகாந்த்-3, அர்ஜுன்-4.... என்று வகைப்படுத்தி வைத்திருந்தோம். அப்போதுதான் ஒரு படம் வந்தது. அதில் வந்தவர் வித்தியாசமாக சண்டை போட்டார், அதுவும் நிறைய பேசினார். பேசிக்கொண்டே எதிரிகளை புரட்டி எடுத்தார். உடம்பும் மற்றவர்களை காட்டிலும் கொஞ்சம் பூசினாற்போல இருந்தது. "யார்றா இவன். தாடி எல்லாம் வச்சு காட்டானா இருக்கான். செம அடி அடிக்கான்" என்று அவனை கண்டு மிரண்டு சற்று எங்கள் கொஞ்ச காலத்திற்கு தரவரிசையை மாற்றி போட்டோம்.
டி.ராஜேந்தர் தாண்டா உலகத்திலேயே ஸ்ட்ராங். அவனை அடிக்க யாராலயும் முடியாது என்று நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தபோது தான் என் அப்பா மதுரை தங்கம் தியேட்டரில் ராம்போ படத்துக்கு அழைத்து சென்றிருந்தார்.
அது RAMBO First Blood part II.
மிஷின் கண் சகிதம், ராம்போவின் உடற்கட்டு, ஆர்ம்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு அதிர்ந்து போனோம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த மறுகணம் டி.ராஜேந்திரை டிஸ்மிஸ் செய்தோம். பின்னர் ஏதோ ஒரு நாள் ஜாக்கியை பார்த்துவிட்டு மாடியில் இருந்து குதித்து காலுடைந்து போனோம்.
இதுபோல அந்த பதின்ம வயதில் யாரொவர் செய்யும் ஆக்ரோஷம் நிறைந்த சாகசங்கள் நமக்குள் பிடித்துப்போகும். ஆனாலும் வயதும், அறிவும் நமக்கு சில உண்மைகளை மெதுவாக விளக்கும்.
இப்போது எனக்கு சண்டை படங்களே பிடிப்பதில்லை. சாதாரண குடும்ப கதைகளில் வரும் சண்டை காட்சிகள் கூட நொடியில் அலுத்துவிடும். ”சண்டையை ஓரங்கட்டி வச்சுட்டு பேசுங்கடா!” என்று உள்ளுக்குள் வசைபாடுவேன்.
ஆனால் அந்த வயதில் அப்படியில்லை. அவரவர் மனதில் அவரவருக்கான பல ஹீரோக்கள். சூடேறும். வயது ஏற ஏற கொஞ்சம் மெச்சூரிட்டி வந்துடும். எனக்கு கொஞ்சம் முன்னமே வந்துருச்சு என்பேன். 11வது படிக்கிறபோது என் தம்பியை ஒருவன் அடித்துவிட, நான் அவனை திருப்பி அடித்துவிட்டேன். பின்னாடியே அவன் அண்ணன் என்னை அடிக்க வர நான் அவனிடம் தப்பிக்க 1 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசினேன்..பேசினேன்..பேசினேன். விருட்டென்று எழுந்த அவன் ”இப்ப என்னடா பண்ணச் சொல்ற? விசு மாதிரி நொய் நொய்னு பேசுற” என பொசுக்கென்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அதுமுதல் எல்லா பிரச்சனைக்கும் பேச்சுதான். கல்லூரியில் ஒரு தகராறில் இரு தரப்பினரை சமாதானம் செய்து வைக்கப்போய் நான் புறா பிரியாணி ஆன கதையெல்லாம் கூட உண்டு. கல்லூரி நண்பர்கள் என்னை “பெருசு! கல்யாணம் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்ல எப்படி.? வெறும் பேச்சுதானா?” என்று கூட கிண்டலடிப்பதுண்டு.
இப்போது அப்படியில்லை. பேச்சையும் குறைத்துவிட்டேன். நிறையவே ரிசர்வ் கூட ஆகிவிட்டேன். என்னை காட்டிலும் திறமையும் அறிவுமுள்ள பலரை சந்தித்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் கிட்டத்தட்ட Inferior ஆகிவிட்டேன். இப்போதும் கூட சண்டையில், வன்முறையில் எனக்கு விருப்பமே இல்லை. ”பேசிக்கலாம்” என்பது எத்தனை அறிவு பூர்வமான அணுகுமுறை. யாருக்கும் இழப்பில்லை.
என்னுடன் பணியாற்றிய தம்பி ஒருவர் ஒசாமா பின் லேடன் குறித்த வீரக்கதைகளை அடிக்கடி சொல்லி என்னை கிலிப்படுத்துவார். ஆஃப்கனில் ஒரு சிறுவன் லாஞ்சர் மூலம் மேலே செல்லும் விமானத்தை தாக்குகிற ஒரு காணொளியை காட்டி பெருமிதம் கொள்வார். எனக்கு அது பெருமிதமாக இருந்ததே இல்லை. அந்த லாஞ்சர் சிறுவனின் சிவந்த கன்னத்தை நான் தொட்டு பார்க்க வேண்டுமே என்ற ஆவல்தான் அப்போது மேலிட்டதேயன்றி அந்த சாகசம் பெரிதாக படவில்லை. பின்னர் ஆஃப்கனில் ஒசாமாவுக்கு நடந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த தம்பிக்கு நடந்ததை பிறகு சொல்கிறேன்.
விசயத்துக்கு வருகிறேன்.
நமக்கு தெரிந்த வீரர் ஒருவருண்டு. அவரை பற்றி பேசாத ஆளில்லை. அதில் நிறைய பேர் அவரோடு உடனிருந்து, உடன்பட்டு, பயணபட்டு, போராடி, தியாகம் பல புரிந்து அவரவர்க்கு ஒரு வரலாறு & கதை வைத்திருக்கிற மனிதர்கள். உண்மை கதைதான். ஆனாலும் பல உண்மைகளை மறைத்த கதையும் அது.
இப்போதிருக்கிற பிள்ளைகளுக்கு அவரை பற்றிய வீர தீர துப்பாக்கி சாகசங்கள் கதை கதையாக ஊட்டப்படுகிறது. அவர்கள், அதை எழுதி வைத்த புத்தகங்களில், சில காணொளி காட்சிகளில் பார்த்து ரசிக்கிறார்கள்.
அடுத்து..
ரசிக மனது தானே.? வழக்கம் போல கொண்டாட ஆரம்பித்து விடுகிறது. தலைவனாக்கி அழகு பார்க்கிறது. அதில் ஏதும் தவறில்லை தான்.
ஆனால் அந்த வெற்றி வீரராக பட்டவர் இப்பிள்ளைகள் மனதுக்குள் நுழைந்த மாதிரி, இவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு தருணத்திலும் நுழைந்தவர் இல்லை.. இவர்களின் தாய் தந்தையர் வாழ்க்கையை அந்த வீரர் மாற்றி அமைத்தாரா? இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை பெறுக்கிட ஏதும் செய்தாரா? இல்லை. இவர்களது கல்விக்கும், வாழ்வின் ஏற்றத்திற்கும் ஏதும் வழி காட்டினாரா? அதுவுமில்லை. தனக்கு பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டத்திற்கும், இவர்களில் பலரது வங்கி கணக்கில் மாத கடைசியில் விழும் ஐந்திலக்க வரும்படிக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவினாரா? எதுவுமில்லை. அவ்வாறு ஏதாவது நடந்து இருந்தால் யாராக இருந்தாலும் சொல்லலாம்.
ஆனாலும் அவர் சினிமா ராம்போ போல, ரஜினி போல அல்லது உண்மையான புரட்சி வீரன் பிடல் காஸ்ட்ரோ போல இவர்கள் மனதுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். ஒரு மாவீரராக, தலைவனாக.!
அந்த வீரர் யாரென பிறகு சொல்கிறேன்.
நாம் பிடல் காஸ்ட்ரோவுக்கு வருவோம். தமிழ்நாட்டில் பிடல் பற்றி எல்லோருக்கும் கொஞ்சம் தெரியுமென்றாலும் கூட இங்கு அவருடைய தோஸ்த் சே குவாரா-வைத்தான் அதிகம் தெரியும். அதாவது அவரவர் டீ.சர்டில் படமாக இருப்பது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியும். அவ்வளவுதான் தெரியும். அவரை படித்திருக்கிறார்களா? அவர் வரலாற்றை அறிந்து வைத்திருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இருக்காது. ஆனால் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி இவர்களுக்கு பிடிக்கும். பிடலும் சேவும் கம்யூனிஸ்ட் எனில் நம் டிசர்ட்-காரர் நெற்றியில் திலமிட்டு வெற்றிவேல் வீரவேல் என ஜாதி மாநாடு கூட்டுபவராக இருப்பார். அவ்வளவு முற்போக்கு. பேசுவதெல்லாம் தற்சார்பு, சட்டையில் IMPORTED தலைவர்.
ஆக! இதெல்லாம் ராம்போ மனநிலையின் தொடர்ச்சிதான். அது ஒரு வெளிக்காட்ட இயலாத உள்ளுணர்வு. சிறு வயதிலிருந்தே மூளைக்குள் டிடெர்ஜெண்ட் செய்யப்பட்டது. வாசிங் மெஷினே கூட ரிப்பேராகி உடைப்பட்டு போனாலும், டிடெர்ஜெண்ட் ஒட்டிக்கொண்டிருக்கும்.
ஆக! ராம்போ, வீரர், சே போன்றோர்களை பலரும் தங்கள் அமானுஷ்ய கனவுகளுக்கு நாயகனாக வரித்துக்கொண்டு வாழ்கிறார்கள். மேற்படி கதாநாயகர்கள் எப்போதாவது நேரில் நம்மோடு நம் வாழ்க்கையில் கலந்து நமக்கு உதவியாக, நமக்கு நல்லது செய்தார்களா? செய்வார்களா? என்றால் இல்லை. கண்டிப்பாக இல்லை. அவ்வாறாயின் அவர்களை புறந்தள்ளுவதுதானே அறிவுடைமை.
சரி! யார் தலைவர்கள்.?
சினிமாவில் முன்பாதியில் ஒடுக்கப்பட்ட கதாநாயகன் பின்பாதியில் யாரோ ஒருவரின் துணைகொண்டு வீறுகொண்டு எழுவானே அதுபோல ஒரு துணை இப்பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால் வீறு கொண்டெழுந்து நட்டப்பட்டு உட்காருவது போல் அல்லாது விவேகம் கொண்டு எழ அவர்களுக்கு அந்த துணை சொல்லித் தந்திருக்கிறது. ஒரு துணை அல்ல. பல துணைகள். வெறுமனே துணைகள் அல்ல. அவர்கள் உண்மையான தலைவர்கள்.
முன் பத்தியில் விசு மாதிரி கேள்விகள் கேட்டேனே.? மறுபடியும் கேட்கிறேன். இந்த தலைவர்கள் உங்கள் தந்தையின் பொருளாதார மேம்பாட்டிற்காக துணை புரிந்துள்ளார்களா? ஆம். ஏதாவதொரு வகையில் உங்கள் குடும்பத்திற்கு உதவியிருக்கிறார்களா? ஆம். உங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், முன்னேற்றம், வளர்ச்சி அனைத்துக்கும் துணை புரிந்திருக்கிறார்களா? ஆம். தங்களின் இழிநிலையில் இருந்து மேல்நிலைக்கு அந்த தலைவர்கள் உங்களை உயர்த்தியிருக்கிறார்களா? ஆம். எல்லாவற்றிற்கும் ஆம்.
இந்திய பெருநாட்டிலே எந்த ஒரு குடிமகனுக்கும் இல்லாத கல்வி, அறிவு வளர்ச்சி, பகுத்தறியும் தன்மை, சுயமரியாதை, சுகாதாரம் இவனுக்கு வாய்த்திருக்கிறது. அதெல்லாம் அந்த தலைவர்கள் எவ்வித கைமாறும் கருதாமல் நமக்கு தந்துவிட்டு போன நன்மைகள். உண்மையான தலைவர்கள் அவர்கள்தான்.
அப்படியெனில் இந்த பிள்ளைகள் யாருக்கு உண்மையாகவும், நன்றியுணர்வோடும் இருக்க வேண்டும்.? நன்றியுணர்வு இல்லாவிட்டாலும் கூட தன்னை ஆளாக்கிய தலைவர்களை இழிவுபடுத்தாமலாவது இருத்தல் வேண்டுமல்லவா? அப்படி இழிவு படுத்தும் நிலைக்கு இளம்பிள்ளைகள் ஏன் அப்படி ஆனார்கள்.? யார் சொல்லி? அவர்களை நன்றியுணர்வற்ற வெறும் ராம்போ ரசிக குஞ்சுகளாக யார் ஆக்குகிறார்கள்.? இந்த இளம் பிள்ளைகள் வாழ்க்கையில் அவ்வாறு யார் ஊடுறுவுகின்றனர்.?
என்னுடம் பணிபுரிந்த அந்த தம்பி ஒசாமாவை கைவிட்டபின் நாம் தமிழரை சிலாகித்தான். தன் பொருளையெல்லாம் செலவழித்தான். பின் மே 17 என்ற ஓட்டை பேருந்தில் ஏறி பாதி தூரம் போனான். பின் தன் வாழ்க்கை தொலைந்து எங்கோ தொடர்பற்று போனான். இன்று தொடர்பில் இல்லை.
இன்னபிற ரசிகக் குஞ்சுகள் நிறைய அந்த மாவீரரை ரசிக்கிறார்கள். அந்த வீரரின் பழைய வெற்றிகளை கதைத்து தள்ளுகிறார்கள். துவக்குகளையும், பீரங்கிகளையும் காணொளிகளில் கண்டு வீர வசனம் பேசுகிறார்கள். அங்குள்ள உண்மைத்தன்மை, மண், மக்கள், வரலாறு எல்லாம் இவர்கள் அறிந்திருக்கவில்லை. அட! அவர்கள் நம் மண்ணின் வரலாறையே படிப்பதில்லையே. பிறகெப்படி.? அப்படித்தான்.
நேரடியாகவே அந்த வெற்றி வீரனை சொல்லிவிடுகிறேன்.. என் பெயர் தாங்கியவர் தான். அவர் நம் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள்தான்.
பிரபாகரனை கண்டவர் விண்டிலரில்லை விண்டவர் கண்டவரில்லை. இந்த கண்டவர் விண்டிலரில் இருப்பவர்கள் எல்லாம் பெரும் மரியாதைக்குரியவர்கள். தங்கள் வாழ்வையே அவர்களுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். பின் சமீபமாக யதார்த்த நிலையை அறிந்துகொண்டு அமைதி காக்கும் குணம் உள்ளவர்கள். எல்லா நேரங்களில் அப்படி இருக்கிறார்களா என்றால் இல்லை. அதுதான் சோகம்.
பின்னவர்கள் ஒருகாலத்தில் அவர்கள் சொல்லி கேட்டவர்கள் தான். ஆனால் கை மீறி போய்விட்டார்கள். காணாமலே அளக்கும் கதை பொறுக்கிகளாக, விசம் பரப்பும் கிருமிகளாக மாறிப் போனார்கள். அந்த பாவத்துக்குதான் அவர்களும் இவர்களை தாக்குகிறார்கள். இவர்களும் வாய் மூடி கிடக்கிறார்கள்.
நம் பிள்ளைகளும் பாவம் அவர்களிடம் சிக்குண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்காக அத்தனையும் செய்த உண்மையான தலைவர்களுக்கு எதிராக அவர்கள் திருப்பட்டுள்ளார்கள்.
வெற்றியை மட்டுமே நமக்கு அள்ளி அள்ளி தந்துவிட்டு சென்று இங்கிருக்கும் தலைவர்களையும் அவர்தம் வரலாறு, கொள்கைகளை எல்லாம் சொல்லித்தருவதை விட்டுவிட்டு தோல்வியடைந்த ஒரு வீரனை பற்றிய கதை, ஒரு தத்துவம் அவர்களுக்கு ஊட்டப்படுகிறது.
இதை உடைக்க வேண்டாமா? அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டாமா? நல்வழிப் படுத்த வேண்டாமா? உன் வழி தோல்வியில் முடியும் என சொல்லித் தர வேண்டாமா? அது தோல்வியுற்றவனின் கதை. மாண்டு போனவனின் கதை என்று எச்சரிக்கை செய்ய வேண்டாமா? சண்டை செய்தால் செத்துப் போவீர்கள். பேசி பேசி அரசியல் பழகுங்கள் என நல்வழிப் படுத்த வேண்டாமா?
அதை செய்கிறவர்கள் திறம்பட செய்யும்போது ஏன் பலருக்கும் பதட்டம். இது எப்போதும் நடந்துகொண்டிருக்கு சண்டை. எப்போதாவது நின்று விடும். நாம் ஒதுங்கியிருப்போம் என இருக்கக்கூடாதா? இதில் சமீபமாக உலக யதார்த்த நிலையை அறிந்தவர்கள் ஏன் பதட்டமடைய வேண்டும்.?
அந்த நாட்டிலேயே அவர்கள் அவரை மறந்து புது வாழ்க்கைக்கு மாறி விட்ட பிறகு நாம் ஏன் இன்னும் காணாததை பிடித்து வைத்துக்கோண்டு நோக வேண்டும். நீங்கள் சொல்லத் தயங்கிய, விடுபட்டு போன கதைகளில் சிலவற்றை சொல்லி, மறுத்து, புரிய வைத்து, புத்தி புகட்டி அவர்களை இழுத்துக் கொண்டு வருபவர்களுக்கு ஏன் தேவையில்லாத அறிவுரை வழங்க வேண்டும்? ”உங்கள் வாக்கு வங்கி கவனம்!” என ஏன் மிரட்டல் விட வேண்டும்.
தக்க சமயங்களில், கைகூடி வந்த பொழுதுகளிலெல்லாம் எதிரில் நின்றுகொண்டு இதே மிரட்டலை விட்டு விட்டு இப்போது உடனிருந்தும் இதே தானா?
யாருக்கு உங்கள் அறிவுரை தேவை? யாருக்கு உண்மையை விளக்கி தெளிவுபடுத்திட வேண்டும் என்று இப்போது கூடவா உங்களுக்கு தெரியவில்லை.? இன்னும் கூடவா மூளைச்சலவை டிடெர்ஜண்ட் உங்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறது.?
கைகழுவுங்கள். ஒன்றும் குடி முழுகி விடாது. உடைத்து போடுங்கள் உண்மையை. நமக்கு நம்மை ஆளாக்கிய தலைவர்கள்தான் தேவை. எப்போதும் என்றென்றும்.
தம்பி பிரபு
8/5/2020

No comments:

Post a Comment