Saturday 16 May 2020

COVID19 - சிறு வேண்டுகோள்

வீட்டில் ஒரு பெண்மணியை என் மனைவி பணிக்கு அமர்த்தியுள்ளார். ஊரடங்கு உத்தரவிற்கு இரு நாட்களுக்கு முன்னர் (கடந்த 21 மார்ச்) தொலைபேசியில் அப்பெண்மணியை அழைத்து தற்காலிகமாக வேலைக்கு வரவேண்டாம் எனவும், நிலைமை சீரானதும், நான் அழைக்கும்போது வந்தால் போதும் எனவும் சொல்லிவிட்டேன். மறுமுனையில் லேசான மவுனம். கால் கட்டானது.
பல வீடுகளுக்கு செல்லும் அப்பெண்மணியிடமிருந்து நமக்கு எதுவும் வந்துவிடக் கூடாது & நம்மிடமிருந்து அப்பெண்மணிக்கும் எதுவும் தொற்றிவிடக்கூடாது என்ற mutual நலம், முன்னெச்சரிக்கை & பயம்தான் காரணம்.
மவுனம் கலைந்து அப்பெண்மணி நொடிகளில் என்னை அழைத்தார். "அண்ணே! இந்த மாசம் மீதமிருக்குற நாளுக்கு சம்பளம் பிடிக்க மாட்டீங்கள்ல. பையன் கல்யாணத்துக்கு சீட்டு கட்டுறேன். அதான்."
"அம்மா! நான்தானம்மா உங்களை வர வேணாம்னு சொன்னேன். சம்பளமெல்லாம் பிடிக்க மாட்டேன். எப்பவும் போல அந்த தேதியில் வாங்கிக்கங்க." என்றேன்.
"இல்லண்ணே. இப்ப எந்த வீட்டுக்கும் போகலை. என் வீட்டுக்காரர் வேணாம்னுட்டாரு. பக்கத்து வீடுன்னால உங்களுக்கு மட்டும் வரேன். கையை கால நல்லா கழுவிட்டு வந்து பாத்து கொடுக்கறேனே?" என கெஞ்சும் குரலில் கேட்டார்.
எங்கே சம்பளம் பிடிக்கப்பட்டு விடுமோ?, இந்த மாதத்தோடு வேலையை விட்டு நிறுத்தி விடுவார்களோ? என்ற பயம் இருந்தாலும், இந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி விடுப்பு எடுக்கவும் மனம் ஒப்பாது, எளிய மனிதர்களுக்கு உரிய நேர்மையுடன் "பணிக்கு வந்து, சம்பளம் பெற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லாமல் சொன்னார்.
எனக்கு சங்கடமாக போய் விட்டது. "அம்மா! ஒன்னும் பிரச்சனையில்லை. உங்க வீட்டுக்காரர் சொல்றதை கேளுங்க. எங்கயும் வெளிய போகாதீங்க. உடம்பை பாத்துக்கோங்க. சம்பளம் வந்து வாங்கிக்கங்க. கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் வாங்க" என்றேன்.
"சரிங்கண்ணே! அப்போ 1ம் தேதி வரேன்" என்று போனை உடனே கட் செய்தார்.
பதறிப்போய் மறுநொடி நான் அழைத்து "அம்மா! இது எப்போ சரியாகும்னு தெரியலை. அடுத்த மாசமா, அதுக்கு அடுத்த மாசமான்னு கூட உறுதி தெரியலை. ஒண்ணும் கவலைப் படாதீங்க. ஏப்ரல் மாசம் முழுக்க வர முடியாம போனாலும் , சம்பளத்தை பத்தி கவலைப் படாதீங்க. அந்த மாசத்துக்கும் தந்துடறேன்" என்றேன்.
இது பெரிய மனிதாபிமான மிக்க செயலோ, பெருமைப்படும் அளவுக்கான செயலோ கிஞ்சித்தும் இல்லை. எனக்கு அப்படி தோணவும் இல்லை. நான் உள்ளபடியே என்னை தான் நினைத்து கொண்டேன்.
நம் முதலாளி நமக்கு எப்படி படியளப்பாரோ? என்ற எண்ணம் வந்து போனது. அவ்வளவுதான். இப்போது முறையற்ற, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை இதுதான்.
இன்னும் கூட யாரோ ஒரு வயதான பெரியவர் ஒண்ணுக்கு ரெண்டாக டிவிஸ்50ல் மூடையை கட்டிக்கொண்டு விரைகிறார். பால்காரர் பறக்கிறார். தண்ணீர் வண்டி ஓடுகிறது. மளிகை கடையில் அண்ணாச்சி அமர்வது பெரிதல்ல. பொட்டலம் கட்டும் பையன், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும் பெண் வேலைக்கு இன்றும் வந்து போகிறார்கள்.
ஏன் வரவேண்டும்.?
வயிறுதான் காரணம். வேறென்ன?
எளிய மக்களை பற்றிய கவலை இல்லாமல், எனக்கென்ன? வந்தது என கைத்தட்ட சொல்கிற பிரதமர் இருக்கிற இந்நாட்டில் வேலைக்கு பணியாளர்களை அமர்த்தியிருக்கும் சிறு, குறு, பெரு முதலாளிகளே! உங்களுக்கு என் பணிவான வேண்டுகோள்.
1. அரசாங்கம் தானே லீவு கொடுத்திருக்கு. "வராத நாட்களுக்கு நான் சம்பளம் தரமாட்டேன்" என தயவு செய்து உங்கள் அற்ப புத்தியை உங்கள் பணியாளர்களிடம் காட்டாதீர்கள். அவர்களும் வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லை. நிலைமை ரொம்ப சீரியஸ். வந்து உங்களுக்கும் பரவிடுச்சுன்னா. அதுக்குதான்.
2. அலுவலகத்துக்கு விடுமுறை விட்டுட்டோமே!. Work from Homeனுல்லாம் சொல்றானுங்களே? அந்த மாதிரி என்ன வேலை இவனுங்களுக்கு கொடுக்குறது? வீட்டுல சும்மா இருப்பானுங்களே? சம்பளம் கொடுக்கணுமே?" என அப்பப்போ கூப்பிட்டு உங்க Profit & Loss staementஐ ஒப்பிக்காதீங்க.
3. நீங்க எப்படி சம்பளப் பணம் குடுக்குறீங்களோ? அதே மாதிரி அவங்க தங்கள் உழைப்பை உங்களுக்கு கொடுக்குறாங்க. அமைப்பு சாரா தொழில்கள்ல நேரங் காலமெல்லாம் இல்லை. நீங்க கொடுக்குறத காட்டிலும் அதிகமாதான் உங்களுக்கு அவங்க உழைச்சிருப்பாங்க. அது மட்டுமில்லாம நம்ம இந்திய பணியாளர்களுக்கே உள்ள முதலாளி விசுவாசம், மரியாதை உங்களுக்கு எக்ஸ்ட்ரா கிடைச்சிருக்கும். அதுக்கு இப்ப ஈடு தர்றதா நினைச்சுக்கோங்க.
4. அதான் ரேஷன் கடையில 1000 ரூபா தரான்ல. நாம் 1000ஐ குறைச்சு தருவோம்னு எச்சக்கலையா மாறிடாதீங்க. ப்ளீஸ்.
5. எல்லாத்துக்கும் மேல. பலரும் தங்கள் தகுதி, திறமைக்கு ஏத்த மாதிரி வேலையில் இல்லை. தங்கள் இயலாமையால தங்கள் தகுதியை குறைச்சுக்கிட்டு துறை ஈடுபாடு கருதியும் பலர் பலரிடம் பணிபுரிகிறார்கள். வாய் விட்டு சம்பளம் கேட்க துணிவில்லாதவர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களை வஞ்சிக்கிற தருணம் இதுவல்ல.
- தம்பி பிரபு
30 மார்ச் 2020

No comments:

Post a Comment